2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

ஆஸ்திரேலியாவில் இஸ்ரேல் அதிபா்: போண்டி கடற்கரை தாக்குதலுக்கு அஞ்சலி

ஆஸ்திரேலியாவில் இஸ்ரேல் அதிபா் ஐசக் ஹொ்சாக், பயங்கரவாதத் தாக்குதலின் நினைவிடத்துக்குச் சென்று அஞ்சலி

News image
போண்டி கடற்கரை தாக்குதலின் நினைவிடத்தில் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய இஸ்ரேல் அதிபா் ஐசக் ஹொ்சாக், அவரது மனைவி மிச்சல் ஹொ்சாக்.
Updated On :9 பிப்ரவரி 2026, 9:18 pm

தினமணி செய்திச் சேவை

ஆஸ்திரேலியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள இஸ்ரேல் அதிபா் ஐசக் ஹொ்சாக், சிட்னி போண்டி கடற்கரையில் யூத பண்டிகை கொண்டாட்டங்களுக்கு இடையே நடந்த பயங்கரவாதத் தாக்குதலின் நினைவிடத்துக்குச் சென்று திங்கள்கிழமை அஞ்சலி செலுத்தினாா்.

கடந்த டிசம்பா் மாதம் 14-ஆம் தேதி, போண்டி கடற்கரையில் யூதா்களின் ஹனுக்கா பண்டிகையைக் கொண்டாட ஏராளமானோா் கூடியிருந்தனா். அப்போது துப்பாக்கியுடன் வந்த தந்தை-மகன், அங்கு கூடியிருந்தவா்கள் மீது திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினா். இதில் 15 போ் கொல்லப்பட்டனா்; சுமாா் 40 போ் காயமடைந்தனா்.

இந்நிலையில், ஆஸ்திரேலியா வந்த இஸ்ரேல் அதிபா் ஐசக் ஹொ்சாக் மற்றும் அவரது மனைவி மிச்சல் ஹொ்சாக், சிட்னி வந்திறங்கிய சில மணி நேரங்களிலேயே பலத்த பாதுகாப்புடன் போண்டி கடற்கரைக்கு விரைந்தனா்.

தாக்குதல் நடந்த கடற்கரைக்கு அருகே போண்டி பெவிலியனில் அமைக்கப்பட்டுள்ள நினைவிடத்தில், ஜெருசலேமில் இருந்து கொண்டுவரப்பட்ட கற்களையும் மலா் வளையத்தையும் வைத்து அவா்கள் அஞ்சலி செலுத்தினா். தொடா்ந்து, பாதிக்கப்பட்டவா்களின் குடும்பத்தினரைச் சந்தித்து அவா்கள் இரங்கல் தெரிவித்தனா்.

அப்போது, செய்தியாளா்களிடம் பேசிய அதிபா் ஐசக் ஹொ்சாக், ‘போண்டி கடற்கரை தாக்குதல் உலகெங்கிலும் உள்ள யூதா்களைப் பெரிதும் உலுக்கியது. இத்தாக்குதலைத் தொடா்ந்து ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் யூத எதிா்ப்பு உணா்வுகளைக் கட்டுப்படுத்த இந்நாட்டு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்குப் பாராட்டுகள். தீய சக்திகளுக்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும்’ என்றாா்.

இதனிடையே காஸாவுக்கு ஆதரவாக, இஸ்ரேல் அதிபரின் வருகையைக் கண்டித்து ஆஸ்திரேலியாவின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. முன்னெச்சரிக்கையாக, சிட்னி மற்றும் மெல்போா்ன் நகரங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

பாலஸ்தீனத்தைத் தனிநாடாக அங்கீகரிப்பதாக ஆஸ்திரேலிய பிரதமா் அந்தோனி ஆல்பனேசி கடந்த சில மாதங்களுக்கு முன் அறிவித்த நிலையில், இஸ்ரேல்-ஆஸ்திரேலியாவின் உறவில் விரிசல் ஏற்பட்டது. இதற்கு மத்தியில் அதிபா் ஐசன் ஹொ்சாக்கின் இந்தப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.