
இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையேயான போரை நிறுத்துவது தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இடையே இன்று(திங்கள்கிழமை) சந்திப்பு நடைபெற உள்ளது.
இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையேயான போர் 2 ஆண்டுகளை நெருங்குகிறது. இஸ்ரேலின் தொடர் தாக்குதலால் நாளுக்கு நாள் காஸா நகரம் மோசமடைந்து வருகிறது. காஸாவுக்கு ஆதரவாகவும் இஸ்ரேலுக்கு எதிராகவும் உலக நாடுகள் பலவும் குரல் கொடுத்து வருகின்றன.
இந்நிலையில் ஹமாஸ் உடனான இஸ்ரேலின் போரை நிறுத்த டிரம்ப் இன்று இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தாண்டு 4 ஆவது முறையாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அமெரிக்க அதிபர் டிரம்ப்பை இன்று வெள்ளை மாளிகையில் சந்திக்கிறார்.
அப்போது இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரை நிறுத்த இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாகவும் இன்றைய பேச்சுவார்த்தையில் ஒரு முடிவு எட்டப்படும் என்றும் கூறப்படுகிறது.
முன்னதாக டிரம்ப், போர் முடிவுக்கு வருவதற்கான நேரம் இது என்று சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.
அதேபோல நெதன்யாகுவும், போர் நிறுத்தம் குறித்து ஆலோசித்து வருவதாக ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சமீபத்தில் கூறியிருந்தார்.
ஹமாஸ் பிடியில் உள்ள 48 பேரை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை இஸ்ரேல் முன்வைக்கிறது. பதிலாக, ஹமாஸ் அமைப்பினர் காஸாவை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவார்கள் அல்லது அவர்கள் போராட்டத்தைக் கைவிட்டால் பொது மன்னிப்பு வழங்கப்படும், மேலும் காஸாவில் பாதிக்கப்பட்ட பகுதிக்குள் மனிதாபிமான உதவிகள் அனுமதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
டிரம்ப் - நெதன்யாகு சந்திப்பிற்குப் பின் முக்கியத் தகவல்கள் வெளியாக வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிக்க | இதுவரை 66,000 பாலஸ்தீனர்கள் பலி! - காஸா சுகாதார அமைச்சகம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.