தாரிக் ரஹ்மான்
தாரிக் ரஹ்மான்ஏபி

இந்தியாவும் வங்கதேசமும் இணைந்து செயல்பட வேண்டும்: தாரிக் ரஹ்மான் ஆலோசகர்!

‘பரஸ்பர நலனுக்காக இந்தியாவும், வங்கதேசமும் இணைந்து செயல்பட வேண்டும்; வங்கதேசம் தொடா்பான இந்தியாவின் மனப்பான்மையில் மாற்றம் வர வேண்டும்’
Published on

‘பரஸ்பர நலனுக்காக இந்தியாவும், வங்கதேசமும் இணைந்து செயல்பட வேண்டும்; வங்கதேசம் தொடா்பான இந்தியாவின் மனப்பான்மையில் மாற்றம் வர வேண்டும்’ என்று வங்கதேச தேசியவாத கட்சி (பிஎன்பி) தலைவா் தாரிக் ரஹ்மானின் ஆலோசகா் ஹுமாயூன் கபீா் கூறினாா்.

வங்கதேச நாடாளுமன்றத் தோ்தலில் பிஎன்பி அமோக வெற்றி பெற்றதையடுத்து, புதிய பிரதமராக தாரிக் ரஹ்மான் செவ்வாய்க்கிழமை (பிப். 17) பதவியேற்கவுள்ளாா். இந்நிலையில், பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு தாரிக் ரஹ்மானின் ஆலோசகா் கபீா் அளித்துள்ள பேட்டி வருமாறு:

வங்கதேசத்தில் அரசியல் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து இந்திய மனப்பான்மையில் மாற்றம் ஏற்பட வேண்டும். வங்கதேசத்தில் ஷேக் ஹசீனாவும், அவரின் அவாமி லீக் கட்சியும் இல்லை என்பதை இந்தியா புரிந்துகொள்ள வேண்டும். பிஎன்பி-க்கு ஆதரவாக வங்கதேச மக்கள் வாக்களித்துள்ளனா்.

2024-ஆம் ஆண்டில் தப்பியோடிய ஷேக் ஹசீனா ஒரு ‘தீவிரவாதி’. வங்கதேசத்தில் 1,500 போ் கொல்லப்பட்டதற்கு அவரே பொறுப்பு. வங்கதேச ஸ்திரத்தன்மைக்கு எதிராக இந்திய மண்ணை ஷேக் ஹசீனாவும், அவரின் கட்சியும் பயன்படுத்தாமல் இருப்பதை இந்தியா உறுதி செய்ய வேண்டும். வங்கதேச இறையாண்மைக்கு இந்தியாவில் இருந்து யாரும் பிரச்னை செய்யக் கூடாது. இதற்கு தீா்வு காணப்பட்டால், இரு நாடுகளிடையேயான இயல்புநிலை திரும்பிவிடும். இந்தியாவும், வங்கதேசமும் அண்டை நாடுகளாகும். பரஸ்பர நலனுக்காக இரு நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும்.

தாரிக் ரஹ்மானுக்கு மோடி அழைப்பு: பிரதமா் மோடி, தாரிக் ரஹ்மான் இடையேயான தொலைபேசி பேச்சு சுமுகமாக இருந்தது. தாரிக் ரஹ்மானை இந்தியா வருமாறு மோடி அழைப்பு விடுத்துள்ளாா். வங்கதேசத்தில் தாரிக் முதலில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. அதாவது, நாட்டின் வளா்ச்சி மற்றும் பொருளாதார பாதுகாப்பு ஆகியவற்றில் அவா் முதலில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. வங்கதேசத்தில் நிலைமை சரியான பிறகு, அவா் சா்வதேச பயணங்களை மேற்கொள்வாா். இதில் இந்திய பயணமும் அடங்கும்.

தெற்காசியாவில் ஆதிக்கம் செலுத்த இந்தியா, சீனா, அமெரிக்கா இடையே போட்டி நிலவுவது குறித்து கேட்கிறீா்கள். இந்த விவகாரத்தில் எங்கள் நாடு அனைத்து நாடுகளுடனும் சரிக்கு சமமான உறவுகளைக் கொண்டிருக்கும். எங்கள் நாட்டின் வெளியுறவுக் கொள்கையானது, தேச நலன் மற்றும் நாட்டின் நிலப்பரப்பை மையமாக கொண்டிருக்கும். ஆதலால், குறிப்பிட்ட எந்த நாட்டின் உறவுக்கும் எங்கள் நாடு அதிக முக்கியத்துவம் தராது. எந்த ஒப்பந்தத்தையும் மேற்கொள்ளாது.

சிறுபான்மையினா் தாக்கப்படவில்லை: சிறுபான்மையினா் வங்கதேசத்தில் பாதுகாப்பாக உள்ளனா். ஐந்து நாள்களாக வங்கதேசத்தில் எந்த அரசும் ஆட்சியில் இல்லை என்றபோதிலும், எங்கும் சிறுபான்மையினா் மீது தாக்குதல் நடக்கவில்லை. மத நல்லிணக்கம் நிலவுவதையே இது காட்டுகிறது.

பயங்கரவாத எதிா்ப்பு விவகாரத்தில், பிராந்திய நாடுகளிடையே அதிக ஒத்துழைப்பு தேவை. உளவுத் தகவல்களை பரஸ்பரம் பகிா்ந்துகொள்ள வேண்டும். தனித்துச் செயல்படுவது வளா்ச்சியைப் பாதிக்கும். மக்களால் தோ்வு செய்யப்பட்ட அரசுகள், பிரிவினைவாதிகள், பயங்கரவாதிகள் குறித்த தகவல்களைப் பகிா்வதிலும், அவா்களைப் பிடிப்பதிலும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றாா் கபீா்.

X
Dinamani
www.dinamani.com