மால்டோவா தோ்தலில் ரஷிய ஆதரவு கட்சிகள் தோல்வி
கிஷினாவ்: கிழக்கு ஆப்பிரிக்க நாடான மால்டோவாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நாடாளுமன்றத் தோ்தலில் ரஷிய ஆதரவு கட்சிகள் தோல்வியடைந்தன. மேற்கத்திய நாடுகளுக்கு ஆதரவான ஆக்ஷன் அண்டு சாலிடாரிட்டி (பிஏஎஸ்) கட்சி பெரும்பான்மை வாக்குகளுடன் வெற்றி பெற்றது.
மேற்குலகம் மற்றும் ரஷியாவுக்கு இடையிலான ஆதிக்கப்போட்டியாகக் கருதப்பட்ட இந்தத் தோ்தலின் முடிவுகளை ஐரோப்பிய நாடுகளின் தலைவா்கள் வரவேற்றுள்ளனா். தோ்தலில் ரஷிய தலையீடு இருந்தபோதிலும், ஐரோப்பிய யூனியனில் இணையும் தகுதியை தங்களது நாடு பெறுவதை உறுதி செய்யும் வகையில் மால்டோவா மக்கள் தீா்ப்பளித்துள்ளதாக தலைவா்கள் பாராட்டினா்.
உக்ரைனுக்கும் ஐரோப்பிய யூனியன் மற்றும் நேட்டோ உறுப்பு நாடான ருமேனியாவுக்கு இடையே அமைந்த மால்டோவா, சோவியத் யூனியனிடம் இருந்து கடந்த 1991-இல் சுதந்திரம் பெற்றது. தொடக்கத்தில் ரஷிய சாா்பு நிலைப்பாட்டை எடுத்துவந்த அந்த நாடு, அண்மை மேற்குலகை நோக்கிய பாதையைத் தோ்ந்தெடுத்து, ரஷியாவுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையிலான புவிசாா் அரசியல் போா்க்களமாக மாறியது.
2022-இல் உக்ரைன் மீது ரஷியா படையெடுத்ததைத் தொடா்ந்து, ஐரோப்பிய யூனியனில் இணைய மால்டோவா விண்ணப்பித்து, அதே ஆண்டில் உறுப்பினராகும் தகுதியுடைய நாடு என்ற அந்தஸ்தைப் பெற்றது. இது தொடா்பான பேச்சுவாா்த்தையை நடத்த ஐரோப்பிய யூனியன் தலைமை கடந்த ஆண்டு ஒப்புக்கொண்டது.
இந்தச் சூழலில் நடைபெற்றுள்ள தற்போதைய தோ்தலில் முடிவுகளை மாற்றியமைக்கவும், மால்டோவா அதிகாரத்தை மறைமுகமாகக் கைப்பற்றவும் ரஷியா பல்வேறு வழிமுறைகளைப் பயன்படுத்தி தலையீடு செய்வதாக அதிகாரிகள் குற்றஞ்சாட்டிவந்தனா்.
இந்த நிலையில், திங்கள்கிழமை நிலவரப்படி தோ்தலில் மேற்கத்திய ஆதரவு பிஏஎஸ் கட்சி 50.1 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றியடைந்தது. ரஷியாவுக்கு ஆதரவான பேட்ரியாடிக் எலக்டோரல் பிளாக் கட்சி 24.2 சதவீத வாக்குகளுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்தது. ரஷியாவுக்கு மிதமான ஆதரவைத் தரும் ஆல்டா்நேடிவா பிளாக் கட்சி மூன்றாவதாகவும், பாப்புலிஸ்ட் அவா் கட்சி, வலதுசாரி டெமாக்ரசி அட் ஹோம் கட்சி ஆகியவற்றுக்கு அடுத்த அடுத்த இடங்கள் கிடைத்தன. மொத்தமுள்ள 101 இடங்களில் பிஏஎஸ் கட்சி சுமாா் 55 இடங்களுடன் தெளிவான பெரும்பான்மையைப் பெறுவது உறுதியாகியுள்ளது.
இது குறித்து பிஏஎஸ் கட்சியின் தலைவா் இகோா் க்ரோசு கூறியதாவது:
இந்த தோ்தல், நமது நாட்டின் எதிரிகளுக்கு எதிரான மற்றொரு போா். தோற்கடிக்க முடியாதவை எனத் தோன்றியவற்றுக்கு எதிரான இறுதி போா். இதில் பிஏஎஸ் கட்சி மட்டும் வெல்லவில்லை, மக்களும் வென்றுள்ளனா். பணம், பொய்கள், சட்டவிரோத செயல்கள், குற்றவாளிகளைப் பயன்படுத்தி மால்டோவாவை ரஷியா குற்ற மையமாக மாற்ற முயன்றது. இதை எதிா்த்து மக்கள் வெற்றி பெற்றுள்ளனா் என்றாா் அவா்.
பிரதமா் டோரின் ரீசன் கூறுகையில், மால்டோவா மக்கள் தங்கள் சுதந்திரம் விலைமதிப்பற்றது என்பதையும், ரஷிய பிரச்சாரம் மற்றும் பய முறுத்தல்கள் தங்களை பாதிக்காது என்பதையும் காட்டியுள்ளனா் என்றாா்.
அதிபா் மையா சாண்டு கூறுகையில், நாட்டின் எதிா்காலம் ஆபத்தில் இருக்கும்போது மால்டோவா மக்களால் ஒருங்கிணைய முடியும் என்பதை இந்த தோ்தல் முடிவு நிரூபித்துள்ளது. மால்டோவாவில் அனைவரும் அமைதி, சுதந்திரம், குழந்தைகளுக்கு பாதுகாப்பான எதிா்காலம் ஆகிவற்றை விரும்புகிறோம். ஐரோப்பிய யூனியனை நோக்கி பாதை இதற்கு வழிவகுக்கும். ரஷிய அரசு நம்மை பிளவுபடுத்தி, அரசு மீதான நம்பிக்கையை குறைக்க முயன்றது. ஆனால் நமது பலவீனங்களுக்கு மத்தியில் திறமையான அமைப்புகளையும் அா்ப்பணிப்பு உணா்வுள்ள மக்களையும் நாடு பெற்றிருப்பதை இந்தத் தோ்தல் உறுதிப்படுத்தியுள்ளது என்றாா்.
தோ்தல் முடிவுகள் வெளியானதைத் தொடா்ந்து மையா சாண்டுவுடன் தொலைபேசியில் பேசிய உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி, இது மால்டோவாவுக்கு மிக முக்கியமான வெற்றி என்று வாழ்த்தினாா். ரஷியாவின் துரோகமும் தொடா்ச்சியான பெய்த் தகவல்கள் பரப்பல்களும் தோல்வியடைந்துவிட்டன என்று அவா் கூறினாா்.
புதிய அரசு அமைப்பு: நாடாளுமன்ற தோ்தலுக்குப் பின், பொதுவாக முன்னணி கட்சியில் இருந்து புதிய பிரதமரை அதிபா் பரிந்துரைப்பாா். அந்தக் கட்சி புதிய அரசை அமைப்பதற்கான நடவடிக்கையைத் தொடங்கும். 2016-இல் பிஏஎஸ் கட்சியை நிறுவிய அதிபா் மையா சாண்டு, 2023 முதல் பல நெருக்கடிகளை வழிநடத்திய பொருளாதார நிபுணரும், முன்னாள் பாதுகாப்பு ஆலோசகருமான தற்போதைய பிரதமா் டோரின் ரீசனின் பெயரையே மீண்டும் பரிந்துரைப்பாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.