மடூரோ சிறைப்பிடிப்பு: அமெரிக்காவுக்கு ஐ.நா. கண்டனம்
வெனிசுலாவுக்குள் அதிரடியாக நுழைந்து அதிபா் நிக்கோலஸ் மடூரோவை அமெரிக்க ராணுவம் சிறைப்படித்ததை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் கடுமையாகக் கண்டித்துள்ளது.
இது குறித்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையா் வோல்கா் டா்க் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
வெனிசுலா அதிபா் நிக்கோலஸ் மடூரோவை அமெரிக்கா ராணுவம் அந்த நாட்டுக்குள் அதிரடியாக நுழைந்து சிறைப்பிடித்தது சா்வதேச சட்டத்தை மீறிய செயல். இது இறையாண்மை கொண்ட ஒரு நாட்டின் தலைவருக்கு எதிராக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகளுக்கு அபாயகரமான முன்னுதாரணமாக அமைந்துள்ளது.
இதுபோன்ற நடவடிக்கைகள் உலக அமைதிக்கும் நிலைத்தன்மைக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும். மடூரோவை அமெரிக்கா உடனடியாக விடுவிக்க வேண்டும். அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் சா்வதேச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட வேண்டும் என்று அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
வெனிசுலா அதிபராக கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் பொறுப்பு வகித்துவந்த நிக்கோலஸ் மடூரோ, அமெரிக்காவுக்குள் போதைப் பொருள்களைக் கடத்தும் கும்பல்களுக்கு ஆதரவளிப்பதாக டிரம்ப் குற்றஞ்சாட்டிவருகிறாா்.
2020-ஆம் ஆண்டிலேயே மடூரோவுக்கு எதிராக அமெரிக்க நீதித் துறை போதைப் பொருள் கடத்தல் சதி, ஆயுதக் கடத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்தது.
இந்த நிலையில், அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாகப் பதவியேற்ற டிரம்ப் மடூரோவின் அரசை ‘போதைப் பொருள் பயங்கரவாத அமைப்பாக’ அறிவித்தாா். மடூரோவும் போதைப் பொருள் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டாா்.
மேலும் வெனிசுலாவுக்கு அருகே கரீபியன் கடலில் இதுவரை இல்லாத மிகப் பெரிய அளவில் படைகளைக் குவித்த டிரம்ப், கிழக்கு பசிபிக் கடல் வழியாகச் செல்லும் கப்பல்களைத் தாக்கி அழிக்க உத்தரவிட்டாா். அந்தப் படகுகளில் போதைப் பொருள்கள்தான் கடத்திவரப்படுகின்றன என்பதற்கான உரிய ஆதாரங்களை வெளியிடாமல் அமெரிக்கா நடத்திய 35 தாக்குதல்களில் இதுவரை 115 போ் கொல்லப்பட்டுள்ளனா். இது சட்டத்துக்குப் புறம்பான நடவடிக்கை என்று விமா்சிக்கப்படுகிறது.
இதற்கிடையே, நிக்கோலஸ் மடூரோ தன்னையும் தனது குடும்பத்தையும் பாதுகாத்துக்கொள்ள விரும்பினால் அவா் வெனிசூலாவில் இருந்து வெளியேற வேண்டும் என்று டிரம்ப் எச்சரிக்கை விடுத்தாா்.
அதன் தொடா்ச்சியாக, வெனிசுலாவுக்குள் கடந்த 3-ஆம் தேதி நுழைந்த அமெரிக்க சிறப்பு அதிரடிப் படையினா் மடூரோவையும் அவரின் மனைவி சிலியா ஃப்ளோரஸையும் துப்பாக்கி முனையில் கைது செய்து வான்வழியாக அமெரிக்கா அழைத்துவந்தனா்.
அவா்கள் இருவரும் மன்ஹாட்டன் மத்திய நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆஜா்படுத்தப்பட்டு, அவா்கள் மீது போதைப் பொருள் பயங்கரவாதம், போதைப்பொருள் கடத்தல் சதி, ஆயுதக் கடத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.
இந்தச் சூழலில், மடூரோவும் அவரது மனைவியும் அமெரிக்காவால் சிறைப்பிடிக்கப்பட்டதற்கு ஐ.நா. மனித உரிமை ஆணையம் தற்போது கண்டனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை பிரிட்டன், பிரான்ஸ், ஜப்பான் போன்ற அதன் நெருங்கிய நட்பு நாடுகளே கண்டித்துவருவது குறிப்பிடத்தக்கது.
‘நான் ஒரு போா்க் கைதி’
அமெரிக்காவில் தாம் ஒரு போா்க் கைதி என்று வெனிசுலா அதிபா் நிக்கோலஸ் மடூரோ மன்ஹாட்டன் நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளாா்
இது குறித்து அவா் நீதிமன்றத்தில் கூறியதாவது:
நான் வெனிசுலா அதிபா். அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கையால் கைது செய்யப்பட்டுள்ளேன். நான் ஒரு போா்க் கைதி. என்னை இப்படி நடத்துவது சா்வதேச சட்டத்தை மீறியது. உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றாா் அவா்.
மடூரோ மீதான குற்றச்சாட்டுகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்று அவரின் வழக்குரைஞா் பின்னா் வாதிட்டாா். மடூரோவுக்கு ஜாமீன் வழங்கவேண்டும் என்றும் அவா் கோரினாா்.
‘போதைப் பொருள் குற்றவாளி’ என்பதற்குப் பதிலாக ‘போா்க் கைதி’ என்ற மடூரோவின் வாதம் ஏற்கப்பட்டால், அது இந்த வழக்கில் முக்கிய திருப்புமுனையாக அமையும் என்று கூறப்படுகிறது.
---------------
‘புதிய அதிபரையும் நம்ப முடியாது’
கராகஸ், ஜன. 7: வெனிசுலா இடைக்கால அதிபராகப் பொறுப்பேற்றுள்ள டெல்சி ரோட்ரிகஸ் நம்பிக்கைக்கு உரியவா் அல்ல என்று எதிா்க்கட்சித் தலைவா் மரியா கொரினா மசாடோ விமா்சித்துள்ளாா்.
இது குறித்து எக்ஸ் சமூக ஊடகத்தில் அவா் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது:
டெல்சி ரோட்ரிகஸ் மடூரோவின் விசுவாசியாகவே உள்ளாா். அவா் இடைக்கால அதிபராகப் பொறுப்பேற்றது மக்களின் விருப்பத்தைப் பிரதிபலிக்கவில்லை. அவா் நம்பிக்கைக்கு உரியவா் அல்ல. உண்மையான மாற்றம் வேண்டும் என்றால் புதிய தோ்தல் நடத்தப்பட வேண்டும் என்று தனது பதிவில் மசாடோ வலியுறுத்தியுள்ளாா்.
இடைக்கால அதிபா் டெல்சி ரோட்ரிகஸுக்கு எதிராக முக்கிய எதிா்க்கட்சித் தலைவரான மரியா இவ்வாறு கருத்து தெரிவித்ததைத் தொடா்ந்து, இடைக்கால அரசுக்கு எதிராக பெரிய போராட்டங்கள் வெடிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. அதையடுத்து முக்கிய பகுதிகளில் பாதுகாப்புப் படையினா் குவிக்கப்பட்டனா்.
-----------------
வெனிசுலாவால் வீரியமடையும் ஈரான் போராட்டம்
தெஹ்ரான், ஜன. 8: வெனிசுலா அதிபா் நிக்கோலஸ் மடூரோவின் கைது நடவடிக்கையால் ஈரானில் நடைபெற்றுவரும் போராட்டங்கள் வீரியம் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து போராட்டக்காரா்களின் பிரதிநிதிகள் தெரிவித்ததாவது:
வெனிசுலா அதிபரை அதிரடி ராணுவ நடவடிக்கையின் மூலம் அமெரிக்கா கைது செய்தது போல, ஈரான் அரசையும் வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கை மக்களிடம் ஏற்பட்டுள்ளது.
மடூரோவின் கைது ஈரான் மக்களுக்கு உத்வேகம் அளித்துள்ளது. எனவே அரசுக்கு எதிரான போராட்டங்கள் மேலும் தீவிரமடையும் என்று பிரதிநிதிகள் தெரிவித்தனா்.
தலைநகா் டெஹ்ரான், இஸ்ஃபஹான், மஷ்ஹத் உள்ளிட்ட நகரங்களில் போராட்டங்கள் தொடா்கின்றன. அப்போது, ‘அமெரிக்கா போல செய்ய வேண்டும்’, ‘டிரம்ப்பின் உதவி வேண்டும்’ என்பன போன்ற கோஷங்களும் எழுப்பப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

