

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு கோழை, துணிவிருந்தால் என்னை கைது செய்யட்டும் என கொலம்பியா அதிபர் குஸ்டாவோ பெட்ரோ சவால் விட்டுள்ளார்.
வெனிசுவேலாவிருந்து போதைப் பொருள்கள் கடத்திக் கொண்டு அமெரிக்கா வருவதாகவும் பல நாள்களாக அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றஞ்சாட்டிய அவர், அமெரிக்காவுக்கு கடல் வழியாக போதைப் பொருள்கள் கடத்திவரும் கப்பல்களையும் தாக்கி அழிக்க உத்தரவிட்டிருந்தார்.
அதைத் தொடர்ந்து, ஜன. 3 ஆம் தேதி காலை வெனிசுவேலாவின் தலைநகர் காரகஸ் உள்ளிட்டப் பகுதிகளில் அமெரிக்க ராணுவம் அதிரடியாக அத்துமீறி வான்வெளித் தாக்குதலைத் தொடர்ந்து, அந்நாட்டு அதிபர் நிகோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா ஃபுளோரஸ்ஸையும் அமெரிக்க படைகள் கைது செய்து, நாடுகடத்தி அமெரிக்காவின் நியூயாா்க் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆஜர்படுத்தியது.
இந்த விவகாரம் உலகளாவிய அரசியலில் மிகப் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்திய சூழலில், அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு துணிவிருந்தால் என்னை கைது செய்து அழைத்துச் செல்லட்டும் என கொலம்பியா அதிபர் குஸ்டாவோ பெட்ரோ சவால் விட்டுள்ளார்.
இதுதொடர்பாக கொலம்பியா அதிபர் குஸ்டாவோ பெட்ரோ கூறுகையில், “நான் யாருக்காகவும் பயப்படவில்லை. நீ விரும்பினால் உனக்காக நான் இங்கு காத்திருக்கிறேன். படையெடுப்புகளையோ, படுகொலைகளையோ, ஏவுகணைத் தாக்குதல்களையோ நான் ஏற்கவில்லை.
நான் உளவுத்துறையை ஏற்றுக்கொள்கிறேன். உளவுத்துறையுடன் வாருங்கள். நேருக்கு நேர் மோதிப் பார்ப்போம். அரசியல் மாஃபியாக்களால் கொலம்பிய மக்களை ஏமாற்றுவதை முதலில் நிறுத்துங்கள்.
கொலம்பியர்கள் 7 லட்சம் பேருக்கு அவர்கள் மரண தண்டனை அளித்துள்ளனர். நான் மீண்டும் ஒரு ஆயுதத்தைத் தொடமாட்டேன் என்று சத்தியம் செய்திருக்கிறேன். ஆனால், தாய்நாட்டிற்காக நான் மீண்டும் ஆயுதம் ஏந்தவும் தயாரக இருக்கிறேன்” என சவால் விடுத்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.