

ஈரானுக்கு அத்தியாவசியமற்ற பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என்றும் இந்தியர்களுக்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
பணவீக்கம், நாணய மதிப்பு வீழ்ச்சி, விலைவாசி உயா்வு போன்றவற்றுக்கு அரசு பொறுப்பேற்க வேண்டும் எனவும், கமேனி தலையிலான ஆட்சி அகற்றப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தி நாடு முழுவதும் கடந்த மாத இறுதியில் தொடங்கிய போராட்டங்கள் 8-வது நாளை எட்டியுள்ளது.
தலைநகா் டெஹ்ரான் மற்றும் இஸ்ஃபஹான், ஷிராஸ், மஷ்ஹத் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட நகரங்களில் போராட்டங்கள் பரவியுள்ளன. போலீஸாருக்கும் ஆா்ப்பாட்டக்காரா்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் கண்ணீா்ப்புகை குண்டுகள், ரப்பா் குண்டுகள் பயன்படுத்தப்பட்டன.
இந்த நிலையில், ஈரானில் வசிக்கும் இந்தியர்களுக்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் முக்கிய அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.
அதில் தெரிவித்திருப்பதாவது:
”ஈரானில் ஏற்பட்டுள்ள சமீபத்திய நிகழ்வுகளைக் கருத்தில் கொண்டு, மறுஅறிவிப்பு வரும்வரை ஈரானிய இஸ்லாமிக் குடியரசுக்கு அத்தியாவசியமற்ற பயணக்களைத் தவிர்க்குமாறு இந்தியக் குடிமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தற்போது ஈரானில் உள்ள இந்தியக் குடிமக்களும், இந்திய வம்சாவளியினரும் உரிய முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். போராட்டங்கள் நடைபெறும் பகுதிகளைத் தவிர்ப்பதுடன், தெஹ்ரானில் உள்ள இந்தியத் தூதரகத்தின் இணையதளம் மற்றும் சமூக ஊடகப் பக்கங்களையும் உன்னிப்பாகக் கண்காணிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
வசிப்பிட விசாக்களின் கீழ் ஈரானில் வசிக்கும் இந்தியக் குடிமக்கள், இதுவரை பதிவு செய்யவில்லை என்றால், இந்தியத் தூதரகத்தில் பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.