அமெரிக்க இடைத்தேர்தல் அதிர்ச்சிக்குப் பின் எந்தப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை: ஈரான்
அமெரிக்க இடைத்தேர்தல் முடிவுகளால் ஏற்பட்ட அதிர்ச்சிக்குப் பின் மத்தியஸ்த நாடுகள் எந்த பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவில்லை என ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராகச்சி - கோப்புப் படம்
அமெரிக்கா - ஈரான் இடையே அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த முயற்சி செய்த மத்தியஸ்த நாடுகள், அமெரிக்க இடைத்தேர்தல் முடிவுகளால் ஏற்பட்ட அதிர்ச்சிக்குப் பின் எந்த பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவில்லை என ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராகச்சி தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் குடியரசுக் கட்சி அங்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பெரும் பின்னடைவைச் சந்தித்தது.
அதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர், "இந்தத் தேர்தல் முடிவுகளை அவர்கள் உள்வாங்க எவ்வளவு நாள் எடுக்கும் என்பதைப் பொறுத்தே, நாம் இந்த விவகாரத்தில் எந்தளவு முன்னேறப் போகிறோம் என்பதைத் தீர்மானிக்க முடியும். கடந்த சில நாள்களாக மத்தியஸ்தர்கள் எவரும் பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை. அமெரிக்கத் தேர்தல் முடிவுகள் அனைவரிடமும் உண்டாக்கிய அதிர்ச்சியே இதற்குக் காரணம்” என்று அவர் பேசியுள்ளார்.
அமெரிக்கா - இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய போரை முழுமையாக முடிவுக்குக் கொண்டுவர பல மாதங்களாக கத்தார் மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட பிராந்திய நாடுகள் முயற்சித்த போதும், இதுவரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இந்த நிலையில், எக்ஸ் தளத்தில் இதுபற்றி பதிவிட்ட அராகச்சி, “அமெரிக்க வாக்காளர்கள் தங்கள் முடிவை எடுத்துவிட்டனர். இனி வெள்ளை மாளிகையும் தனது முடிவை எடுக்கும் நேரம் வந்துவிட்டது.
எங்களின் 2 நாள் முன்மொழிவு அப்படியே உள்ளது. போரை முடிவுக்குக் கொண்டுவருவது உள்பட, நிபந்தனைகளை நிறைவேற்றுங்கள், அதற்கான பலன்களைக் காண்பீர்கள்.
அல்லது போரைத் தேர்ந்தெடுங்கள். அப்போது விழிப்புடனும் போராட்டகுணமும் உள்ள எங்களின் வீரர்கள் நரகத்தை மழையாகப் பொழிவதைக் காண்பீர்கள்” என்று தெரிவித்துள்ளார்.
ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான ஏழு நாள் திட்டத்தை செப்டம்பர் மாதம் ஈரான் முன்மொழிந்தது. அனைத்து முனைகளிலும் போரை முடிவுக்குக் கொண்டு வருதல், முடக்கப்பட்ட ஈரானிய சொத்துகளை விடுவித்தல், எரிபொருள் மீதான தடைகளை நீக்குதல் மற்றும் ஈரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்காவின் தடையை நீக்குதல் போன்ற கோரிக்கைகள் அதில் இடம்பெற்றிருந்தன.
பின்னர், இந்தத் திட்டத்தை வெறும் இரண்டு நாள்களுக்குள் செயல்படுத்த முடியும் என ஈரான் தெரிவித்த நிலையில், இக்கருத்தை அராகச்சி தெரிவித்துள்ளார்.
Summary
No negotiations have taken place following the shock of the US midterm elections: Iran
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

