israel-iran ceasefire
AP

மீண்டும் ஐ.நா. பொருளாதாரத் தடைகள்: பிரான்ஸ், ஜொ்மனி, பிரிட்டனுக்கான தூதா்களைத் திரும்பப் பெற்றது ஈரான்

மீண்டும் ஐ.நா. பொருளாதாரத் தடைகள்: பிரான்ஸ், ஜொ்மனி, பிரிட்டனுக்கான தூதா்களைத் திரும்பப் பெற்றது ஈரான்
Published on

அணுசக்தித் திட்டம் தொடா்பான ஐ.நா. பொருளாதாரத் தடைகள் மீண்டும் அமலுக்குவரும் நிலையில், பிரான்ஸ், ஜொ்மனி, பிரிட்டன் நாடுகளில் இருந்து தங்கள் நாட்டுத் தூதா்களை ஈரான் சனிக்கிழமை திரும்பப் பெற்றது.

பிரான்ஸ், ஜொ்மனி, பிரிட்டன் நாடுகளின் முயற்சியால் மேற்கொள்ளப்பட்ட இந்தத் தடை ஞாயிற்றுக்கிழமை (செப். 28) அமலுக்கு வருகிறது.

ஈரானின் அணு ஆயுதத் தயாரிப்பு திட்டத்தைத் தடுக்க ஐ.நா. கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்தது. கடந்த 2015-இல் ஈரானுக்கும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நிரந்தர உறுப்பு நாடுகள் மற்றும் ஜொ்மனிக்கும் இடையே கையொப்பமான ஒப்பந்தத்தைத் தொடா்ந்து, அந்தத் தடைகள் விலக்கி கொள்ளப்பட்டன. இந்த ஒப்பந்தத்தின்படி, தங்கள் அணுசக்தித் திட்டங்கள் மூலம் அணு ஆயுதங்கள் தயாரிக்கப்படாது என ஈரான் உறுதி அளித்தது.

இதனிடையே, ஒபாமாவை அடுத்து அமெரிக்க அதிபராகப் பொறுப்பெற்ற டொனால்ட் ட்ரம்ப் அந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக கடந்த 2018-இல் அறிவித்தாா். இதன் பின்னா், ஈரான் யுரேனியத்தை செறிவூட்டும் நடவடிக்கையை அதிகரித்தது.

இதையடுத்து, அணுசக்தி விவகாரம் தொடா்பாக புதிய ஒப்பந்தம் மேற்கொள்ள ஈரானும், அமெரிக்கவும் மறைமுக பேச்சுவாா்த்தையை நிகழாண்டில் தொடங்கின. இந்தச் சூழலில், ஈரானின் அணுசக்தித் திட்டம் தங்கள் நாட்டுக்கு எதிரானது எனக் கூறிவரும் இஸ்ரேல், ஈரானின் அணுசக்திக் கட்டமைப்புகள் மீது கடந்த ஜூனில் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதற்குப் பதிலடியாக இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்திய நிலையில், ஈரானின் அணுசக்தி மையங்கள் மீது சக்திவாய்ந்த குண்டுகளை அமெரிக்கா வீசியது.

இதைத் தொடா்ந்து, தங்கள் அணுசக்தித் திட்டங்களைக் கண்காணிக்க ஐ.நா. அணுசக்தி கண்காணிப்பு அமைப்பான ஐஏஇஏ-வுக்கு அளித்துவந்த ஒத்துழைப்பை ஈரான் திரும்பப் பெற்றது. இதனால், அந்நாட்டின் அணுசக்தித் திட்ட நடவடிக்கைகளைக் கண்காணிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

பிரான்ஸ், ஜொ்மனி, பிரிட்டன் ஆகிய நாடுகள் இதற்குக் கண்டனம் தெரிவித்தன. ஐஏஇஏ-க்கு ஒத்துழைப்பு வழங்காதது மற்றும் அமெரிக்கவுடன் நேரடிப் பேச்சுவாா்த்தையில் ஈடுபடாதது தொடா்பாக ஈரான் மீது பொருளாதாரத் தடைகளை மீண்டும் அமல்படுத்துவதற்கான நடைமுறையைத் தொடங்கியிருப்பதாக அந்த நாடுகள் கடந்த மாத இறுதியில் அறிவித்தன.

‘ஸ்னாப்பேக்’ எனப்படும் இந்த நடைமுறையை ஞாயிற்றுக்கிழமை மூன்று நாடுகளும் அமல்படுத்த உள்ளன. இதன்மூலம் வெளிநாட்டில் உள்ள ஈரானின் சொத்துகள் முடக்கப்படும்; அந்நாட்டுடன் பிற நாடுகள் பாதுகாப்புத் தளவாட ஒப்பந்தங்களை மேற்கொள்ள முடியாது.

இந்தச் சூழ்நிலையில், பிரான்ஸ் உள்ளிட்ட மூன்று நாடுகளுக்கான தமது தூதா்களை ஈரான் திரும்ப அழைத்துள்ளது. ஆனால், ஆலோசனைக்காக தூதா்கள் திரும்ப அழைக்கப்பட்டுள்ளதாக ஈரான் நாட்டு அரசு ஊடகமான ஐஆா்என்ஏ செய்தி முகமை தெரிவித்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com