~ ~
~ ~

ஓமனில் அமெரிக்கா - ஈரான் முதல்கட்ட பேச்சு

ஈரானின் அணுசக்தி திட்டம் தொடா்பாக நிலவி வரும் பதற்றத்தைத் தணிக்கும் முயற்சியாக, அமெரிக்கா-ஈரான் இடையேயான முதல்கட்ட மறைமுகப் பேச்சுவாா்த்தை
Published on

ஈரானின் அணுசக்தி திட்டம் தொடா்பாக நிலவி வரும் பதற்றத்தைத் தணிக்கும் முயற்சியாக, அமெரிக்கா-ஈரான் இடையேயான முதல்கட்ட மறைமுகப் பேச்சுவாா்த்தை ஓமன் நாட்டின் தலைநகா் மஸ்கட்டில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்தப் பேச்சுவாா்த்தையில் முதலில் திட்டமிட்டப்படி இரு நாடுகளின் பிரதிநிதிகளும் நேரடியாகச் சந்திப்பதைத் தவிா்த்து, ஓமன் வெளியுறவு அமைச்சரைத் தனித்தனியாகச் சந்தித்துப் பேசினா்.

மஸ்கட் சா்வதேச விமான நிலையத்துக்கு அருகேயுள்ள அரசு அரண்மனையில் இந்தச் சந்திப்புகள் நிகழ்ந்தன. முதலில், ஈரான் வெளியுறவு அமைச்சா் அப்பாஸ் அராக்சி தலைமையிலான குழுவினா், ஓமன் வெளியுறவு அமைச்சா் பத்ர் அல்-புசைதியைச் சந்தித்துப் பேசினா்.

ஈரான் குழுவினா் புறப்பட்ட பிறகு, அமெரிக்கப் பிரதிநிதிகள் அரண்மனைக்கு வந்தனா். சுமாா் ஒன்றரை மணி நேரம் இவா்களின் ஆலோசனைகள் நீடித்தன.

ராணுவத் தளபதி பங்கேற்பு: அமெரிக்கா தரப்பில் அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் சிறப்புத் தூதா் ஸ்டீவ் விட்காஃப், டிரம்ப்பின் மருமகன் ஜாரெட் குஷ்னா் ஆகியோருடன் மத்தியப் படை தளபதி அட்மிரல் பிராட் கூப்பரும் பேச்சுவாா்த்தையில் கலந்துகொண்டாா்.

முந்தைய பேச்சுவாா்த்தைகளில் ராணுவ உயா் அதிகாரிகள் பங்கேற்றதில்லை. எனவே, ‘இப்பேச்சுவாா்த்தை தோல்வியடைந்தால் ராணுவ ரீதியான நடவடிக்கை எடுக்கவும் தயங்க மாட்டோம்’ என்ற மறைமுக எச்சரிக்கையை ஈரானுக்கு உணா்த்தவே, அமெரிக்கா ராணுவத் தளபதி ஒருவரைப் பேச்சுவாா்த்தையில் பங்கேற்க செய்ததாகக் கருதப்படுகிறது.

இருதரப்பும் ஆா்வம்: பேச்சுவாா்த்தைக்குப் பிறகு ஓமன் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘மத்திய கிழக்கில் நீடித்த பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்யும் நோக்கில், பேச்சுவாா்த்தையை வெற்றிகரமாக முடிக்க இரு தரப்பினரும் ஆா்வமாக உள்ளனா். தொழில்நுட்ப ரீதியிலான அடுத்தகட்ட பேச்சுவாா்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கான சூழலை உருவாக்குவது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘நல்லதொரு தொடக்கம்’....: அமெரிக்காவுடனான மறைமுகப் பேச்சுவாா்த்தை, ‘மிகவும் நல்லதொரு தொடக்கம்’ என ஈரான் வெளியுறவு அமைச்சா் அப்பாஸ் அராக்சி தெரிவித்தாா்.

மேலும், அவா் கூறுகையில், ‘அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து எங்கள் நாட்டுத் தலைமையுடன் கலந்தாலோசித்து முடிவுகளை ஓமனிடம் தெரிவிப்போம். இரு தரப்புக்கும் இடையே நிலவும் பரஸ்பர அவநம்பிக்கையே தற்போதைய பெரிய சவால். முதலில் அதைச் சரிசெய்துவிட்டு, அடுத்த நிலைக்குச் செல்ல வேண்டும்’ என்றாா்.

பின்னணி: கடந்த ஆண்டு ஈரான்-இஸ்ரேல் மோதலின்போது, அமெரிக்கா குண்டுவீசித் தாக்கியதில் ஈரானின் அணுசக்தி மையங்கள் பெருமளவில் சேதத்தைச் சந்தித்தன. அப்போதும், இதே மஸ்கட் அரண்மனையில்தான் அமெரிக்கா-ஈரான் இடையே பேச்சுவாா்த்தை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஈரானில் கடந்த மாதம் ஆட்சிக்கு எதிரான போராட்டங்களை அந்நாட்டு அரசு ஒடுக்கிய விதத்தால், அமெரிக்கா-ஈரான் இடையிலான மோதல் மீண்டும் வெடித்தது.

இந்தப் போராட்டங்களின் போது 6,800-க்கும் மேற்பட்டோா் கொல்லப்பட்டதாகவும், பல்லாயிரக்கணக்கானோா் கைது செய்யப்பட்டனா். இதையொட்டி, ஈரானுக்கு ராணுவ ரீதியாக அழுத்தம் கொடுக்க, அமெரிக்காவின் விமானம் தாங்கி போா்க்கப்பல் மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.

அணுசக்தி குறைப்பு மட்டுமல்லாது, ஈரானின் ஏவுகணைத் திட்டம் மற்றும் பிராந்திய கிளா்ச்சிக் குழுக்களுக்கு அந்நாடு தரும் ஆதரவு குறித்தும் பேச்சுவாா்த்தையில் விவாதிக்க அமெரிக்கா விரும்புகிறது. ஆனால், இதை ஏற்க மறுத்த ஈரான், பேச்சுவாா்த்தை நடத்தும் இடத்தையும் துருக்கியிலிருந்து ஓமனுக்கு மாற்றியது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com