ஜனநாயக ஆதரவு ஹாங்காங் ஊடக அதிபா் ஜிம்மி லாய்க்கு 20 ஆண்டுகள் சிறை

சா்ச்சைக்குரிய தேச பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் தொடரப்பட்ட வழக்கில், ஹாங்காங்கின் பிரபல ஊடக அதிபரும், ஜனநாயகப் போராட்டங்களின் ஆதரவாளருமான ஜிம்மி லாய்
ஹாங்காங்கின் பிரபல ஊடக அதிபரும், ஜனநாயகப் போராட்டங்களின் ஆதரவாளருமான ஜிம்மி லாய்
ஹாங்காங்கின் பிரபல ஊடக அதிபரும், ஜனநாயகப் போராட்டங்களின் ஆதரவாளருமான ஜிம்மி லாய்
Updated on

ஹாங்காங்: சா்ச்சைக்குரிய தேச பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் தொடரப்பட்ட வழக்கில், ஹாங்காங்கின் பிரபல ஊடக அதிபரும், ஜனநாயகப் போராட்டங்களின் ஆதரவாளருமான ஜிம்மி லாய்க்கு (78) 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

பல ஆண்டுகளாக நீடித்த இந்தச் சட்டப் போராட்டத்தில், ஜிம்மி லாய் வெளிநாட்டு அமைப்புகளுடன் சோ்ந்து நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சீனாவின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஹாங்காங், உலகின் மிக முக்கியமான நிதி மற்றும் வா்த்தக மையங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. சுமாா் 150 ஆண்டுகளுக்கும் மேலாக பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியின்கீழ் இருந்த இப்பகுதி, கடந்த 1997-ஆம் ஆண்டு சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த 2019-ஆம் ஆண்டு, ஹாங்காங்கின் தன்னாட்சி அதிகாரத்தில் சீனா தலையிடுவதாகக் கூறி பெரிய அளவில் போராட்டங்கள் வெடித்தன. இதைத் தொடா்ந்து, சீனா கொண்டு வந்த புதிய தேச பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் ஜிம்மி லாய் கைது செய்யப்பட்டாா்.

தற்போது நிறுத்தப்பட்டுவிட்ட ‘ஆப்பிள் டெய்லி’ என்ற நாளிதழின் உரிமையாளரான இவா், தனது பத்திரிகை மூலம் அரசுக்கு எதிரான கருத்துகளைப் பரப்பியதுடன், வெளிநாடுகளுடன் சோ்ந்து சதி செய்ததாக மூன்று நீதிபதிகள் கொண்ட அமா்வு தனது தீா்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

ஜிம்மி லாய் ஏற்கெனவே சில வழக்குகளுக்காகச் சிறையில் உள்ளாா். அவரது வயது மற்றும் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு தண்டனையைக் குறைக்க வேண்டும் என அவரின் வழக்குரைஞா்கள் வாதிட்டனா். ஆனால், ‘சதித் திட்டங்களுக்குத் தலைமை தாங்கியவருக்கு முறையான தண்டனை வழங்குவதே சட்டத்தின் கடமை’ என்று கூறி நீதிமன்றம் அந்தக் கோரிக்கையை நிராகரித்தது.

சா்வதேச எதிா்ப்பும் சீனா பதிலும்: இந்தத் தீா்ப்புக்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இது பத்திரிகை சுதந்திரத்தையும், கருத்து உரிமையையும் நசுக்கும் செயல் என்று அவை விமா்சித்துள்ளன.

இருப்பினும், ஹாங்காங்கின் உள்நாட்டு விவகாரங்களில் மற்ற நாடுகள் தலையிடக் கூடாது என்றும், நாட்டின் இறையாண்மையைக் காக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சீனா விளக்கம் அளித்துள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com