அமெரிக்க காவல் வாகனம் மோதி பலியான இந்திய பெண் குடும்பத்துக்கு ரூ.265 கோடி இழப்பீடு
கடந்த 2023ஆம் ஆண்டு அமெரிக்காவில் காவல்துறை வாகனம் மோதியதில் பலியான ஆந்திரப் பிரதேசத்தின் கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்த ஜாஹ்னவி கண்டுலா (23) என்ற இளம்பெண் குடும்பத்துக்கு ரூ.265 கோடியை வழங்க சியாட்டில் நகர நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது.
அமெரிக்காவின் சியாட்டில் நகரிலுள்ள ‘நார்த் ஈஸ்டெர்ன்’ பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பு படித்து வந்த கண்டுலா, சாலையைக் கடக்கும்போது, வேகமாக வந்த காவல்துறை வாகனம் மோதி பலியானார்.
இது குறித்து வெளியான தீர்ப்பில், ஜாஹ்னவி கண்டுலா மரணம் இதயத்தை நொறுக்குவதாக உள்ளது. இந்த இழப்பீடு மூலம் கண்டுலா குடும்பத்துக்கு ஓரளவுக்கு நிவாரணம் கிடைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, விபத்தை ஏற்படுத்திய காவலர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று குடும்பத்தினர் போராடி வந்த நிலையில், இழப்பீடு குறித்து இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.
விபத்தின் பின்னணி!
கடந்த 2023ஆம் ஆண்டு ஆண்டு ஜனவரி மாதம் 23-ஆம் தேதி, சியாட்டில் நகரில் சாலையை கடக்க முற்பட்டபோது அவ்வழியாக வேகமாக வந்த காவல்துறை ரோந்து வாகனம் மோதியதில் மாணவி ஜாஹ்னவி கண்டுலா 100 அடி தொலைவுக்கு தூக்கி வீசப்பட்டதில், சம்பவ இடத்திலேயே பலியானார்.
சம்பவத்தன்று வாகனத்தை இயக்கிய காவல்துறை அதிகாரி கெவின் டேவ், அதிவேகமாக, 100 கி.மீ வேகத்துக்கும் அதிகமாக, வாகனத்தை ஓட்டியதே இந்த கோர விபத்துக்கான முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. அதிவேகமாக வாகனத்தை இயக்கும் போது, சாலையில் செல்லும் பயணிகளை எச்சரிக்கும் வகையில் வாகனத்தின் சைரன் ஒலிக்கப்படவில்லை என்பதும், முகப்பு விளக்குகள் எரியப்படாததால், இவற்றை கவனிக்காத மாணவி ஜாஹ்னவி கண்டுலா, சாலையை கடக்க முயன்றபோது கண்ணிமைக்கும் நேரத்திற்குள் விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்ச்சையான கேமரா காட்சிகள்
காவல் வாகனம் மோதி இந்திய மாணவி பலியான சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில், விபத்து தொடர்பான, கண்காணிப்புக் கேமரா காட்சிகள் சில, சியாட்டில் நகர காவல்துறையால் வெளியிடப்பட்டிருந்தது.
அந்த சிசிடிவி காட்சிகளும் சர்ச்சையை ஏற்படுத்தின. அதில், கார் மோதி மாணவி தூக்கி வீசப்பட்ட காட்சிகளை, காவல்துறை அதிகாரி ஒருவர் சிரித்து ரசித்தபடியே பார்ப்பது பெரும் சர்ச்சையானது. இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரி மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
Approval to pay Rs. 265 crore in compensation to the family of an Indian woman who died in a police vehicle collision in the US.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

