

வங்கதேசத்தில் ஹிந்து பத்திரிகையாளர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பதற்றத்தைத் தூண்டியுள்ளது.
வங்கதேசத்தில் கடந்த ஆண்டு மாணவர்கள் போராட்டத்தால் ஷேக் ஹசீனா ஆட்சி அகற்றப்பட்ட பிறகு முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. இந்த இடைக்கால ஆட்சியில் ஹிந்துக்களைக் குறிவைத்து வன்முறைகள் அதிகரித்துள்ளன.
அண்மையில் மைமென்சிங் மாவட்டத்தில் ஹிந்து மதத்தைச் சோ்ந்த தொழிலாளி தீபு சந்திர தாஸ், மதமாற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறி, அடித்துக் கொல்லப்பட்டார்.
அவரது உடலைக் கட்டித் தொங்கவிட்டு, தீவைத்து எரித்த கொடூரம் அதிர்வலைகளை ஏற்படுத்திய அதிர்ச்சி மறைவதற்குள் ராஜ்பாரி பகுதியில் அம்ரித் மோண்டல் என்ற ஹிந்து இளைஞர் அடித்துக் கொல்லப்பட்டார்.
அதைத் தொடர்ந்து கோகோன் சந்திர தாஸ் என்ற ஹிந்து தொழிலதிபர், தனது கடையை அடைத்துவிட்டு வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தபோது கத்தியால் வெட்டப்பட்டு தீ வைத்துக் கொளுத்தப்பட்டதில் பரிதாபமாக பலியானார்.
இந்த நிலையில், பங்களாதேஷி டெய்லி (Bangladeshi daily) என்ற பத்திரிகை நிறுவனத்தில் தற்காலிக ஆசிரியராகப் பணியாற்றி வந்த ராணா பிரதாப் என்பவை மர்மநபர்கள் சிலர் அவரது தலையில் துப்பாக்கியால் சுட்டதில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார்.
தென்மேற்கு வங்கதேசத்தில் உள்ள ஜஷோரில் உள்ள மணிராம்பூர் மாவட்டத்தின் கோபாலியா பஜார் பகுதியில் திங்கள்கிழமை மாலை ராணா பிரதாப் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தலையில் சுட்டது மட்டுமின்றி அவரது தலையையும் துண்டித்துள்ளனர். உள்ளூர்வாசிகளின் தகவலின் படி, ராணா பிரதாப் மீது பல்வேறு வழக்குகள் பதியப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக பத்திரிகையின் ஆசிரியர் அபுல் காஷெம் கூறுகையில், “ராணா பிரதாப் எங்கள் தற்காலிக ஆசிரியராக இருந்தார். ஒரு காலத்தில் அவர் மீது வழக்குகள் இருந்தபோதிலும், அவை அவர் விடுவிக்கப்பட்டார். இந்தக் கொலைக்கு என்ன காரணம் என்று என்னால் சொல்ல முடியாது” எனத் தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் ஓய்வதற்குள் நர்சிங்டி மாவட்டத்தில் இரவு 10 மணியளவில் மளிகைக் கடை உரிமையாளரான சரத் சக்ரவர்த்தி, என்பவரை அடையாளம் தெரியாத சிலர் கத்தியால் குத்திக்கொன்றதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
வங்கதேசத்தில் சிறுபான்மையினரான ஹிந்துக்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில், கடந்த இரண்டு வாரங்களில் மூன்று ஆண்கள் கொல்லப்பட்டு, ஒரு விதவைப் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இருப்பினும், முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு சிறுபான்மையினரின் பாதுகாப்பை அரசு உறுதி செய்யும் என்றும் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.