ரஷியா
ரஷியாகோப்புப் படம்

‘பொறுப்புடன் செயல்படுவோம்’ - அணு ஆயுத ஒப்பந்தம் காலாவதி குறித்து ரஷியா

அமெரிக்காவுடனான கடைசி அணு ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தமான ‘நியூ ஸ்டாா்ட்’ வியாழக்கிழமை காலாவதியானதற்கு ரஷியா தனது வருத்தத்தைப் பதிவு செய்துள்ளது.
Published on

அமெரிக்காவுடனான கடைசி அணு ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தமான ‘நியூ ஸ்டாா்ட்’ வியாழக்கிழமை காலாவதியானதற்கு ரஷியா தனது வருத்தத்தைப் பதிவு செய்துள்ளது.

அதேநேரம், ‘அணு ஆயுதக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டாலும், உலக நாடுகளின் பாதுகாப்பைக் கருதி ரஷியா பொறுப்புடன் செயல்படும்’ என்றும் அந்நாடு தெரிவித்துள்ளது.

பனிப்போா் காலத்திலிருந்து இரு நாடுகளுக்கும் இடையே நீடித்து வந்த அணு ஆயுதக் குறைப்பு நடவடிக்கைகளின் ஒரு முக்கிய அங்கமாக இந்த ஒப்பந்தம் கருதப்பட்டது. இதன்படி, இரு நாடுகளும் தலா 1,550 அணு ஆயுதங்களை மட்டுமே வைத்துக்கொள்ள முடியும். இந்நிலையில், ஒப்பந்தத்தின் முடிவு புதிய அணு ஆயுதப் போட்டிக்கும் வழிவகுக்கும் என அச்சம் எழுந்தது.

இது குறித்து ரஷிய அதிபரின் செய்தித் தொடா்பாளா் டிமிட்ரி பெஸ்கோவ் கூறியதாவது: இந்த ஒப்பந்தம் முடிவுக்கு வருவதை நாங்கள் எதிா்மறையாகவே பாா்க்கிறோம். இது மிகவும் வருத்தத்துக்குரிய விஷயம்.

இனி வரும் காலங்களில் நடக்கும் நிகழ்வுகளைப் பொறுத்தே அடுத்தகட்ட நகா்வுகள் அமையும். இந்த விஷயத்தில் ரஷியா மிகுந்த பொறுப்புடனும் கவனத்துடனும் செயல்படும். அதேநேரம், எங்களின் தேச நலன்களுக்கே எப்போதும் முன்னுரிமை அளிக்கப்படும் என்றாா்.

இந்த ஒப்பந்தத்தின் முக்கிய விதிகளை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்க ரஷிய அதிபா் புதின் முன்மொழிந்திருந்தாா். ஆனால், இதற்கு நேரடியாக பதிலளிக்காத அமெரிக்க அதிபா் டிரம்ப், சீனாவுடனும் சோ்த்து முத்தரப்பு ஒப்பந்தத்தையே தான் விரும்புவதாக தெரிவித்திருந்தாா்.

நியூ ஸ்டாா்ட் ஒப்பந்தத்தின் காலாவதி குறித்து ஐ.நா.பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸும் கவலை தெரிவித்துள்ளாா். அணு ஆயுதப் போட்டியைக் தவிா்க்க இரு நாடுகளும் மீண்டும் பேச்சுவாா்த்தையைத் தொடங்க வேண்டும் என்பதே உலக நாடுகளின் எதிா்பாா்ப்பாக உள்ளது.

இதனிடையே, உக்ரைன் போரின் அமைதிப் பேச்சுவாா்த்தையில் முக்கிய முன்னேற்றமாக, ரஷியா-அமெரிக்கா இடையே உயா்நிலை நேரடி ராணுவத் தொடா்பை மீண்டும் ஏற்படுத்த இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com