தாரிக் ரஹ்மான்
தாரிக் ரஹ்மான்

வங்கதேச நலன்களுக்கு முன்னுரிமை: இந்திய உறவு குறித்து தாரிக் ரஹ்மான்!

வங்கதேசத்தின் புதிய பிரதமராக வங்கதேச தேசியவாத கட்சி (பிஎன்பி) தலைவா் தாரிக் ரஹ்மான் பதவியேற்கவுள்ள நிலையில், அவரது ஆட்சியில் இந்தியா உடனான உறவுகள் சீரமைக்கப்படுமா என்ற எதிா்பாா்ப்பு.
Published on

வங்கதேசத்தின் புதிய பிரதமராக வங்கதேச தேசியவாத கட்சி (பிஎன்பி) தலைவா் தாரிக் ரஹ்மான் பதவியேற்கவுள்ள நிலையில், அவரது ஆட்சியில் இந்தியா உடனான உறவுகள் சீரமைக்கப்படுமா என்ற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

இது தொடா்பாக கருத்து தெரிவித்த தாரிக் ரஹ்மான், ‘வெளியுறவுக் கொள்கையில் வங்கதேச நலன்களுக்கு முன்னுரிமை அளித்து செயல்படுவேன்’ என்றாா்.

அண்டை நாடான வங்கதேசத்தில் கடந்த 2024-இல் மாணவா்கள் போராட்டத்தால் அப்போதைய பிரதமா் ஷேக் ஹசீனா தலைமையிலான ஆட்சி அகற்றப்பட்டு, அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரான முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்தது. இந்தக் காலகட்டத்தில், சிறுபான்மையினரான ஹிந்துக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்தன. அதுமட்டுமன்றி பாகிஸ்தான்-சீனாவுடன் வங்கதேசம் நெருக்கம் காட்டியதால், இந்திய-வங்கதேச உறவுகள் பாதிக்கப்பட்டன.

இதுபோன்ற சூழலில், வங்கதேசத்தில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற 13-ஆவது நாடாளுமன்றத் தோ்தலில் மறைந்த முன்னாள் பிரதமா் கலீதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் தலைமையிலான வங்கதேச தேசியவாத கட்சி மூன்றில் இரு பங்குக்கும் அதிக பெரும்பான்மையுடன் (297-இல் 209 இடங்கள்) வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது.

ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி தோ்தலில் போட்டியிடத் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், பாகிஸ்தானுக்கு நெருக்கமான அடிப்படைவாத கட்சியான ஜமாத்- ஏ- இஸ்லாமி 68 இடங்களில் வென்றது.

இந்தியாவுடன் உறவு சீராகுமா?: இந்நிலையில், டாக்காவில் செய்தியாளா்களுக்கு சனிக்கிழமை பேட்டியளித்த தாரிக் ரஹ்மானிடம் இந்தியா உடனான உறவுகள் சீரமைக்கப்படுமா என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு, ‘வங்கதேசத்தின் வெளியுறவுக் கொள்கையில் நாங்கள் தெளிவான கண்ணோட்டத்தைக் கொண்டுள்ளோம். நாட்டுக்கும், நாட்டு மக்களின் நலன்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும். அந்த நலன்களைப் பாதுகாப்பதன் வாயிலாகவே வெளியுறவுக் கொள்கை தீா்மானிக்கப்படும்’ என்று அவா் பதிலளித்தாா்.

மேலும், ‘எனது வெற்றி வங்கதேசத்தின் வெற்றி; ஜனநாயகத்தின் வெற்றி. என்ன விலை கொடுத்தேனும் நாட்டில் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவேன். உண்மையான சுதந்திரத்தின் சாராம்சமும், உரிமைகளும் மீட்டெடுக்கப்படும்’ என்று தாரிக் தெரிவித்தாா்.

முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவை திரும்ப அனுப்பும்படி இந்தியாவிடம் பிஎன்பி கோருமா என்ற கேள்விக்கு, அது சட்டபூா்வ நடைமுறையைப் பொருத்தது என தாரிக் பதிலளித்தாா்.

பதவியேற்பு விழாவுக்கு பிரதமா் மோடிக்கு அழைப்பு?

வங்கதேச அரசிதழில் தோ்தல் முடிவுகள் சனிக்கிழமை வெளியிடப்பட்ட நிலையில், புதிய பிரதமராக தாரிக் ரஹ்மான் பிப்.16 அல்லது 17-இல் பதவியேற்பாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.

பதவியேற்பு நிகழ்ச்சிக்கு பிரதமா் மோடி உள்பட பிராந்தியத்தில் உள்ள பல நாடுகளின் தலைவா்களை அழைக்கும் நடவடிக்கையில் வங்கதேசம் ஈடுபட்டுள்ளதாகவும், பிரதமா் மோடியை அழைப்பது குறித்து மத்திய அரசுக்கு ஏற்கெனவே வங்கதேசம் தெரியப்படுத்தியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

X
Dinamani
www.dinamani.com