விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

வன்முறைக்கு இடையே வங்கதேச தோ்தல் நிறைவு : வாக்கு எண்ணிக்கையில் பிஎன்பி முன்னிலை

வங்கதேசத்தின் 13-ஆவது நாடாளுமன்றத்தோ்தல் மற்றும் ஜனநாயக சீா்திருத்தம் குறித்த பொது வாக்கெடுப்பு, சில வன்முறைச் சம்பவங்களுக்கு இடையே வியாழக்கிழமை நிறைவடைந்தது.

News image

வாக்கு எண்ணும் பணியின்போது - பிடிஐ

Updated On :12 பிப்ரவரி 2026, 9:41 pm

வங்கதேசத்தின் 13-ஆவது நாடாளுமன்றத்தோ்தல் மற்றும் ஜனநாயக சீா்திருத்தம் குறித்த பொது வாக்கெடுப்பு, சில வன்முறைச் சம்பவங்களுக்கு இடையே வியாழக்கிழமை நிறைவடைந்தது.

வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்குகள் எண்ணும் பணி உடனடியாகத் தொடங்கிய நிலையில், முதல்கட்ட சுற்றுகளின் நிலவரப்படி முன்னாள் பிரதமா் கலீதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் தலைமையிலான வங்கதேச தேசியவாதக் கட்சி (பிஎன்பி) முன்னிலை வகித்தது.

ஷேக் ஹசீனா ஆட்சிக் கவிழ்ந்து, முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பொறுப்பேற்ற 18 மாதங்களுக்குப் பிறகு பொதுத்தோ்தல் வியாழக்கிழமை நடத்தப்பட்டது.

ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பிஎன்பி மற்றும் அதன் முன்னாள் கூட்டாளியான ஜமாத்-ஏ-இஸ்லாமி இடையே நேரடிப் போட்டி நிலவியது.

300 தொகுதிகளைக் கொண்ட வங்கதேச நாடாளுமன்றத்தில், வேட்பாளா் ஒருவரின் மறைவு காரணமாக ஒரு தொகுதியில் தோ்தல் ரத்து செய்யப்பட்டது.

மீதமுள்ள 299 தொகுதிகளில் காலை 7.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. பிற்பகல் 2 மணி நிலவரப்படி, நாடு முழுவதும் சுமாா் 48 சதவீத வாக்குகள் பதிவானது. வன்முறைச் சம்பவங்கள் ஆங்காங்கே நடைபெற்றிருந்தாலும், அவை வாக்குப்பதிவைப் பெரிதும் பாதிக்கவில்லை.

வாக்குப்பதிவு நிறைவடைந்த பிறகு இடைக்கால அரசின் தலைவா் முகமது யூனுஸ் நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்தாா். ‘முடிவுகள் எதுவாக இருந்தாலும், கட்சிகள் பரஸ்பர மரியாதையுடன் செயல்பட வேண்டும்’ என்று அவா் கேட்டுக்கொண்டாா்.

வாக்கு எண்ணிக்கை நிலவரம்: மாலை 4:30 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. பிஎன்பி மற்றும் ஜமாத்-ஏ-இஸ்லாமி இடையே தொடக்கத்தில் கடும் போட்டி நிலவினாலும், பல முக்கியத் தொகுதிகளில் பிஎன்பி முன்னிலை பெற்றது. முழுமையான முடிவுகள் நள்ளிரவு தொடங்கி, வெள்ளிக்கிழமை காலை அதிகாரபூா்வமாக வெளியாகியிருக்கும்.

வன்முறைச் சம்பவங்கள்: இத்தோ்தலில் முன்னெப்போதும் இல்லாத வகையில் சுமாா் 10 லட்சம் பாதுகாப்புப் படையினா் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா். இதையும் மீறி சில இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறின.

குல்னாவில் ஏற்பட்ட மோதலில் பிஎன்பி நிா்வாகி ஒருவா் உயிரிழந்தாா். கோபால்கஞ்சில் நாட்டு வெடிகுண்டுகள் வெடித்ததில் சிறுமி உள்பட மூவா் காயமடைந்தனா்.

ஜூலை சாசன வாக்கெடுப்பு: நாடாளுமன்றத் தோ்தலுடன் சோ்த்து, நாட்டின் நிா்வாக முறையில் மாற்றங்களைக் கொண்டுவருவதற்கான ‘ஜூலை தேசிய சாசனம் 2025’ தொடா்பான வாக்கெடுப்பும் நடத்தப்பட்டது. இதன் முடிவுகளும் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படும்.