அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை இருப்பதாகப் பேசிய அமெரிக்கத் தூதருக்கு பாகிஸ்தான் உள்ளிட்ட 14 நாடுகள் கண்டனம்
இஸ்ரேலுக்கான அமெரிக்கத் தூதர் மைக் ஹக்காபே
இஸ்ரேலுக்கான அமெரிக்கத் தூதர் மைக் ஹக்காபே
Updated on
1 min read

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை இருப்பதாகப் பேசிய அமெரிக்கத் தூதருக்கு பாகிஸ்தான் உள்ளிட்ட 14 நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

ஹமாஸ் அமைப்பினரின் தாக்குதலுக்குப் பதிலடியாக காஸா மீது இஸ்ரேல் 2 ஆண்டுகளுக்கும் மேலாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மத்திய கிழக்கில் பதற்றம் நிலவும் நிலையில், அண்மையில் பாலஸ்தீனத்தின் மேற்குக் கரையில் நிலப்பதிவு மேற்கொள்ளும் திட்டத்துக்கு இஸ்ரேல் ஒப்புதல் அளித்திருப்பது, அந்த பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இஸ்ரேலுக்கான அமெரிக்கத் தூதர் மைக் ஹக்காபே அண்மையில் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவரிடம் பைபிளில் இராக்கில் ஓடும் யுப்ரேடீஸ் நதி மற்றும் எகிப்தில் ஓடும் நைல் நதிக்கு இடைப்பட்ட பகுதி இஸ்ரேலுக்குச் சொந்தமானது எனக் கூறப்பட்டிருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்குப் பதிலளித்த அமெரிக்கத் தூதர், அந்த பகுதி அனைத்தையும் இஸ்ரேல் எடுத்துக் கொண்டால் நல்லது என்று கூறினார்.

இஸ்ரேலின் தீவிர ஆதரவாளராக கருதப்படும் அவரின் இந்தக் கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கருத்துக்கு, பாகிஸ்தான், எகிப்து, ஜோர்டான், ஐக்கிய அரபு அமீரகம், இந்தோனேசியா, துருக்கி, சவூதி அரேபியா, கத்தார், குவைத், ஓமன், பஹ்ரைன், லெபனான், சிரியா, பாலஸ்தீனம் ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சகங்களும், இஸ்லாமிய நாடுகளின் ஒத்துழைப்பு அமைப்பு (ஓஐசி), அரபு நாடுகளின் கூட்டமைப்பு (எல்ஏஎஸ்), வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (TCC) ஆகியவையும் கண்டனம் தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, அபாயகரமான மற்றும் ஆத்திரத்தை ஏற்படுத்தும் அந்த கருத்துகளை நிராகரிக்கிறோம். அந்தக் கருத்து சர்வதேச சட்டம் மற்றும் ஐ.நா. விதிகளுக்கு எதிரானது. மத்திய கிழக்கு பிராந்திய பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கு அது அச்சுறுத்தலை ஏற்படுத்தும்.

காஸாவில் இஸ்ரேல் - ஹமாஸ் மோதலை முடிவுக்கு கொண்டு வரும் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் திட்டத்துக்கு முரணாக அமெரிக்கத் தூதரின் கருத்து உள்ளது. பாலஸ்தீனத்தில் ஆக்கிரமித்த இடம் அல்லது பிற அரபு நாடுகளில் ஆக்கிரமித்த நிலப்பகுதி மீது இஸ்ரேலுக்கு எந்த இறையாண்மையும் கிடையாது. மேற்குக் கரையை இஸ்ரேலுடன் இணைப்பது அல்லது காஸாவில் இருந்து அதை பிரிப்பது என்பதை ஒருபோதும் ஏற்கமுடியாது.

பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் மேற்கொண்ட ஆக்கிரமிப்பை விரிவாக்கம் செய்வதை எதிர்க்கிறோம். அதேபோல் அரேபிய நாடுகளின் இறையாண்மைக்கு விடுக்கப்படும் மிரட்டலையும் நிராகரிக்கிறோம்.

இஸ்ரேல் தொடர்ந்து எல்லை விரிவாக்க கொள்கைகளைக் கடைப்பிடிப்பதும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதும் இப்பிராந்தியத்தில் வன்முறையையும், மோதலையும் மேலும் அதிகரிக்கச் செய்யும் என எச்சரிக்கிறோம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com