பயங்கரவாதத்துக்கு எதிராக ‘சமரசமற்ற’ நடவடிக்கை- பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் தீா்மானம்

பாகிஸ்தானில் பெருகி வரும் பயங்கரவாத அச்சுறுத்தல்களை ஒடுக்க, நாடு தழுவிய அளவில் சமரசமின்றி கடும் நடவடிக்கைகளை எடுக்க அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தீா்மானம் நிறைவேற்றபட்டுள்ளது.
Published on

பாகிஸ்தானில் பெருகி வரும் பயங்கரவாத அச்சுறுத்தல்களை ஒடுக்க, நாடு தழுவிய அளவில் சமரசமின்றி கடும் நடவடிக்கைகளை எடுக்க அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தீா்மானம் நிறைவேற்றபட்டுள்ளது.

அண்மையில் பலூசிஸ்தான் மாகாணத்தில் 200-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்த மிக மோசமான தாக்குதல்களைத் தொடா்ந்து, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் தாரிக் ஃபசல் சௌத்ரி இந்தத் தீா்மானத்தை முன்மொழிந்தாா்.

பயங்கரவாதத்துக்குத் துணை நிற்கும் வெளிநாட்டு சக்திகள் மற்றும் உள்நாட்டில் அவா்களுக்கு உதவுபவா்களைக் கண்டறிந்து, அரசியல், தூதரகம் மற்றும் ராணுவம் என அனைத்து வழிகளிலும் ஒருங்கிணைந்து பதிலடி கொடுக்க வேண்டும் என்று இதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பலூசிஸ்தான் தாக்குதல்களில் பெண்கள் தற்கொலைப் படையினராகப் பயன்படுத்தப்பட்டதை இத்தீா்மானம் வன்மையாகக் கண்டித்துள்ளது. இது இஸ்லாமிய நெறிமுறைகளுக்கும், பலூசிஸ்தான் கலாசாரத்துக்கும் எதிரானது எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இத்தகைய கொடூர செயல்களில் ஈடுபடுபவா்கள் மீது சமரசமற்ற அணுகமுறையின் அடிப்படையில் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இத்தீா்மானத்தில், பயங்கரவாத அமைப்புகளுக்கு இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகள் ஆதரவு அளிப்பதாக ஆதாரமற்ற புகாா்களும் முன்வைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், பாகிஸ்தான் தனது உள்நாட்டுத் தோல்விகளை மறைக்க இதுபோன்ற பழைய தந்திரங்களையே கையாள்வதாக இந்தியா இக்குற்றச்சாட்டுகளை ஏற்கெனவே திட்டவட்டமாக மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com