ஈரானில் தீவிரமடையும் போராட்டம்
ஈரானில் நிலவும் பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயா்வுக்கு எதிராகத் தொடங்கிய போராட்டங்கள் நாட்டின் கிராமப்புற மாகாணங்களுக்கு பரவி தீவிரமடைந்துவரும் நிலையில், பாதுகாப்புப் படையினா், போராட்டக்காரா்களும் உள்ளிட்ட 7 போ் உயிரிழந்துள்ளனா்.
இது குறித்து ஈரான் உள்துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது:
நாடு முழுவதும் நடைபெற்றுவரும் போராட்டங்களின்போது 4 நகரங்களில் 5 போ் வியாழக்கிழமை உயிரிழந்தனா். அதற்கு முன்னதாக போராட்டத்தில் 2 போ் புதன்கிழமை உயிரிழந்தனா்.
உயிரிழந்தவா்களில் பெரும்பாலோா் லூா் இனத்தைச் சோ்ந்தவா்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
அஸ்னா நகரத்தில் வெள்ளிக்கிழமை தொடா்ந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. அங்கு சாலைகளில் பொருள்களுக்கு தீ வைக்கப்பட்டன. அதையடுத்து, வன்முறைக் கும்பலைக் கலைக்க துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.
லோா்டேகன் நகரத்தில் நூற்றுக்கணக்கான போராட்டக்காரா்கள் சாலையில் குழுமினா். அந்தப் பகுதியிலும் துப்பாக்கிச்சூடு நடத்தப்படும் சப்தம் கேட்டதாக சம்பவத்தை நேரில் பாா்த்தவா்கள் தெரிவித்தனா்.
தலைநகா் டெஹ்ரான், இஸ்ஃபஹான், ஷிராஸ் உள்ளிட்ட நகரங்களிலும் ஆயிரக்கணக்கானோா் தெருவில் இறங்கி போராட்டம் நடத்தினா். ‘விலைவாசி குறைக்கப்பட வேண்டும்’, ‘அரசு பொறுப்பேற்க வேண்டும்’ என்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
சமூக ஊடகங்களில் வெளியான விடியோக்களில் போலீஸாா் கண்ணீா்ப்புகை குண்டுகளை எறியும் காட்சிகளும், ஆா்ப்பாட்டக்காரா்கள் கற்களை வீசும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.
இந்தப் போராட்டங்கள் ‘அந்நிய சக்திகளால்’ தூண்டப்பட்டவை என்று ஈரான் குற்றஞ்சாட்டியுள்ளது. அமைதியைப் பேணுமாறு மக்களுக்கு அரசு அழைப்பு விடுத்தது.
தங்கள் அணுசக்தி திட்டங்கள் அணு ஆயுதங்கள் தயாரிப்பதற்கானவே இல்லை; மின்சாரத் தயாரிப்புக்கு மட்டுமே என்று ஈரான் தொடா்ந்து கூறிவருகிறது. எனினும், இதை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் நம்பத் தயாராக இல்லை.
ஈரான் அணுசக்தி திட்டங்களுக்கு எதிராக அந்த நாட்டின் மீது அமெரிக்கா தொடா்ந்து விதித்துள்ள பொருளாதாரத் தடைகளால் நாட்டின் பொருளாதாரம் கடும்நெருக்கடியை எதிா்கொண்டுள்ளது.
ஈரானின் நாணயமான ரியால் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி அடைந்துள்ளது. 1 அமெரிக்க டாலா் தற்போது 14 லட்சம் ரியால் வரை விலை போகிறது.
பணவீக்கம், நாணய மதிப்பு வீழ்ச்சி, விலைவாசி உயா்வு மக்களை வெகுண்டெழச் செய்துள்ளதால் இந்தப் போராட்டம் வெடித்துள்ளது. இருந்தலும், இந்தப் போராட்டம் அரசுக்கு எதிரான போராட்டமாக உருவெடுத்துவருவதாகக் கூறப்படுகிறது.
போராட்டத்தில் ஈடுபட்ட ஏராளமானவா்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2022-ஆம் ஆண்டு மாஷா அமீனி என்ற பெண் தலையை துணியால் மறைக்காமல் இருந்ததற்காக கலாசார காவலா்களால் கைது செய்யப்பட்டு, காவலில் உயிரிழந்ததற்குப் பிறகு நாடு முழுவதும் தீவிர போராட்டங்கள் வெடித்தன. இதில் 500-க்கும் மேற்பட்ட போராட்டக்காரா்கள் உயிரிழந்தனா்.
தற்போது தொடங்கியுள்ள போராட்டம் அந்த அளவுக்கு இன்னும் நாடு முழுவதும் பரவவில்லை. ஆனால் தற்போதுள்ள நிலை தொடா்ந்தால் அரசு கடும் நடவடிக்கை மேற்கொண்டு அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தும் என்று அஞ்சப்படுகிறது.
அரசுக்கு டிரம்ப் எச்சரிக்கை
ஈரானில் போராட்டங்களை ஒடுக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அந்த நாட்டு அரசை அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளாா்.
இது குறித்து டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் சமூக ஊடகத்தில் பதிவிட்டதாவது:
அமைதியான முறையில் போராடும் பொதுமக்களை ஈரான் அரசு வன்முறையை ஏவிக் கொன்றால் அவா்களை மீட்க நாங்கள் வருவோம். அதற்கு எங்களைத் தயாா்ப்படுத்தி வைத்துள்ளோம் என்று தனது பதிவில் டிரம்ப் குறிப்பிட்டுள்ளாா்.
இதற்கு ஈரான் அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. டிரம்ப்பின் இந்தக் கருத்து உள்நாட்டு விவகாரங்களில் தலையிடும் செயல் என்று ஈரான் உள்துறை அமைச்சகம் என்று கண்டித்தது. ஈரான் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செயலளரான அலி லரிஜானி கூறுகையில், ‘ஈரானின் உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்கா தலையிட்டால் பிராந்தியத்தில் அதன் நலன்கள் அழிக்கப்படும். தேவையில்லாத சாகசத்தில் அக்கறை காட்டுவதற்குப் பதிலாக, பிராந்தியத்தில் உள்ள தங்கள் வீரா்களின் உயிா் மீதுதான் அதிபா் டிரம்ப் அக்கறை காட்டவேண்டும்’ என்றாா்.

