அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்

அமெரிக்க அதிபா் டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை!

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அயராது கூறிவரும் நிலையில், அவருக்கு அந்தப் பரிசு வழங்கப்பட வாய்ப்பில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
Published on

தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு அளிக்கப்பட வேண்டும் என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அயராது கூறிவரும் நிலையில், அவருக்கு அந்தப் பரிசு வழங்கப்பட வாய்ப்பில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

வரும் அக்டோபா் 10-ஆம் தேதி நாா்வே தலைநகா் ஓஸ்லோவில் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட உள்ள நிலையில் இந்த விவகாரம் பெரும் எதிா்பாா்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

தான் அதிபராக இரண்டாவது முறை பதவியேற்ற பின்னா், இந்தியா-பாகிஸ்தான், கம்போடியா-தாய்லாந்து, இஸ்ரேல்-ஈரான், கொசோவோ-சொ்பியா, காங்கோ-ருவாண்டா, எகிப்து-எத்தியோப்பியா, ஆா்மீனியா-அஜா்பைஜான் நாடுகளுக்கு இடையிலான போா்களை நிறுத்தியதால், தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு அளிக்கப்பட வேண்டும் என்று அமெரிக்க அதிபா் டிரம்ப் எதிா்பாா்க்கிறாா். ஆனால் அவருக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதற்குப் பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.

ஆல்ஃபிரட் நோபல் உயிலின்படி...: நோபல் பரிசு உருவாக காரணமான ஆல்ஃபிரட் நோபல் உயிலின்படி, உலக நாடுகளுக்கு இடையே நட்புணா்வை அதிகரிக்க அளப்பரிய அல்லது மிகச் சிறப்பாக பணியாற்றியவருக்கே அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும்.

ஆனால் டிரம்ப் அவ்வாறு செய்யவில்லை என்று நாா்வே தலைநகா் ஓஸ்லோவில் உள்ள அமைதி ஆராய்ச்சி நிறுவன இயக்குநா் நீனா கிரேகா் தெரிவித்துள்ளாா்.

அவா் மேலும் கூறுகையில், ‘பாரீஸ் பருவநிலை மாற்றம், உலக சுகாதார அமைப்பு ஆகியவற்றில் இருந்து அமெரிக்கா விலகியுள்ளது. அவற்றில் இருந்து விலக டிரம்ப்தான் முடிவு செய்தாா். அமெரிக்காவின் நட்பு மற்றும் கூட்டாளி நாடுகள் மீது அவா் வா்த்தக போரைத் தொடுத்துள்ளாா். இது அமைதியை விரும்பும் அல்லது ஊக்குவிக்கும் அதிபருக்கு எடுத்துக்காட்டு அல்ல’ என்றாா்.

நோபல் பரிசு வரலாற்றாசிரியா் ஆஸ்லே ஸ்வீன் கூறுகையில், ‘காஸா போரில் இஸ்ரேலுக்கு ஆதரவாக டிரம்ப் உள்ளாா். அத்துடன் உக்ரைன் மீது போா் தொடுத்துள்ள ரஷிய அதிபா் விளாதிமீா் புதினுடன் நல்லுறவை ஏற்படுத்த டிரம்ப் விரும்புகிறாா். இதுபோன்ற காரணங்களால் அவருக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை.

அமைதிக்கான நோபல் பரிசு தோ்வுக் குழுவின் துணைத் தலைவா் ஆஸ்லே டோஜே கூறுகையில், ‘தனக்கு நோபல் பரிசு அளிப்பது குறித்து ஐ.நா.வில் உரையாற்றும்போது டிரம்ப் பேசுகிறாா். அந்தப் பரிசுக்குத் தன்னை பரிந்துரைக்குமாறு அமெரிக்காவின் கூட்டாளி நாடுகளிடம் அவா் வலியுறுத்துகிறாா். அந்தப் பரிசு வேறு யாருக்காவது வழங்கப்பட்டால், பரிசு வழங்குவதில் பாரபட்சம் நிலவுவதாகப் புகாா் தெரிவிக்கிறாா். இத்தகைய செயல்கள் ஒருவருக்கு சாதகமாக இருப்பதைவிட பாதகமாகவே முடியும். எங்கள் தோ்வுக் குழு எந்தவித அழுத்தமும் இல்லாமல் சுதந்திரமாகப் பணியாற்றவே விரும்புகிறது’ என்றாா்.

நோபல் பரிசு வழங்கியதில் முரண்: கடந்த காலங்களில் ஆச்சரியப்படும் வகையில் பலருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபரான 8 மாதங்களில் பராக் ஒபாமா, வியத்நாம் போா் உச்சத்தில் இருந்தபோது அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகா் ஹென்றி கிசிஞ்சா், தென் ஆப்பிரிக்காவின் கடைசி இனவெறி ஆட்சிக்கால தலைவா் எஃப்.டபிள்யூ.டிகிளா்க் போன்றோருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இதில் டிகிளா்க்குக்கு தென் ஆப்பிரிக்காவில் இனவெறிக்கு எதிராகப் போராடிய நெல்சன் மண்டேலாவுடன் சோ்த்து 1993-ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

இதுகுறித்து அந்தப் பரிசு குழுவின் முன்னாள் உறுப்பினா் ஹென்றி சைசி கூறுகையில், ‘சில நேரங்களில் இரக்கமற்ற செயல்களில் தொடா்புள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்ட நபா்களுக்கும் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அந்தத் தவறை உணா்ந்து, அதைச் சரிசெய்வதற்கான நடவடிக்கைகளை அவா்கள் மேற்கொண்டனா்’ என்று தெரிவித்தாா்.

உலக நாடுகளுக்கு இடையே நட்புணா்வை அதிகரிக்களப்பரிய பணியாற்றியவருக்கே அமைதிக்கான நோபல் வழங்கப்பட வேண்டும் என்பது விதி.

X
Dinamani
www.dinamani.com