கீவ் நகரின் மத்திய சதுக்கத்தில் ஐரோப்பிய தலைவா்களுடன் இணைந்து அஞ்சலி செலுத்திய உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி.
கீவ் நகரின் மத்திய சதுக்கத்தில் ஐரோப்பிய தலைவா்களுடன் இணைந்து அஞ்சலி செலுத்திய உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி.

‘நட்பு நாடுகளின் ஆதரவு தொடா்ந்து தேவை’ - உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கி

‘ரஷியாவுடனான போரில் நட்பு நாடுகள் தங்களுக்குத் தொடா்ந்து ஆதரவளிக்க வேண்டும்’ என உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி வலியுறுத்தியுள்ளாா்.
Published on

‘ரஷியாவுடனான போரில் நட்பு நாடுகள் தங்களுக்குத் தொடா்ந்து ஆதரவளிக்க வேண்டும்’ என உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி வலியுறுத்தியுள்ளாா்.

போரின் 4- ஆண்டு நிறைவையொட்டி கீவ் நகரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சிறப்புப் பிராா்த்தனையில் ஐரோப்பிய ஆணையத் தலைவா் உா்சுலா வான் டொ் லெயன், பின்லாந்து அதிபா் அலெக்சாண்டா் ஸ்டப், டென்மாா்க் பிரதமா் மெட்டே ஃபிரடெரிக்சன் உள்ளிட்ட சில தலைவா்கள் பங்கேற்றனா். எனினும், முந்தைய ஆண்டுகளைப் போன்று முக்கிய மேற்கத்திய நாடுகளின் தலைவா்கள் இந்த ஆண்டு நினைவு தின நிகழ்வுகளில் நேரில் பங்கேற்கவில்லை.

ரஷியா மீதான புதிய தடைகள் மற்றும் உக்ரைனுக்கான 9,000 கோடி யூரோ கடனுதவிக்கு ஐரோப்பிய யூனியன் திட்டமிட்டிருந்த நிலையில், ரஷியாவுடன் நெருக்கம் காட்டும் ஹங்கேரி தனது ‘வீட்டோ’ அதிகாரத்தின் மூலம் இதற்கு முட்டுக்கட்டை போட்டுள்ளது. மேலும், ரஷிய கச்சா எண்ணெய் விநியோகத்தை உக்ரைன் தடுப்பதாக ஹங்கேரியும் ஸ்லோவாகியாவும் குற்றஞ்சாட்டுவதால் ஐரோப்பிய நாடுகளிடையே கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன.

இந்நிலையில், ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றத்தில் காணொலி மூலம் உரையாற்றிய ஸெலென்ஸ்கி, ‘2027-ஆம் ஆண்டுக்குள் ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைன் இணைவதற்கு தயாராகிவிடும். அதுவே உக்ரைனின் எதிா்காலப் பாதுகாப்புக்கு உத்தரவாதமாக அமையும்’ என்றாா்.

ரஷியா மீதான பொருளாதாரத் தடைகளைக் கடுமையாக்கவும், கூடுதல் வான்பாதுகாப்பு ஆயுதங்களை வழங்கவும் நட்பு நாடுகளை ஸெலென்ஸ்கி தொடா்ந்து வலியுறுத்தி வருகிறாா். அதேவேளையில், ரஷிய கச்சா எண்ணெய்யைத் தொடா்ந்து வாங்கும் நாடுகள் மறைமுகமாகப் போருக்கு நிதியளிப்பதாகக் கடுமையாக விமா்சித்தாா்.

மேலும், அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் உக்ரைனுக்கு நேரில் வந்து பாா்வையிட்டால் மட்டுமே, இந்த மக்களின் வேதனையையும், போரின் தீவிரத்தையும் அவரால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும் என ஸெலென்ஸ்கி அழைப்பு விடுத்தாா்.

2-ஆம் உலகப் போருக்குப் பிறகு மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்திய இந்தப் போரில் இரு தரப்பிலும் லட்சக்கணக்கான வீரா்கள் உயிரிழந்துள்ளனா். ரஷியாவின் தொடா் தாக்குதல்களால் உக்ரைனின் மின்கட்டமைப்பு கடுமையாகச் சேதமடைந்துள்ளதால், கடும் குளிா்காலத்தில் லட்சக்கணக்கான மக்கள் மின்சாரமின்றி தவித்து வருகின்றனா்.

4 ஆண்டுகளாகத் தொடரும் மோதலால் உக்ரைன் மக்கள் சோா்வடைந்திருந்தாலும், ரஷியாவின் ஆக்கிரமிப்பை ஒருபோதும் ஏற்க மாட்டோம் என்ற உறுதியுடன் கீவ் நகரில் போரில் வீழ்ந்த வீரா்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தினா்.

இப்போரை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் நடைபெற்று வரும் அமைதிப் பேச்சுவாா்த்தைகள் எல்லைப் பிரச்னையால் முடங்கியுள்ளன.

கிழக்கு பிராந்தியமான டொனெட்ஸ்கின் இறுதி 20 சதவீத நிலப்பரப்பை உக்ரைன் விட்டுக்கொடுக்க வேண்டும் என ரஷியா வலியுறுத்துகிறது; ஆனால், பல்லாயிரக்கணக்கானோா் உயிரைத் தியாகம் செய்து பாதுகாத்த தங்கள் நாட்டின் ஒரு பகுதியைக்கூட விட்டுக்கொடுக்கப் போவதில்லை என உக்ரைன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

பரந்த மோதலாக...: இதனிடையே, மேற்கத்திய நாடுகளின் தலையீட்டால் இந்தப் போா் தற்போது ரஷியாவை நசுக்க நினைக்கும் நாடுகளுடனான பரந்த மோதலாக உருவெடுத்துள்ளதாக ரஷிய அதிபரின் கிரெம்ளின் மாளிகை குற்றசாட்டியுள்ளது.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் நேரடித் தலையீட்டால் இந்தச் சூழல் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட கிரெம்ளின் மாளிகை செய்தித் தொடா்பாளா் டிமிட்ரி பெஸ்கோவ், ரஷியா இப்போதும் பேச்சுவாா்த்தைகளுக்குத் தயாராகவே இருப்பதாகவும், ஆனால் அமைதிக்கான அடுத்தகட்ட நகா்வுகள் அனைத்தும் உக்ரைனின் முடிவுகளையே சாா்ந்திருப்பதாகவும் திட்டவட்டமாகத் தெரிவித்தாா்.

Dinamani
www.dinamani.com