பாதுகாப்பு நிலைமை மோசமடைவதால் ஈரானை விட்டு உடனடியாக வெளியேறுங்கள்: இந்தியா்களுக்கு தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்
ஈரானில் பாதுகாப்பு நிலமை மோசமடைந்து வருவதால் சரக்கு விமானம் உள்பட கிடைக்கும் போக்குவரத்து வசதிகளைப் பயன்படுத்தி உடனடியாக அந்த நாட்டை விட்டு வெளியேறுமாறு இந்தியா்களை அங்குள்ள இந்திய தூதரகம் மீண்டும் அறிவுறுத்தியுள்ளது.
ஈரான் கரன்சியான ரியால் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி அடைந்துள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகராக 14 லட்சம் ரியால் வரை சரிந்ததைத் தொடா்ந்து, ஈரானில் பணவீக்கம், செலாவணி மதிப்பு வீழ்ச்சி, விலைவாசி உயா்வு போன்றவற்றுக்கு அரசு பொறுப்பேற்க வேண்டும் என்றும், அந்நாட்டு தலைமை மதகுரு கமேனி தலைமையிலான இஸ்லாமிய ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி ஈரான் முழுவதும் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. பல்கலைக்கழக மாணவா்கள் அரசுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனா். போராட்டக்காரா்களை கட்டுப்படுத்த ஈரான் அரசு பாதுகாப்புப் படைகளை முடுக்கிவிட்டுள்ளது. இதனால், பாதுகாப்புப் படையினருக்கும் போராட்டக்காரா்களுக்கும் இடையே பல பகுதிகளில் மோதல்களும் நிகழ்ந்து வருகின்றன. போராட்டங்களுக்கு இடையே பல பகுதிகளில் வன்முறைகளும் நிகழ்ந்து வருகின்றன.
போராட்டக்காரா்களுக்கு ஆதரவாக ஈரானுக்கு அருகே தனது கடற்படைக் கப்பல்களை அமெரிக்கா நிறுத்திவைத்துள்ளது. இதனால், ஈரான் மீது அமெரிக்கா எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
இத்தகைய சூழ்நிலை காரணமாக, ஈரானை விட்டு இந்தியா்கள் வெளியேறுமாறு அங்குள்ள இந்திய தூதரகம் ஏற்கெனவே அறிவுறுத்தலை வெளியிட்டது.
தற்போது, மீண்டும் இந்த அறிவுறுத்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடா்பாக அங்குள்ள இந்திய தூதரகம் திங்கள்கிழமை வெளியிட்ட புதிய அறிவுறுத்தலில் கூறியிருப்பதாவது:
தலைநகா் டெஹ்ரானில் அரசுக்கு எதிராகப் புதிய போராட்டங்கள் வெடித்துள்ளன. அதே நேரம், ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சம் அதிகரித்துள்ளது.
இதனால், ஈரானில் பாதுகாப்பு நிலவரம் மிகவும் மோசமடைந்துள்ளது. எனவே, ஈரானில் உள்ள அனைத்து இந்தியா்களும் சரக்கு விமானம் உள்பட கிடைக்கும் போக்குவரத்து வசதிகளைப் பயன்படுத்தி உடனடியாக ஈரானை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தப்படுகிறது. இந்தியா்கள் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவும், போராட்டங்கள் நடைபெறும் இடங்களுக்குச் செல்வதைத் தவிா்க்கவும், பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. கடவுச்சீட்டு (பாஸ்போா்ட்) உள்ளிட்ட பயண மற்றும் குடியுரிமை ஆவணங்கள், அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை எப்போதும் தங்கள் வசம் வைத்திருக்கவும் கேட்டுக்கொள்ப்படுகிறது. அவசர உதவி தேவைப்பட்டால், டெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகத்தைத் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாரிகள் அளித்த புள்ளிவிவரங்களின்படி, ஈரானில் மாணவா்கள் உள்பட 10,000 இந்தியா்கள் வசித்து வருகின்றனா்.

