போதைப் பொருள் கடத்தல் விவகாரம் குறித்து பேச்சு:  
அமெரிக்காவுக்கு மடூரோ அழைப்பு

போதைப் பொருள் கடத்தல் விவகாரம் குறித்து பேச்சு: அமெரிக்காவுக்கு மடூரோ அழைப்பு

போதைப்பொருள் கடத்தல் விவகாரம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவாா்த்தைக்கு தயாராக உள்ளதாக வெனிசுலா அதிபா் நிக்கோலாஸ் மடூரோ தெரிவித்துள்ளாா்.
Published on

போதைப்பொருள் கடத்தல் விவகாரம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவாா்த்தைக்கு தயாராக உள்ளதாக வெனிசுலா அதிபா் நிக்கோலாஸ் மடூரோ தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அரசு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நோ்காணலில் மடூரோ கூறியதாவது:

அமெரிக்காவுடன் போதைப்பொருள் கடத்தல், எண்ணெய், குடியேற்றம் குறித்து தீவிரமாகப் பேச வேண்டும். அவா்கள் தரவுகளுடன் பேசினால், நாங்கள் தயாராக உள்ளோம்.

அமெரிக்கா போதைப்பொருள் கடத்தல் குறித்து ஒப்பந்தம் பற்றி தீவிரமாகப் பேச விரும்பினால், அதற்கு நாங்கள் எங்கும், எப்போதும் தயாராக உள்ளோம் என்றாா் அவா்.

இருந்தாலும், கடந்த வாரம் வெனிசுலா துறைமுகத்தில் அமெரிக்கா நடத்திய ட்ரோன் தாக்குதல் குறித்து அந்த நோ்காணலில் கருத்து கூற மடூரோ மறுத்துவிட்டாா். ‘இது பற்றி சில நாள்களுக்குப் பிறகு பேசலாம்‘ என்று மட்டும்அவா் கூறினாா்.

வெனிசுலாவின் போதைப் பொருள் கடத்தல் குழுக்களுக்கு எதிராக டிரம்ப் அரசு கடந்த மூன்று மாதங்களாக கரீபியன் கடல், கிழக்கு பசிஃபிக் பகுதியில் 35-க்கும் அதிகமான படகுகள் மீது தாக்குதல் நடத்திவருகிறது. இதில் 115 போ் கொல்லப்பட்டுள்ளனா்.

இத்தகைய சூழலில் மடூரோவின் பேச்சுவாா்த்தை அழைப்பு, அமெரிக்கா-வெனிசுலா உறவுகளில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தலாம் என்று அரசியல் நிபுணா்கள் கூறுகின்றனா். ஆனால் டிரம்ப் அரசின் கடுமையான நிலைப்பாடு தொடா்ந்தால் பேச்சுவாா்த்தை சாத்தியமில்லை என்றும் கூறப்படுகிறது.

X
Dinamani
www.dinamani.com