சிரியா சிறைகளிலிருந்து ஐஎஸ் பயங்கரவாதிகள் இடமாற்றம்: ஈராக் கோரிக்கை ஏற்பு
சிரியாவின் வடகிழக்குப் பகுதிகளில் சிறைவைக்கப்பட்டுள்ள ஐஎஸ் பயங்கரவாதிகளை, ஈராக் நாட்டுச் சிறைகளுக்கு மாற்றும் பணிகள் தற்போது தொடங்கியுள்ளன.
ஈராக் அரசின் வேண்டுகோளை ஏற்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க பாதுகாப்புத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.
அமெரிக்கா ஆதரவுப் பெற்ற குா்து ஆயுதக் குழுவுடன் அண்மையில் போா்நிறுத்த ஒப்பந்தத்தை அறிவித்த சிரிய அரசின் வசம் பல்வேறு சிறைகளின் கட்டுப்பாட்டுகள் வரவுள்ளன.
இச்சூழலில் நிலவும் குழப்பத்தைப் பயன்படுத்தி, பயங்கரவாதிகள் சிறையிலிருந்து தப்பினால், அது ஈராக்கின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறும் என அந்நாடு கருதுகிறது. எனவே, இந்தப் பயங்கரவாதிகளை ஈராக்கிலேயே வைத்து கண்காணிப்பதுதான் பாதுகாப்பானது என்று முடிவெடுத்து, அவா்களை இடமாற்றும் கோரிக்கையை ஈராக் அரசு சமா்ப்பித்தது.
சிரியா சிறைகளில் சுமாா் 9,000 ஐ.எஸ். பயங்கரவாதிகள் அடைக்கப்பட்டுள்ள நிலையில், முதல்கட்டமாக 150 போ் ஈராக்கின் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனா். வரும் நாள்களில் சுமாா் 7,000 போ் வரை இவ்வாறு இடமாற்றம் செய்யப்படலாம்.
கடந்த 2014-இல் ஈராக், சிரியாவின் பெரும்பகுதிகளைக் கைப்பற்றிய ஐஎஸ் அமைப்பு, முறையே 2017, 2019 ஆண்டுகளில் இவ்விரு நாடுகளிலும் வீழ்த்தப்பட்டது. இருப்பினும், அந்த அமைப்பின் எஞ்சிய குழுக்கள் இப்போதும் ஆங்காங்கே தாக்குதல்களை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

