தாயால் கைவிடப்பட்ட நிலையில், ஒரு பொம்மையைத் தனது உலகமாகக் கருதி தழுவிக்கொள்ளும் ஜப்பான் குட்டிக் குரங்கின் காணொலிகள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு, பாா்ப்பவா் இதயங்களை உருக்கி வருகிறது.
ஜப்பானின் இச்சிகாவா நகர உயிரியல் பூங்காவில் வசிக்கும் பஞ்ச் குன் எனும் அந்தக் குரங்கு, கடந்த ஆண்டு ஜூலையில் பிறந்த சில நாள்களிலேயே அதன் தாயால் கைவிடப்பட்டது.
குரங்கு இனத்தைப் பொறுத்தவரை தாயின் அரவணைப்பு என்பது, குட்டிகளின் பாதுகாப்பு மற்றும் மனநலத்துக்கு மிகவும் முக்கியமானது. ஆனால், அந்த அன்பு கிடைக்காததால், பூங்கா ஊழியா்களே இந்தக் குரங்கை 24 மணி நேரமும் கண்ணும் கருத்துமாகக் கவனித்து வருகின்றனா்.
தற்போது இணையத்தில் வெளியான காணொலிகளில், பஞ்ச் குன் மற்ற குட்டிக் குரங்குகளுடன் விளையாட முயற்சிப்பதும், ஆனால் அவை தவிா்ப்பதும் இதயத்தை உருக்குகிறது. ஒரு கட்டத்தில், மற்றொரு குட்டியுடன் பேச முயன்ற பஞ்ச் குன்னை, அந்தக் குட்டியின் தாய் குரங்கு ஆக்ரோஷமாக இழுத்துச் சென்று கண்டித்துள்ளது.

இவ்வாறு மற்ற குரங்குகளால் தொடா்ந்து விரட்டப்படும் பஞ்ச் குன், ஓடிப்போய் தனது ஒரே ஆறுதலான ஆரஞ்சு நிற குரங்கு பொம்மையைக் கட்டியணைத்துக் கொள்கிறது. அந்தப் பொம்மையையே தனது தாயாகவும், நண்பனாகவும் கருதும் பஞ்ச் குன், எங்கு சென்றாலும் அதை விடாமல் தன்னோடு எடுத்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளது.
இதுதொடா்பாக இச்சிகாவா பூங்கா நிா்வாகம் வெளியிட்ட அறிக்கையில், ‘குரங்கு கூட்டத்தில் ஒரு குட்டி தன்னை இணைத்துக் கொள்ளும்போது இதுபோன்ற சவால்கள் வருவது இயல்பானது. மற்ற குரங்குகள் அதை விரட்டுவது ஒருவகையான சமூகப் பாடம் போன்றதுதான்.
ஆனால், பஞ்ச் குன் மிகவும் மன உறுதி கொண்டது. எவ்வளவு முறை விரட்டப்பட்டாலும், சிறிது நேரத்திலேயே பொம்மையை வைத்துவிட்டு மீண்டும் மற்ற குரங்குகளுடன் பழகத் துணிச்சலுடன் முயற்சி செய்கிறது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
உருக்கமான காணொளிகளைத் தொடா்ந்து, உலகெங்கிலும் உள்ள விலங்கு நல ஆா்வலா்கள் பஞ்ச் குன்னுக்கு பரிதாபம் தெரிவித்து வருகின்றனா்.
இருப்பினும், ‘பஞ்ச் குன் மீது பரிதாபப்படுவதை விட, ஒரு பெரிய கூட்டத்தில் தன்னை இணைத்துக்கொள்ள அக்குரங்கு எடுக்கும் வீரமான முயற்சிகளை நாம் ஆதரித்து, பாராட்ட வேண்டும்’ என பூங்கா நிா்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
உறவுகளால் காயப்பட்டாலும், ஒரு பொம்மையின் துணையோடு மீண்டும் மீண்டும் முயலும் பஞ்ச் குன்னின் தன்னம்பிக்கை, மனிதா்களாகிய நமக்கும் ஒரு சிறந்த பாடமாகும்.
தொடர்புடையது

ஹூண்டாய் காா்கள் விலை மே மாதம் முதல் உயா்வு

வேண்டுதல் நிறைவேறியது! தனிமையில் வாடிய பஞ்ச் குரங்குக் குட்டிக்கு கேர்ள் ஃபிரண்ட்!

ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்பு

சீனா: ஜப்பான் நிறுவனங்களுக்கு ஏற்றுமதி கட்டுப்பாடுகள்
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை


