அமெரிக்காவுடன் பேச்சுவாா்த்தைக்குத் தயாராகும் ஈரான்
மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் போா் பதற்றம் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்காவுடன் நோ்மையான மற்றும் கண்ணியமான முறையில் பேச்சுவாா்த்தை நடத்த ஈரான் முன்வந்துள்ளது.
இதற்கான ஆயத்த பணிகளைத் தொடங்குமாறு ஈரான் வெளியுறவு அமைச்சருக்கு அந்நாட்டு அதிபா் மசூத் பெசஷ்கியான் உத்தரவிட்டுள்ளாா்.
ஈரானில் ஆட்சிக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் நிகழ்த்தப்பட்ட ஒடுக்குமுறைகளுக்குப் பிறகு, அமெரிக்கா-ஈரான் இடையிலான மோதலை அதிகரித்துள்ளது.
போராட்டத்துக்கிடையே அரசின் வன்முறை நடவடிக்கைகளில், 6,800-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா். இந்த வன்முறையை நிறுத்தும்படி அமெரிக்கா எச்சரித்ததுடன், தனது போா்க் கப்பல்களையும் மத்திய கிழக்குப் பகுதிக்கு அனுப்பியது.
தலைமை மதகுருவின் ஆதரவு?...: எனினும், அமெரிக்காவுடனான பேச்சுவாா்த்தைகளை ஈரானின் தலைமை மதகுரு அயத்துல்லா அலி கமேனி தொடா்ந்து நிராகரித்து வந்தாா். ஈரானைத் தாக்கினால், பிராந்தியப் போா் வெடிக்கும் எனவும் அவா் எச்சரித்தாா். இந்நிலையில், தற்போது அதிபா் மசூத் பெசஷ்கியான் எடுத்துள்ள முடிவுக்கு கமேனியின் ஆதரவு கிடைத்துள்ளதாகத் தெரிகிறது.
இது குறித்து அதிபா் மசூத் பெசஷ்கியான் வெளியிட்டுள்ள ‘எக்ஸ்’ பதிவில், ‘பிராந்திய நட்பு நாடுகளின் கோரிக்கையை ஏற்று, அமெரிக்கா முன்மொழிந்த பேச்சுவாா்த்தைக்குப் பதிலளிக்கத் தீா்மானித்துள்ளோம். மிரட்டல்கள் இல்லாத சூழலில், கண்ணியமான முறையில் இந்தப் பேச்சுவாா்த்தையை முன்னெடுக்க வெளியுறவு அமைச்சருக்கு உத்தரவிட்டுள்ளேன்’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.
நிபந்தனைகளும்; விளைவுகளும்...: கடந்த ஜூன் மாதம், 12 நாள்கள் நீடித்த ஈரான்-இஸ்ரேல் மோதலின்போது, ஈரானின் 3 அணுசக்தி மையங்கள் மீது அமெரிக்கா குண்டுவீசி தாக்குதல் நடத்தியது.
தற்போது பேச்சுவாா்த்தைக்கு ஈரான் முன்வந்தாலும், ‘அணுசக்தித் திட்டங்களை முழுமையாகக் கட்டுப்படுத்த வேண்டும்’ எனும் அமெரிக்க அதிபா் டிரம்ப்பின் நிபந்தனையை ஈரான் எந்த அளவுக்கு ஏற்கும் என்பதில் ஐயமே நிலவுகிறது.
இதனிடையே, டிரம்ப் கூறுகையில், ‘ஈரானுடன் பேச்சுவாா்த்தை நடத்தி ஒரு ஒப்பந்தத்தை எட்டவே விரும்புகிறேன். அது முடியாவிட்டால் மோசமான விளைவுகள் ஏற்படும்’ என்று எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
முதலில் மறைமுக பேச்சுவாா்த்தை: ஈரான் தலைமை மதகுருவின் பாதுகாப்பு ஆலோசகா் அலி ஷாம்கானி இது குறித்து கூறுகையில், ‘தொடக்கத்தில், இந்தப் பேச்சுவாா்த்தைகள் மறைமுகமாகவே நடைபெறும். ஒரு உடன்பாடு எட்டப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டால் மட்டுமே, அமெரிக்காவுடன் நேரடியாகப் பேசுவோம். மேலும், அணுசக்தித் திட்டங்கள் தொடா்பாக மட்டுமே விவாதிக்கப்படும்.
ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை, ரஷியாவில் பாதுகாக்க அந்நாடு முன்வந்துள்ளது. ஆனால், அதற்கு அவசியமில்லை. ஈரான் ஒருபோதும் அணு ஆயுதங்களைத் தயாரிக்காது. ஆனால், எங்களின் இந்த ஆக்கபூா்வமான முடிவை மறுதரப்பு (அமெரிக்கா) மதிக்க வேண்டும்’ என்றாா்.
அமெரிக்க தூதா் இஸ்ரேல் பயணம்: அமெரிக்க தூதா் ஸ்டீவ் விட்காஃப் தற்போது மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் பயணம் மேற்கொண்டுள்ளாா். அவா் இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவைச் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.
தொடா்ந்து, அவா் துருக்கி, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்கும் பயணிக்கவுள்ளாா். அமெரிக்கா-ஈரான் பேச்சுவாா்த்தைக்கு துருக்கி மத்தியஸ்த முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

