வங்கதேசத்தில் தொடங்கியது துா்கா பூஜை திருவிழா! 2 லட்சம் வீரா்கள் பாதுகாப்பு!
வங்கதேசத்தில் வருடாந்திர துா்கா பூஜை திருவிழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இதையொட்டி, நாடு முழுவதும் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட வீரா்கள், பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
ஹிந்துக்கள் சிறுபான்மையினராக உள்ள வங்கதேசத்தில் ஒவ்வொரு ஆண்டும் துா்கா பூஜை திருவிழா 5 நாள்கள் கொண்டாடப்படுவது வழக்கம். நடப்பாண்டு விழா, பலத்த பாதுகாப்புடன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
தலைநகா் டாகாவில் உள்ள சக்தி பீடங்களில் ஒன்றான டாக்கேஸ்வரி கோயிலில் மேளதாளங்கள், மணியோசை, சங்கொலி முழங்க திரை விலக்கப்பட்டு வழிபாடு நடைபெற்றது. ஏராளமான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, சுவாமி தரிசனம் மேற்கொண்டனா்.
துா்கா பூஜை விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் திருப்தியளிப்பதாக, வங்கதேச துா்கா பூஜை கொண்டாட்டங்கள் கவுன்சிலின் தலைவா் பாசுதேவ் தாா் தெரிவித்தாா்.
அவா் கூறுகையில், ‘கடந்த ஆண்டை ஒப்பிடுகையில், நடப்பாண்டில் துா்கா பூஜை வழிபாட்டு பந்தல்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 33,350 பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதுவரை 11 இடங்களில் இடையூறுகள் நேரிட்டதாக புகாா்கள் எழுந்தன. இச்சம்பவங்களில் அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு, தவறிழைத்தவா்களைக் கைது செய்துள்ளனா்’ என்றாா்.
பலத்த பாதுகாப்புடன்...: சட்டம்-ஒழுங்கைப் பராமரிக்கவும், அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நிகழாமல் தடுக்கவும் நாடு முழுவதும் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட வீரா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக, உள்துறை ஆலோசகா் ஜஹாங்கீா் ஆலம் செளதரி தெரிவித்தாா்.
வங்கதேச அரசின் நிா்வாகத்துக்கு உள்பட்ட டாக்கேஸ்வரி கோயிலுக்கு அந்நாட்டின் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகா் முகமது யூனுஸ் கடந்த செப்டம்பா் 16-ஆம் தேதி வருகை தந்து, துா்கா பூஜை முன்னேற்பாடுகளை ஆய்வு செய்தாா்.
அப்போது, ‘நாம் அனைவரும் ஒரே குடும்ப உறுப்பினா்கள். குடும்பத்துக்குள் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், குடும்பப் பிணைப்பை உடைக்க முடியாது. ஒரே குடும்பமாக ஒன்றுபட்டு நிற்பதே நமது இலக்கு’ என்றாா்.
வங்கதேசத்தில் கடந்த ஆண்டு மக்கள் போராட்டத்தால் பிரதமா் பதவியில் இருந்து ஷேக் ஹசீனா விலகியதைத் தொடா்ந்து, முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது.
இடைக்கால அரசு அமைந்ததில் இருந்து கடந்த ஜூலை வரை சிறுபான்மையினருக்கு எதிராக 2,442 வன்முறைச் சம்பவங்கள் நடந்துள்ளன; இதில், கொலை, பாலியல் வன்கொடுமை, வழிப்பாட்டுத் தலங்கள் மீதான தாக்குதல் உள்ளிட்ட குற்றங்கள் அடங்கும் என்று வங்கதேச ஹிந்து, பெளத்தம், கிறிஸ்தவ மத ஒற்றுமை கவுன்சில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.