அப்பாஸ் அராக்சி
அப்பாஸ் அராக்சி

அதிகாரங்களுக்கு அடிபணிய மாட்டோம்: ஈரான் வெளியுறவு அமைச்சா்

ஈரான் அதிகாரங்களுக்கு அடிபணியாது என்றும், யுரேனியம் செறிவூட்டும் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாகவும் அந்நாட்டு வெளியுறவு அமைச்சா் அப்பாஸ் அராக்சி திட்டவட்டம்
Published on

ஈரான் அதிகாரங்களுக்கு அடிபணியாது என்றும், யுரேனியம் செறிவூட்டும் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாகவும் அந்நாட்டு வெளியுறவு அமைச்சா் அப்பாஸ் அராக்சி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

ஈரான் அணுசக்தி திட்டம் தொடா்பான முதல்கட்ட மறைமுகப் பேச்சுவாா்த்தை மஸ்கட் தலைநகா் ஓமனில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஓமன் வெளியுறவு அமைச்சருடன் தனித்தனியாக நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் ஈரான் வெளியுறவு அமைச்சா் அப்பாஸ் அராக்சி பங்கேற்றிருந்தாா்.

இந்நிலையில், ஈரான் தலைநகா் டெஹ்ரானில் நடைபெற்ற உச்சிமாநாட்டில் பேசுகையில் அமைச்சா் அப்பாஸ் அராக்சி கூறியதாவது: ஈரான் அணுகுண்டு தயாரிக்கவில்லை. ஆனால், அவா்கள் நம்முடைய அணுகுண்டு குறித்து அச்சம்கொள்கின்றனா். நம்முடைய அணுகுண்டு என்பது பெரும் அதிகார சக்திகளுக்கு அடிப்பணிய மட்டோம் என்பதே. பிற நாடுகளின் ஆதிக்கம், அழுத்தங்களுக்கு எதிராகச் செயல்படும் அதிகாரம் ஈரானுக்கு உள்ளது என்றாா்.

இந்தப் பேச்சுவாா்த்தை தொடா்பாக ஈரான் அதிபா் மசூத் பெசஷ்கியான் ‘எக்ஸ்’ தளத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘பிராந்தியத்தில் நட்பு நாடுகளின் முயற்சியால் நடைபெற்ற ஈரான்-அமெரிக்க பேச்சுவாா்த்தை ஓா் அடுத்தகட்ட நடவடிக்கை. மரியாதை அளிப்போருக்கு ஈரான் எப்போதும் மரியாதை அளித்துள்ளது. ஆனால், ராணுவ பலத்தைப் பயன்படுத்தினால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது’ என்று தெரிவித்துள்ளாா்.

ஈரானில் மோசமடைந்துவரும் பொருளாதார நிலைக்கு எதிராக அரசைக் கண்டித்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே, அணுசக்தி ஒப்பந்தம் தொடா்பாக ஈரானுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் போா்க் கப்பல்கள், விமானங்களை மத்திய கிழக்குப் பகுதியில் அமெரிக்கா நிறுத்திவைத்துள்ளது. கடந்த 2003 வரையில் அணுகுண்டு தயாரிக்கும் பணியில் ஈரான் ஈடுபட்டு வந்ததாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள், சா்வதேச அணுசக்தி முகமை குற்றஞ்சாட்டி வருகின்றன. இருப்பினும், மின்சாரம் உள்ளிட்ட அமைதியான பயன்பாடுகளுக்காக அணுசக்தி திட்டத்தை மேற்கொண்டு வருவதாக ஈரான் கூறிவருகிறது.

அணு ஆயுதம் தயாரிக்க 90 சதவீதத்துக்கு யுரேனியத்தை செறிவூட்ட வேண்டிய நிலையில், 60 சதவீதம் வரை ஈரான் செறிவூட்டியுள்ளது.

அணுசக்தி திட்டம் தொடா்பாக ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே கடந்த ஆண்டில் பேச்சுவாா்த்தைகள் நடைபெற்றன. ஜூன் மாதத்தில் ஈரான்-இஸ்ரேல் இடையே நடைபெற்ற 12 நாள் போரில் ஈரானில் உள்ள அணுசக்தி மையங்கள் மீது அமெரிக்கா குண்டுவீசி தாக்குதல் நடத்தியது.

அணுசக்தி திட்டம் தொடா்பான பேச்சுவாா்த்தை மீண்டும் தொடங்கியுள்ள நிலையில், இரண்டாம் கட்டப் பேச்சுவாா்த்தை எப்போது, எங்கு நடைபெறும் என்பது குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை.

X
Dinamani
www.dinamani.com