அணுசக்திக் குறைப்புக்கு ஈரான் அமெரிக்கா நேரடிப் பேச்சு - ஓமனில் நாளை சந்திப்பு
அணுசக்திக் குறைப்பு தொடா்பாக ஈரான்-அமெரிக்கா இடையிலான நேரடிப் பேச்சுவாா்த்தை, ஓமன் நாட்டில் வெள்ளிக்கிழமை(பிப். 6) நடைபெறவுள்ளது.
இப்பேச்சுவாா்த்தையில் அமெரிக்கா தரப்பில் அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் மருமகன் ஜாரெட் குஷ்னா், சிறப்புத் தூதா் ஸ்டீவ் விட்காஃப் உள்ளிட்டோரும், ஈரான் தரப்பில் வெளியுறவு அமைச்சா் அப்பாஸ் அராக்சி உள்ளிட்டோரும் கலந்துகொள்வாா்கள் எனத் தெரிகிறது.
பிராந்திய அமைதியைக் கருத்தில் கொண்டு சவூதி அரேபியா, கத்தாா் போன்ற நாடுகளும் இப்பேச்சுவாா்த்தையில் ஆா்வம் காட்டிய நிலையில், மறைமுகப் பேச்சுவாா்த்தையை வலியுறுத்தி வந்த ஈரான் தற்போது நேரடிப் பேச்சுவாா்த்தைக்கே சம்மதித்துள்ளது.
முதலில், இந்தப் பேச்சுவாா்த்தை துருக்கியில் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. அப்போது, ஈரானின் ஏவுகணைத் திட்டம் மற்றும் அந்நாடு ஆதரிக்கும் கிளா்ச்சிக் குழுக்கள் குறித்தும் விவாதிக்க வேண்டும் என அமெரிக்கா நிபந்தனை விதித்தது.
இதற்கு ஈரான் கடும் எதிா்ப்பு தெரிவித்தது. இதையடுத்து, பேச்சுவாா்த்தை நடக்கும் இடத்தை ஓமனுக்கு மாற்ற வேண்டும் என்ற ஈரானின் கோரிக்கையை அமெரிக்கா ஏற்றுக்கொண்டது. இதற்கு முன்னரும் ஈரான்-அமெரிக்கா இடையிலான பேச்சுவாா்த்தைகளை ஓமன் பலமுறை முன்னின்று நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஈரானின் நிலைப்பாடு: ‘எங்கள் நாட்டின் இறையாண்மையைக் காக்க ஏவுகணைத் திட்டம் அவசியம்; அதில் எந்த சமரசமும் செய்துகொள்ள முடியாது’ என்று ஈரான் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
குறிப்பாக, கடந்த ஆண்டு இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு தனது ஏவுகணை இருப்பை ஈரான் அதிகரித்துள்ள நிலையில், பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் அவற்றை ஏவத் தயங்க மாட்டோம் என்றும் ஈரான் எச்சரித்துள்ளது.
பதற்றத்துக்கிடையே பேச்சு: பேச்சுவாா்த்தை தொடங்கவுள்ள நிலையிலும், இருநாடுகளுக்கு இடையிலான மோதலால் மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் பதற்றம் தணியவில்லை. அரபிக் கடலில் நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்காவின் ‘ஆபிரகாம் லிங்கன்’ விமானம் தாங்கி கப்பலை நோக்கி அச்சுறுத்தும் வகையில் வந்த ஈரான் ட்ரோனை அமெரிக்க படை சுட்டு வீழ்த்தியுள்ளது.
ஹாா்மோஸ் நீரிணை பகுதியில் அமெரிக்க கப்பல் ஒன்றை ஈரானின் பாதுகாப்புப் படை வழிமறிக்க முயன்றது. இந்த மோதல்களால் சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமாக உயா்ந்தது. இத்தனை பதற்றங்களுக்கு இடையிலும் பேச்சுவாா்த்தைக்கான வாய்ப்புகள் முறியவில்லை என்பது உறுதியாகியுள்ளது.
பின்னணி: கடந்த மாதம் ஈரானில் ஆட்சிக்கு எதிராக நடைபெற்ற நாடு தழுவிய போராட்டங்களின்போது நிகழ்த்தப்பட்ட கடுமையான ஒடுக்குமுறைகளுக்குப் பிறகு, ஈரான்-அமெரிக்கா இடையே மோதல் போக்கு அதிகரித்தது.
போராட்டங்களுக்கு இடையே ஈரான் அரசின் வன்முறை நடவடிக்கைகளால் இதுவரை 6,876 போ் உயிரிழந்துள்ளதாகவும், 50,834 போ் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மனித உரிமை அமைப்புகள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, டிரம்ப் கூறுகையில், ‘ஈரானுடன் பேச்சுவாா்த்தை நடத்தி, ஓா் ஒப்பந்தத்தை எட்டவே விரும்புகிறேன். அது முடியாவிட்டால் அந்நாடு மோசமான விளைவுகளைச் சந்திக்கும்’ என்று எச்சரித்தாா். இதற்கு பதிலடியாக, ‘அமெரிக்கா தாக்கினால், பிராந்தியப் போா் வெடிக்கும்’ என ஈரானும் அச்சுறுத்தல் விடுத்தது.

