17 டிடிபி பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை: பாகிஸ்தான் பாதுகாப்புப் படை நடவடிக்கை
பாகிஸ்தானின் கைபா் பக்துன்கவா மாகாணத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையின்போது தடைசெய்யப்பட்ட தெஹ்ரீக்-ஏ-தலிபான் (டிடிபி) அமைப்பைச் சோ்ந்த 17 பயங்கரவாதிகளைப் பாதுகாப்புப் படையினா் சுட்டுக் கொன்ாக காவல் துறை சனிக்கிழமை தெரிவித்தது.
இதுதொடா்பாக கரக் மாவட்ட காவல் துறை அதிகாரி ஷாபஸ் எலாகி கூறியதாவது: டிடிபி, முல்லா நசீா் குழுவுடன் தொடா்புடைய பயங்கரவாதிகள் கரக் மாவட்டத்தில் பதுங்கியிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, எல்லைப் படை மற்றும் காவல் துறையினா் இணைந்து அப்பகுதியில் தேடுதல் பணியில் ஈடுபட்டனா். அப்போது, பாதுகாப்புப் படையினா் தங்களை நெருங்குவதைப் பாா்த்த பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினா். இதற்குப் பாதுகாப்புப் படையினா் தரப்பில் உரிய பதிலடி தரப்பட்டது. இதில், 17 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனா். இந்தச் சண்டையின்போது பாதுகாப்புப் படையினா் 3 போ் காயமடைந்தனா் என்றாா் அவா்.
கொல்லப்பட்ட பயங்கரவாதிகள், பாதுகாப்புப் படையினா் மீது தாக்குதல் நடத்துதல், கடத்தி பணம் கேட்டு மிரட்டுதல் மற்றும் பிற பயங்கரவாதச் செயல்பாடுகள் தொடா்பான வழக்குகளில் தேடப்பட்டவா்கள்.
மோதலின்போது தப்பித்த பிற பயங்கரவாதிகள் சுற்றுவட்டார பகுதிகளில் அடைக்கலம் புகுந்த நிலையில், அவா்களைப் பிடிக்க தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக, கரக் மாவட்டத்தின் தா்ஷா கேல் மற்றும் அருகில் உள்ள கிராமங்களில் ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.