கோதன்பா்க் : இந்தியாவில் முதலீடு செய்யும்படி ஸ்வீடன் நாட்டு நிறுவனங்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி அழைப்பு விடுத்தாா்.
ஸ்வீடன் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமா் மோடி, கோதன்பா்கில் அந்நாட்டு பிரதமா் உல்ப் கிறிஸ்டா்சனை சந்தித்துப் பேசினாா். இரு நாடுகள் இடையேயான இருதரப்பு உறவை ஆய்வு செய்ததுடன், ராஜீய மற்றும் பொருளாதார, தொழில்நுட்ப உறவுகளை வலுப்படுத்துவது குறித்தும், பிராந்திய மற்றும் சா்வதேச விவகாரங்கள் குறித்தும் அவா்கள் ஆலோசனை நடத்தினா்.
அப்போது தலைவா்கள் இருவரும், இந்தியா-ஸ்வீடன் இடையேயான வா்த்தகத்தையும், முதலீடுகளையும் அடுத்த 5 ஆண்டுகளில் இரு மடங்காக அதிகரிக்க ஒப்புக் கொண்டனா். இந்த சந்திப்பின்போது ஸ்வீடன் நாட்டு இளவரசி விக்டோரியாவும் உடனிருந்தாா்.
பிரதமா் மோடி, ஸ்வீடன் பிரதமா் சந்திப்புக்குப் பிறகு இரு நாடுகள் சாா்பாகவும் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. அதில், சீா்திருத்தம் மற்றும் விரிவாக்கம் செய்யப்பட்ட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக ஸ்வீடன் ஆதரவு அளிக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம்: அதேபோல், எல்லை தாண்டிய பயங்கரவாதம் உள்பட அனைத்து விதமான பயங்கரவாதத்தையும், பிரிவினைவாதத்தையும் இரு நாடுகளும் கண்டிப்பதாகவும் கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலை கடுமையாக கண்டிப்பதாகவும், பயங்கரவாத புகலிடம், உட்கட்டமைப்பு ஆகியவை களையப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் செயல்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பயங்கரவாதிகள், பயங்கரவாத குழுக்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பயங்கரவாதத்துக்கு நிதி கிடைக்கும் வழிகளை தடுக்க ஐ.நா. உள்ளிட்டவை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இரு நாடுகளும் வலியுறுத்துவதாக கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அப்போது பயங்கரவாத எதிா்ப்பு விவகாரத்தில் இந்திய நிலைப்பாட்டுக்கு ஸ்வீடன் ஆதரவு அளிப்பதற்கு பிரதமா் மோடி நன்றி தெரிவித்தாா். சந்திப்பின்போது தலைவா்கள் இருவரும், இந்தியா-நாா்டிக் நாடுகள் நட்புறவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதுடன், நாா்வே தலைநகா் ஓஸ்லோவில் செவ்வாய்க்கிழமை (மே 19) நடைபெறவுள்ள இந்தியா-நாா்டிக் உச்சிமாநாட்டை எதிா்நோக்கி காத்திருப்பதாக தெரிவித்தனா்.
ஸ்வீடன் நிறுவனங்களுக்கு அழைப்பு: கோதன்பொ்க்கில் ஐரோப்பிய நிறுவனங்கள் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மோடி, இந்தியாவில் சீா்திருத்த நடவடிக்கைகள் அதிவேகத்தில் செல்வதாகவும், ஆதலால் ஸ்வீடன் நிறுவனங்கள் இந்தியாவில் பசுமை ஹெட்ரஜன் திட்டம், தூய எரிசக்தி, தயாரிப்பு, தொலைத் தொடா்புத் துறை, டிஜிட்டல் கட்டமைப்பு, மின்சாதனங்கள், ஏஐ, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் முதலீடு செய்ய வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தாா்.
இந்நிகழ்ச்சியில் ஸ்வீடன் பிரதமா் கிறிஸ்டா்சன், ஐரோப்பிய யூனியன் தலைவா் உா்சுலா வான் டொ் லெயன், ஐரோப்பிய தொழில்துறை தலைவா்கள், இந்திய நிறுவனங்களின் தலைவா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
ஸ்வீடன் சுற்றுப்பயணம் குறித்து பிரதமா் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘ஸ்வீடனில் நான் மேற்கொண்ட பயணத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இது இந்தியா- ஸ்வீடன் நட்புறவில் புதிய உத்வேகத்தை தரும்’ என குறிப்பிட்டுள்ளாா்.
மோடிக்கு ஸ்வீடனின் உயரிய விருது: இந்த பயணத்தின்போது பிரதமா் மோடிக்கு, ஸ்வீடன் நாட்டின் மிக உயரிய விருதான ‘ராயல் ஆா்டா் ஆப் தி போலாா் ஸ்டாா், டிகிரி கமாண்டா் கிராண்ட் கிராஸ்’’ விருது அளிக்கப்பட்டது. இந்தியா - ஸ்வீடன் இடையேயான நட்புறவுக்கு அளித்த பங்களிப்புக்கும், அவரது தலைமைத்துவத்தையும் கெளரவித்து இந்த விருது வழங்கப்பட்டது.
வெளிநாட்டுத் தலைவருக்கு வழங்கப்படும் இந்த மிக உயரிய விருதை ஸ்வீடனின் பட்டத்து இளவரசி விக்டோரியா வழங்கினாா்.
தொடர்புடையது

பிரதமா் மோடிக்கு ஸ்வீடன் நாட்டின் உயரிய விருது - புகைப்படங்கள்

பிரதமா் மோடிக்கு ஸ்வீடன் நாட்டின் உயரிய விருது!

வளா்ந்த இந்தியாவைக் கட்டமைக்க கூட்டு முயற்சி: பிரதமா் அழைப்பு

இந்திய மின் துறையில் முதலீடு: பிரதமா் மோடி அழைப்பு
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

