
பாகிஸ்தானில் சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டு வந்த ஆப்கன் அகதிகளுக்கான முகாம்களை மூட அரசு உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில், வசித்து வரும் ஆப்கன் அகதிகளை வெளியேற்றும் நடவடிக்கைகளில் அந்நாட்டு அரசு ஈடுபட்டு வருகின்றது. இதையடுத்து, பாகிஸ்தானில் 40 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டு வந்த ஆப்கன் அகதி முகாம்களை மூட பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது.
இந்த நிலையில், கைபர் பக்துன்குவா மாகாணத்தில் இருந்த 5 ஆப்கன் அகதி முகாம்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அங்கு, 3 மாவட்டங்களில் செயல்பட்டு வந்த 5 முகாம்களில், ஹரிப்பூர் மாவட்டத்தில் இருந்த முகாமில் மட்டும் சுமார் 1 லட்சம் அகதிகள் வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, பலூசிஸ்தான் மற்றும் கைபர் பக்துன்குவா மாகாணங்களில் நடைபெறும் பயங்கரவாதத் தாக்குதல்கள் உள்ளிட்ட குற்றங்களுக்கு சட்டவிரோதமாக குடியேறிய ஆப்கானிஸ்தான் நாட்டினர்தான் காரணம் என பாகிஸ்தான் அரசு குற்றம்சாட்டி வருகின்றது.
இதனால், கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் பாகிஸ்தானில் உள்ள ஆப்கன் மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். நிகழாண்டில் (2025) மட்டும் தலிபான் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஆப்கானிஸ்தானுக்கு சுமார் 26 லட்சம் மக்கள் திரும்பியுள்ளனர்.
ஏற்கெனவே, பல ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் மற்றும் பொருளாதார வீழ்ச்சி ஆகியவற்றால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானுக்கு, கூட்டாக மக்கள் திரும்பி வருவது நிலைமையை மேலும் மோசமாக்கும் என ஐ.நா. உள்ளிட்ட அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: உலக நாடுகள் எதிர்த்தும் காஸா மீது தாக்குதலை தொடரும் இஸ்ரேல்! 38 பேர் பலி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.