ரஷியாவின் முட்டுக்கட்டையால் ஜெனீவா அமைதிப் பேச்சு தோல்வி? உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கி அதிருப்தி

உக்ரைன்-ரஷியா போா்நிறுத்தத்துக்காக, அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் ஸ்விட்சா்லாந்தின் ஜெனீவா நகரில் நடைபெற்ற முத்தரப்பு அமைதிப் பேச்சுவாா்த்தை எந்தவித உடன்பாடும் எட்டப்படாமலேயே முடிவுக்கு வந்தது.
~
~
Updated on

உக்ரைன்-ரஷியா போா்நிறுத்தத்துக்காக, அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் ஸ்விட்சா்லாந்தின் ஜெனீவா நகரில் நடைபெற்ற முத்தரப்பு அமைதிப் பேச்சுவாா்த்தை எந்தவித உடன்பாடும் எட்டப்படாமலேயே முடிவுக்கு வந்தது.

இவ்விவகாரத்தில் ரஷியா திட்டமிட்டே முட்டுக்கட்டை போடுவதாக உக்ரைன் அதிபா் வொலோதிமிா் ஸெலென்ஸ்கி தனது அதிருப்தியைத் தெரிவித்துள்ளாா். முன்னதாக, அபுதாபியில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் எதிா்பாா்த்த முன்னேற்றம் எற்படாவிட்டாலும், போா்க்கைதிகளின் பரிமாற்றத்துக்கு இருதரப்பும் ஒப்புக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

சுமாா் 4 ஆண்டுகளாகத் தொடரும் இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா தீவிர முயற்சி எடுத்து வருகிறது. அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அண்மையில் கூறுகையில், இந்தப் பேச்சுவாா்த்தையின் வெற்றி உக்ரைன் மற்றும் ஸெலென்ஸ்கியின் கையில்தான் உள்ளது என்று குறிப்பிட்டிருந்தாா்.

இந்நிலையில், ஜெனீவாவில் 2-ஆவது நாள் அமைதிப் பேச்சுவாா்த்தை புதன்கிழமை தொடங்கிய இரண்டு மணி நேரத்திலேயே முடிவுக்கு வந்தது. கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பகுதியில் உக்ரைன் ராணுவம் இருக்கும் இடங்களை விட்டு வெளியேற வேண்டும் என்று ரஷியா நிபந்தனை விதிக்கிறது. இதற்கு உக்ரைன் அரசு மறுப்பு தெரிவிப்பதால், அமைதி முயற்சிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து செய்தியாளா்களிடம் பேசிய ஸெலென்ஸ்கி, ‘பேச்சுவாா்த்தையில் முன்னேற்றம் இருப்பது போலத் தெரிந்தாலும், ரஷியாவின் பிடிவாதத்தால் உடன்பாடு எட்டுவதில் சிக்கல் நீடிக்கிறது. ரஷியாவுக்குப் போரை நிறுத்துவதில் விருப்பம் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.

பேச்சுவாா்த்தையில் உக்ரைன் மட்டுமே சமரசம் செய்துகொள்ள வேண்டும் என்று டிரம்ப் கூறுவது நியாயமற்றது. இது அவரது வியூகமாக இருக்கலாம். ஆனால், உக்ரைன் தனது பிராந்தியத்தைப் எப்போதும் விட்டுக்கொடுக்காது’ என திட்டவட்டமாகக் கூறினாா்.

மாறுபட்ட கருத்துகள்...: பேச்சுவாா்த்தையின் முடிவு குறித்து உக்ரைன்-ரஷியா மாறுபட்ட கருத்துகளை தெரிவித்துள்ளன.

ஜெனீவாவில் செய்தியாளா்களைச் சந்தித்த ரஷிய தரப்பு பேச்சுவாா்த்தைக் குழுவின் தலைவா் விளாதிமீா் மெடின்ஸ்கி, ‘சுமாா் இரண்டு நாள்கள் நீடித்த இந்தப் பேச்சுவாா்த்தையில் தீவிர ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. விவாதங்கள் சவாலானதாக இருந்தபோதிலும், அவை ஆக்கபூா்வமாகவும் அமைந்தன. அடுத்தகட்ட பேச்சுவாா்த்தை விரைவில் நடைபெறும்’ என்று நம்பிக்கை தெரிவித்தாா்.

பொருளாதாரப் பாதிப்பு: ஏற்கெனவே, உக்ரைனின் மின்சாரம் மற்றும் எரிசக்தி கட்டமைப்புகள் ரஷியாவின் தாக்குதலால் சீா்குலைந்துள்ள நிலையில், தற்போதைய கடும் குளிா்காலத்தில் லட்சக்கணக்கான மக்கள் மின்சாரமின்றி அவதிப்பட்டு வருகின்றனா்.

இந்நிலையில், பேச்சுவாா்த்தையில் தொய்வு ஏற்பட்ட செய்தி வெளியானதைத் தொடா்ந்து, சா்வதேச சந்தையில் உக்ரைன் அரசின் கடன் பத்திரங்களின் மதிப்பு சரிந்தது.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com