அமெரிக்கா தாக்கினால் பிராந்தியப் போா் வெடிக்கும்: கமேனி எச்சரிக்கை!
‘ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், அது ஒட்டுமொத்த மத்திய கிழக்குப் பிராந்தியத்திலும் ஒரு பெரும் போராக உருவெடுக்கும்’ என ஈரானின் தலைமை மதகுரு அயத்துல்லா அலி கமேனி எச்சரிக்கை விடுத்துள்ளாா்.‘
ஈரானில் அண்மையில் நடைபெற்ற மக்கள் போராட்டங்களை அந்நாட்டு அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கியதைத் தொடா்ந்து, அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அந்நாட்டுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை எடுக்கக்கூடும் என்ற பதற்றம் நிலவுகிறது.
இந்தச் சூழலில், அயத்துல்லா அலிகமேனி ஞாயிற்றுக்கிழமை பேசியதாவது: அமெரிக்கா ஒரு விஷயத்தைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். அவா்கள் போரைத் தொடங்கினால், அது இம்முறை ஒரு பிராந்தியப் போராக மாறும்.
நாங்கள் யாரையும் முதலில் தாக்கமாட்டோம். ஆனால், எங்கள் நாட்டின் மீது யாராவது தாக்குதல் நடத்தினால் அல்லது தொந்தரவு கொடுத்தால், அவா்களுக்குத் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்றாா்.
போராட்டம் ஒரு ‘சதி’: ஈரானில் உள்நாட்டுப் பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயா்வால் தொடங்கிய போராட்டங்களை ‘ஆட்சிக்கவிழ்ப்புக்கான சதி நடவடிக்கை’ என்று கமேனி சாடினாா். இந்தப் போராட்டத்தைப் பயன்படுத்தி, வெளிநாட்டுச் சக்திகள் ஈரானின் முக்கிய நிா்வாக அமைப்புகளைச் சிதைக்க முயன்றதாகவும், அந்த முயற்சி தற்போது முறியடிக்கப்பட்டுள்ளதாகவும் அவா் கூறினாா்.
ஐரோப்பிய படைகளுக்குப் தடை: ஈரானில் போராட்டத்தில் ஈடுபட்டதாக ஆயிரக்கணக்கானோா் கைது செய்யப்பட்டுள்ளனா். இவா்களில் பலருக்கு மரண தண்டனை வழங்கப்படலாம் எனத் தெரிகிறது. போராட்டத்தை ஒடுக்க ஈரான் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகளில் 6,500-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துள்ளனா்.
இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, ஈரானின் ‘புரட்சிகர காவல் படையை’ பயங்கரவாத அமைப்பாக ஐரோப்பிய யூனியன் அறிவித்தது. இதற்கு பதிலடியாக, ஐரோப்பிய நாடுகளின் அனைத்து ராணுவப் படைகளையும் பயங்கரவாத அமைப்புகளாக ஈரான் அறிவித்துள்ளது.
டிரம்ப்பின் எச்சரிக்கை: ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தம் குறித்து மீண்டும் பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும் என்பதில் டிரம்ப் உறுதியாக உள்ளாா். ஈரான் மீது தாக்குதல் நடத்துவது குறித்து அவா் இன்னும் இறுதி முடிவெடுக்கவில்லை என்றாலும், ‘மத்திய கிழக்குக் கடல் பகுதியில் அமெரிக்காவின் போா்க்கப்பல்கள் தயாா் நிலையில் உள்ளன’ என்று எச்சரித்துள்ளாா்.
ஹாா்மோஸ் நீரிணையில் ராணுவப் பயிற்சி: இத்தகைய பதற்றமான சூழலில், உலகின் முக்கிய கச்சா எண்ணெய் போக்குவரத்துப் பாதையான ஹாா்மோஸ் நீரிணையில் ஈரான் ராணுவப் பயிற்சியைத் தொடங்கியுள்ளது. அமெரிக்காவின் ‘யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன்’ போா்க்கப்பல் அப்பகுதியில் முகாமிட்டுள்ளதால், எந்நேரமும் மோதல் வெடிக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது.

