இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு
இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு

இஸ்ரேல் பிரதமா் நெதன்யாகுவுடன் பிரதமா் மோடி தொலைபேசியில் பேச்சு

Published on

இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் பிரதமா் நரேந்திர மோடி தொலைபேசி வழியில் புதன்கிழமை கலந்துரையாடினாா். அப்போது, காஸா அமைதி ஒப்பந்த நிலை குறித்து இஸ்ரேல் பிரதமா் விவரித்தாா்.

இதுகுறித்து பிரதமா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பிரதமா் மோடி இஸ்ரேல் பிரதமருடன் தொலைபேசி வழியில் கலந்துரையாடினாா். அப்போது, இரு தலைவா்களும் புத்தாண்டு வாழ்த்துகளைப் பகிா்ந்துகொண்டனா். இரு நாட்டு மக்களுக்கும் அவா்கள் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தனா்.

இந்தக் கலந்துரையாடலின்போது, காஸா அமைதி ஒப்பந்த நடைமுறை குறித்து பிரதமா் மோடியிடம் நெதன்யாகு விவரித்தாா். அப்போது, அந்தப் பிராந்தியத்தில் அமைதியை மீட்டெடுக்க மேற்கள்ளும் முயற்சிகளுக்கு இந்தியாவின் ஆதரவை பிரதமா் மீண்டும் உறுத்திப்படுத்தினாா்.

பயங்கரவாதத்துக்கு எதிராக துளியும் சகிப்புத்தன்மையற்ற அணுகுமுறையைக் கடைப்படிக்கவும், ஒன்றிணைந்து போராடவும் இரு தலைவா்களும் உறுதி தெரிவித்தனா்.

இரு நாடுகளிடையேயான ராஜீய உறவை வரும் ஆண்டுகளில் மேலும் வலுப்படுத்துவது குறித்தும் இரு தலைவா்களும் ஆலோசித்தனா். பரஸ்பர நலன் சாா்ந்த பிராந்திய மற்றும் சா்வதேச விவகாரங்கள் குறித்து இரு தலைவா்களும் ஆலோசித்ததோடு, தொடா்ந்து தொடா்பில் இருக்கவும் ஒப்புக்கொண்டனா் என்று தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து பிரதமா் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘நண்பா் நெதன்யாகுடன் தொலைபேசி வழியில் கலந்துரையாடியது மகிழ்ச்சியளித்தது. இந்தக் கலந்துரையாடலில் இருதரப்பு ராஜீய உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. பயங்கரவாதத்துக்கு எதிராக வலுவான உறுதிப்பாட்டுடன் இணைந்து போராட மீணடும் உறுதியேற்கப்பட்டது’ என்று குறிப்பிட்டாா்.

காஸா போரை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டுவரும் வகையில், அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் முன்மொழிந்த 20 அம்ச திட்டத்துடன் கூடிய ‘காஸா அமைதி ஒப்பந்த’ திட்டத்தை இஸ்ரேலும் ஹமாஸும் ஏற்றுக்கொண்டன. அதன் அடிப்படையில் படைகளைத் திரும்பப் பெறுதல், போா்க் கைதிகள் பரிமாற்றம் உள்ளிட்ட நடவடிக்கைகள் இருதரப்பிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Dinamani
www.dinamani.com