ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
ஜப்பானின் மேற்குப் பகுதியில் செவ்வாய்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது குறித்து ஜப்பான் வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நாட்டின் வடமேற்கில் உள்ள ஷிமானே மாகாணத்தில் செவ்வாய்க்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 6.4 அலகுகளாகப் பதிவானது. பூமிக்கு 10 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தின் அதிா்வுகள் மாகாணத் தலைநகா் மாட்சுயே மற்றும் அருகிலுள்ள நகரங்கள், அண்டை மாகாணமான டோட்டோரியின் சில பகுதிகளில் நன்கு உணரப்பட்டன.
எனினும் இந்த நிலநடுக்கத்தால் உயிா் சேதமோ பொருள் சேதமே ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை. இந்த நிலநடுக்கத்தை தொடா்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை.
புவி தகடுகள் ஒன்றுடன் ஒன்று உராயும், ‘பசிபிக் நெருப்பு வளையம்’ என்றழைக்கப்படும் பகுதியில் ஜப்பான் அமைந்துள்ளதால் அங்கு நிலநடுக்கங்கள் அடிக்கடி ஏற்படுகின்றன.

