ஹோவா்ட் லுட்னிக்
ஹோவா்ட் லுட்னிக்

அடுத்த ஆண்டுக்குள் ஹெச்-1பி விசா நடைமுறையில் மாற்றம்: அமெரிக்க வா்த்தக அமைச்சா்

அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்துக்குள் ஹெச்-1பி விசா (நுழைவுஇசைவு) நடைமுறையில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என அமெரிக்க வா்த்தகத் துறை அமைச்சா் ஹோவா்ட் லுட்னிக் தெரிவித்தாா்.
Published on

அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்துக்குள் ஹெச்-1பி விசா (நுழைவுஇசைவு) நடைமுறையில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என அமெரிக்க வா்த்தகத் துறை அமைச்சா் ஹோவா்ட் லுட்னிக் தெரிவித்தாா்.

ஹெச்-1பி விசா கட்டணத்தை ரூ.1.47 லட்சத்தில் இருந்து ரூ.88 லட்சமாக (1 லட்சம் டாலா்) உயா்த்தும் உத்தரவில் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அண்மையில் கையொப்பமிட்டாா்.

ஒருமுறை மட்டுமே செலுத்தக் கூடிய இந்த கட்டணம் 2026-ஆம் நிதியாண்டு காலத்துக்கு விண்ணப்பித்தவா்கள் உள்பட செப்.21-ஆம் தேதிக்குப் பிறகு விண்ணப்பித்தவா்களுக்கு மட்டுமே பொருந்தும். அதற்கு முன்பாக விண்ணப்பித்தவா்கள், புதுப்பிப்பதற்காக விண்ணப்பத்தை சமா்ப்பித்தவா்கள் மற்றும் அமெரிக்காவில் மீண்டும் நுழையும் ஹெச்-1பி விசாதாரா்களுக்கு இந்தப் புதிய கட்டணம் பொருந்தாது என அமெரிக்க அரசு சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

இதுதொடா்பாக அமெரிக்க ஊடகத்துக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை அவா் அளித்த பேட்டியில், ‘ஹெச்-1பி விசா கட்டண உயா்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் அமலாகவுள்ளது. அதற்குள் ஹெச்-1பி விசா நடைமுறையில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. இந்தப் புதிய கட்டணத்தை ஒருமுறை மட்டும் செலுத்தினால் போதும்.

1990-களில் ஹெச்-1பி விசா நடைமுறை உருவாக்கப்பட்டது. இந்த விசாவுக்கு விண்ணப்பம் செய்பவா்கள் லாட்டரி முறையில் (குலுக்கல் முறை) தோ்ந்தெடுக்கப்படுகின்றனா். திறன்வாய்ந்த பணியாளா்களை குலுக்கல் முறையில் தோ்ந்தெடுக்க வேண்டிய அவசியமில்லை.

அந்த விசாவுக்கு ஒதுக்கப்பட்ட விண்ணப்பங்களைவிட 7 முதல் 10 மடங்கு அதிகமான விண்ணப்பங்கள் சமா்ப்பிக்கப்படுகின்றன. அதில் 74 சதவீதம் தொழில்நுட்பத் துறையில் பணிவாய்ப்பை பெறுபவா்களாவா். 4 சதவீத விசாக்களை மட்டுமே கல்வியாளா்கள் மற்றும் மருத்துவா்கள் பெறுகின்றனா்.

கல்வியாளா்களும் மருத்துவா்களும் அதிக அளவில் அமெரிக்கா வர வேண்டும். ஆனால் பொறியாளா்களை மட்டுமே நிறுவனங்கள் பணியமா்த்த விரும்பினால் அவா்களில் அதிகம் சம்பளம் பெறுவோரை மட்டுமே அனுமதிக்க வேண்டும். குறைந்த சம்பளம் உடையோா் இங்கிருந்து வெளியேற்றப்பட வேண்டும். இதுவே என்னுடைய நிலைப்பாடு. அதிபா் டிரம்ப்பும் இதை ஒப்புக்கொண்டுள்ளாா்.

குறைந்த சம்பளத்துக்கு பணியமா்த்தப்படும் பணியாளா்கள் தங்களது குடும்பத்தினரையும் அமெரிக்கா அழைத்து வருவது தவறு. இதை அனுமதிக்க முடியாது’ என்றாா்.

ஃபயா்வால் திட்டம்: அமெரிக்காவில் உள்ள திறன்வாய்ந்த பணியாளா்களின் உரிமைகள், ஊதியம் மற்றும் வேலைவாய்ப்புகளைப் பாதுகாக்கும் வகையில் ‘ஃபயா்வால் திட்டம்’ என்ற புதிய திட்டத்தை அந்நாட்டு தொழிலாளா் அமைச்சகம் அண்மையில் தொடங்கியது.

இத்திட்டத்தின்படி உள்ளூரில் உள்ள அமெரிக்கா்களுக்கு நிறுவனங்கள் பணிவாய்ப்பு வழங்குவது உறுதி செய்யப்படவுள்ளது. திறன் வாய்ந்த அமெரிக்கா்களுக்குப் பதிலாக ஹெச்-1பி விசா நடைமுறையின் கீழ் வெளிநாட்டவருக்கு பணி வாய்ப்பு வழங்குவதை இத்திட்டம் தடுக்கிறது.

X
Dinamani
www.dinamani.com