நடந்தவை என்ன? - தமிழகம்

2020 - ஆண்டு நெடுகிலும் தமிழகத்தில் நடந்தவை என்னென்ன?
நடந்தவை என்ன? - தமிழகம்

ஜனவரி

6- தஞ்சாவூர் அருகில் மதுக்கூரில் மகளை வன்கொடுமை செய்த தந்தைக்கு நான்கு ஆயுள் தண்டனையும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.5 லட்சம் நிதியுதவியும் வழங்க வேண்டும் என தஞ்சை மகளிர் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

24: குரூப் 4 தேர்வில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக 99 தேர்வர்களைத் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டது டிஎன்பிஎஸ்சி.

25: முதல் மனைவி விவாகரத்து பெற்றுவிட்டாலோ அல்லது இறந்துவிட்டாலோ இரண்டாவது மனைவி சட்டப்படி ஓய்வூதியம் பெறலாம் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

பிப்ரவரி

4: தமிழகத்தில் 5, 8 வகுப்புகளுக்கு ஆண்டு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது.

5: பெரியகோயில், பிரகதீஸ்வரர் ஆலயம், ராஜராஜேஸ்வரம் என பெருமையுடன் அழைக்கப்படும் தஞ்சாவூர் பெரியகோயிலின் மகா கும்பாபிஷேகம் 23 ஆண்டுகளுக்குப் பிறகு கோலாகலமாக நடைபெற்றது.

12: இந்தியாவில் டயர் உற்பத்தியில் முன்னணி நிறுவனமாக திகழும் சியட் நிறுவனத்தின் பசுமை தொழிற்சாலையை, தமிழகத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி திறந்து வைத்தார். மிகப்பெரிய பயணிகள் ரேடியல் டயர் உற்பத்தி தொழிற்சாலையான இந்த ஆலையில் சியட் நிறுவனம் அடுத்த 10 ஆண்டுகளில் ரூ.4 ஆயிரம் கோடி வரை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.

18: திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் புன்னப்பாக்கம் கிராமத்தில் உள்ள தனியார் செங்கல் சூளையில் வருவாய்த் துறையினர் நடத்திய சோதனையில் கொத்தடிமைகளாகப் பணியாற்றி வந்த 50 குழந்தைகள், 88 பெண்கள் உள்பட 247 பேர் மீட்கப்பட்டனர்.

20: காவிரி டெல்டாவைப் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றுவது தொடர்பான சட்ட மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.


மார்ச்

4: வங்கிக் கடன் மோசடி வழக்கில் ஸ்ரீபெரும்புதுôர் மக்களவை தொகுதியின் முன்னாள் அதிமுக எம்.பி. கே.என்.ராமச்சந்திரன், அவரது மகன் ஆகியோருக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.1 கோடியே 11 லட்சம் அபராதம் விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

16: கரோனா பொது முடக்கம் காரணமாக தமிழகத்தில் பொது இடங்களில் மார்ச் 31-ஆம் தேதி வரை பொதுமக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டது. பள்ளி, கல்லூரிகளை மூடுவதற்கு உத்தரவிடப்பட்டது.

24: தமிழகத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த கடந்த மார்ச் 31-ஆம் தேதி வரை பொது முடக்கம் அமல்படுத்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது.

25: கரோனா நோய்ப் பாதிப்பால் மதுரையில் சிகிச்சையில் இருந்த 54 வயது ஆண் பலியானதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இது தமிழகத்தில் கரோனா நோய்த்தொற்றால் ஏற்பட்ட முதல்உயிரிழப்பாகும்.

ஏப்ரல்

2: இந்தியாவில் கரோனா பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கையில் தமிழகம் 2-ஆம் இடத்துக்கு வந்தது. கரோனா பாதித்த 309 பேரில் 264 பேர் தப்லீக் ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்டவர்கள்.

4: அத்தியாவசியப் பொருள்கள் வாங்க காலை 6 முதல் பிற்பகல் 1 மணி வரை மட்டுமே அனுமதி. கரோனா பாதிப்புக்கேற்ற மாவட்டங்கள் வாரியான நிறங்கள் ஒதுக்கீடு

13: கரோனா பாதிப்பால் இறந்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 56 வயது மருத்துவரின் சடலத்துக்கு அம்பத்தூர் மயானத்தில் இறுதிச் சடங்கு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டம்

13: 9-ஆம் வகுப்பு மாணவியை கடந்த 4 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்த 4 பள்ளி மாணவர்கள் உள்பட 7 பேரை, கோயம்புத்தூர் அனைத்து மகளிர் காவலர்கள் கைது செய்தனர்.

19: கரோனாவால் இறந்த நியூ ஹோப் மருத்துவமனையின் தலைவர் சைமன் ஹெர்குலிஸ் (55) உடலுக்கு இறுதிச் சடங்கு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டம்

20: கரோனாவால் இறந்தவர்களுக்கு இறுதிச் சடங்கு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மக்களுக்கு சென்னை உயர்
நீதிமன்ற நீதிபதிகள் கடும் எச்சரிக்கை.

24: கரோனா பாதிப்பு அதிகரித்ததைத் தொடர்ந்து, சென்னை, கோவை, மதுரை மாநகராட்சிகளில் ஏப்.26 முதல் ஏப்.29-ஆம் தேதி வரை முழு பொதுமுடக்கம் கடைப்பிடிக்க முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி உத்தரவு

28: கோயம்பேடு காய்கறி சந்தை செயல்பட சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் தடை விதித்தையடுத்து, சந்தை வெறிச்சோடி காணப்பட்டது.
30: கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு புவிசார் குறியீடு

மே

5: டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் விலை உயர்வு

7: அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை, 59-ஆக உயர்த்தியது தமிழக அரசு

11: கோயம்பேட்டிலிருந்து திருமழிசைக்கு மாற்றப்பட்ட காய்கறி சந்தையில் மொத்த விற்பனை தொடங்கியது.

15: சனிக்கிழமைகளிலும் பணியாற்ற அரசு ஊழியர்களுக்கு உத்தரவு

16: பொதுமுடக்கத்துக்கு இடையே கட்டுப்பாடுகளுடன் தமிழக டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை தொடங்கியது

22: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இல்லம், அசையும் சொத்துகளை தற்காலிகமாக அரசுடைமையாக்கவும், "வேதா நிலையம்' இல்லத்தை நினைவில்லமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான "புரட்சித் தலைவி டாக்டர் ஜெ.ஜெயலலிதா நினைவு அறக்கட்டளை' அமைக்கவும், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவசர சட்டத்தைப் பிறப்பித்தார்.

23: பட்டியலினத்தைச் சேர்ந்த நீதிபதிகளை அவதூறாக பேசியதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சென்னை காவல்துறையின் மத்திய குற்றப்பிரிவினரால் கைது செய்யப்பட்டார்

25: சென்னையில் உள்ள தொழிற்சாலைகள், 25 சதவீத ஊழியர்களுடன் செயல்படத் தொடங்கியது

27: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இரண்டாம் நிலை வாரிசாக ஜெ.தீபா மற்றும் தீபக்கை அறிவித்தது சென்னை உயர்நீதிமன்றம்

31: சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்ளைத் தவிர்த்து, ஜூன் 1-ஆம் தேதி முதல் குறைந்த பயணிகளுடன் பொதுப் போக்குவரத்து இயங்க அனுமதி. அதே நேரம், சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் 100 சதவீத பணியாளர்களுடனும், நகரத்தில் 50 சதவீத பணியாளர்களுடன் நிறுவனங்கள் செயல்பட அனுமதி.


ஜூன்

6: கரோனாவுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவமனைகளுக்கான கட்டண விவரங்களை வெளியிட்டது தமிழக அரசு

9: பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வை ரத்து செய்ததுடன், பிளஸ் 1 மாணவர்களுக்கு மீதமுள்ள தேர்வுகளையும் ரத்து செய்து முதல்வர் உத்தரவு. அனைத்து மாணவர்களும் தேர்வின்றி அடுத்த வகுப்புக்குச் செல்ல அனுமதி

11: "இட ஒதுக்கீடு அடிப்படை உரிமை இல்லை'. மருத்துவக் கல்வியில், அனைத்திந்திய அளவில் ஒபிசி பிரிவினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக் கோரி அதிமுக உள்ளிட்ட தமிழக கட்சிகள் தாக்கல் செய்த மனுவில் உச்சநீதிமன்றம் கருத்து

15: ஜூன் 19 முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை, சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் தீவிர பொதுமுடக்கம் கடைப்பிடிக்கப்படும். ஞாயிற்றுக்கிழமைகளில் முழு முடக்கம் கடைப்பிடிக்க முதல்வர் உத்தரவு

19: பொதுமுடக்க விதிகளை மீறியதாக ஜெயராஜ் (59), அவரது மகன் பென்னிக்ஸ் (31) ஆகியோரை சாத்தான்குளம் காவலர்கள், காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று தாக்கப்பட்டதில், தந்தை மகன் உயிரிழந்தனர். இது தொடர்பாக செப்.26-ஆம் தேதி, விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 9 பேர் மீது சிபிஐ குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது.

22: உடுமலை சங்கர் கௌரவ கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், கௌசல்யாவின் தந்தை சின்னசாமியை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை விடுதலை செய்தது.


ஜூலை

1: நெய்வேலி அனல் மின் உற்பத்தி நிலையத்தில் பாய்லர் (உலை) வெடித்து தீ விபத்து நேர்ந்ததில் 13 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 16 பேர் பலத்த காயமடைந்தனர்.

3: தமிழகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து 1 லட்சத்தை எட்டியது.

20: தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு பெரு நிறுவனங்கள் தமிழகத்தின் 6 மாவட்டங்களில் ரூ.10,399 கோடி மதிப்பீட்டில் தொழிற்சாலைகள் தொடங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

22: ஆளுநர் மாளிகை பணியாளர்கள், சிஆர்பிஎஃப் வீரர்கள் உள்பட 84 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

27: மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீட்டு சலுகை இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

30: ஆலந்தூர், சென்ட்ரல், சிஎம்பிடி மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு மறைந்த முன்னாள் முதல்வர்கள் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா பெயர் சூட்டப்படும் என அரசு அறிவிப்பு.

ஆகஸ்ட்

9: பெய்ரூட்டில் அம்மோனியம் நைட்ரேட் கிடங்கு வெடித்து நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததன் எதிரொலியாக சென்னை, மணலியில் 10 சரக்கு லாரிகளில் இருப்பு வைக்கப்பட்டிருந்த 180 டன் அம்மோனியம் நைட்ரேட் ஹைதராபாதுக்கு கொண்டு செல்லப்பட்டது.

30: கரோனா பரவலால் அமல்படுத்தப்பட்டிருந்த பல கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. மாநிலம் முழுவதும் பேருந்து போக்குவரத்துக்கு மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டது. மாவட்டங்களுக்கு இடையேயான இ-பாஸ் நடைமுறை ரத்து செய்யப்பட்டது.

செப்டம்பர்

3: திமுக பொது செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி.ஆர்.பாலுவும் கட்சி நிர்வாகிகளால் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

4: பிரதமரின் விவசாயிகள் நல உதவித் தொகைத் திட்டத்தில் பெரும் முறைகேடு நடைபெற்றது கண்டறியப்பட்டது. தமிழகம் முழுவதும் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் போலியாக விவசாயிகள் என்ற பெயரில் பதிவு செய்து பலனடைந்தது தெரியவந்தது. மொத்தமாக ரூ.110 கோடி மோசடி கண்டுபிடிக்கப்பட்டு அதில் தொடர்புடைய 16 பேர் கைது செய்யப்பட்டனர்.

14: தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலில் (என்சிடிஇ) புதுப்பித்துக் கொள்ளத் தவறியதால் 71 ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளில் பி.எட்., எம்.எட். மாணவர் சேர்க்கை நடத்த தடை விதிப்பு.

15: சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்புகளில் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கும் சிறப்பு மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றம்.

16: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை நினைவிடமாக மாற்றுவதற்காக பிறப்பிக்கப்பட்ட அவசரச் சட்டத்துக்கு மாற்றான மசோதா, பேரவையில் நிறைவேறியது.

16: நிர்வாக வசதி மற்றும் ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்காக அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரிக்கும் சட்ட முன்வடிவு பேரவையில் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, அண்ணா தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் என இரு வேறு நிர்வாக அமைப்புகளை கட்டமைக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

செப். 27: கரோனா பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த கோயம்பேடு சந்தை ஏறத்தாழ 5 மாதங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் மீண்டும் திறக்கப்பட்டது.

அக்டோபர்

1: தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி "ஒரே நாடு, ஒரே ரேஷன்' திட்டத்தை தொடங்கி வைத்தார். தமிழகத்தில் முதல் கட்டமாக 32 மாவட்டங்களிலும், இரண்டாவது கட்டமாக 6 மாவட்டங்களிலும் இந்த திட்டம் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

6: தமிழக மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் மருத்துவ மேற்படிப்புகளைப் படிக்கும் மாணவ மாணவிகள் 2 ஆண்டுகள் அரசு மருத்துவமனைகளில் பணிபுரிய வேண்டும் என்ற நிபந்தனை செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

6: கடந்த 2015-ஆம் ஆண்டு 7 ரோந்து கப்பல்கள் தயாரிப்பதற்காக பாதுகாப்பு அமைச்சகமும் எல் அன்ட் டி நிறுவனமும் மேற்கொண்ட ஒப்பந்தத்தின்படி 7-வது ரோந்து கப்பலான 'விக்ரஹா'' இந்திய கடலோரக் காவல் படையிடம் ஒப்படைக்கப்பட்டது.

8: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் இணைப்பு தனியார் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் கல்விக் கட்டணத்தை நிர்ணயிக்க அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையிலான கல்விக் கட்டண நிர்ணயக்குழுவின் பரிந்துரைப்படி, ஆண்டுக்கு ரூ.50
ஆயிரத்தை கட்டணமாக நிர்ணயித்து தமிழக அரசு உத்தரவிட்டது.

12: தமிழகத்தில் ரூ.10,055 கோடி ரூபாய் முதலீட்டில் 14 நிறுவனங்கள் தொழில் தொடங்க முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலம் 9 மாவட்டங்களில் உள்ள 7,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனக் கூறப்பட்டது.

14: நீலகிரி மாவட்டம் முதுமலையில் யானை வழித்தடத்தை ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட 39 ரிசார்ட்டுகளின் ஆக்கிரமிப்புகளை அகற்றவும், புதிய கட்டுமானங்களுக்கு தடை விதித்தும் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.

.21: தமிழகத்தில் புதிதாக 26 தொழில் திட்டங்களுக்கு, முதல்வர் பழனிசாமி தலைமையில் நடைபெற்ற உயர் மட்டக் குழுக் கூட்டத்தில், தமிழக அரசு அனுமதி வழங்கியது.இந்தத் திட்டத்தின் மூலம் ரூ.25,213 கோடி அளவிற்கான தொழில் முதலீடுகள் முழுமையாக செயல்பாட்டிற்கு வந்து, சுமார் 49,003 நபர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை விரைவாக உருவாக்குவது உறுதியாகி உள்ளது.

29: தமிழகத்தில் முதல் தனியார் பல்கலைக்கழகமான ஷிவ் நாடார் பல்கலைக்கழகம் சென்னையை அடுத்த காலவாக்கத்தில் தொடங்கப்படும் என ஷிவ் நாடார் அறக்கட்டளையின் உறுப்பினரும், எச்.சி.எல் நிறுவனத்தின் தலைவருமான ரோஷினி மல்ஹோத்ரா நாடார் அறிவித்தார்.

30: மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் அளித்தார்.


நவம்பர்

4: இந்துசமய அறநிலையத்துறைக் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களின் நிலங்களை கோயில் அல்லாத பிற பயன்பாடுகளுக்கு மாற்றக்கூடாது என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

4: தினக்கூலித் தொழிலாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் நடமாடும் அம்மா உணவகங்களை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில் தொடக்கி வைத்தார்.

7: நாட்டில் நீர் மேலாண்மையை சிறப்பாக கையாண்ட மாநிலங்களுகாகன விருதுப் பட்டியலில் தமிழகம் முதலிடம் பிடித்தது. 5 பிரிவுகளின் கீழ் தமிழக அரசுக்கு 11 விருதுகள் அறிவிக்கப்பட்டது.

9: அரசு மருத்துவர்களுக்கு உயர் மருத்துவப் படிப்புகளுக்கான மேற்படிப்புகளில் 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது.

11: 7 மாத இடைவெளிக்குப் பின்னர் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கர்நாடக மாநிலத்துக்கு தமிழகத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட்டது.

13: அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.கே.சூரப்பா ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டாரா என்பது குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி பி.கலையரசனை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது.

18: 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவப் படிப்பில் இடம் கிடைத்த மாணவர்களுக்கு சேர்க்கை கடிதங்களை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வழங்கினார். இந்த ஒதுக்கீட்டுக்கு தகுதி வாய்ந்த 951 பேரில் 267 பேர் முதல்நாள் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

20: ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதித்து தமிழக அரசு கொண்டு வந்த அவசர சட்டத்துக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் அளித்தார்.

21: தமிழகம் வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, திருவள்ளூர் மாவட்டம் தேர்வாய்கண்டிகையில் புதிய நீர்த்தேக்க திட்டத்தைத் தொடங்கி வைத்தார். இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் மற்றும் உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

26: நிவர் புயல் புதுச்சேரி மாநிலம் காரைக்காலுக்கும் தமிழகத்தின் மாமல்லபுரத்துக்கும் இடையே 25-ஆம் தேதி இரவு 11.30 மணியில் தொடங்கி 26-ஆம் தேதி அதிகாலை 2.30 மணி வரை கரையைக் கடந்தது.


டிசம்பர்

3: ஜனவரி மாதம் புதிய அரசியல் கட்சித் தொடங்கப் போவதாகவும், அதற்கான தேதியை டிசம்பர் 31-ஆம் தேதி அறிவிக்க இருப்பதாகவும் நடிகர் ரஜினிகாந்த் அறிவித்தார்.

3: சென்னை உயர்நீதிமன்றத்தில் 10 புதிய நீதிபதிகள் பதவியேற்றுக் கொண்டனர். நாட்டிலேயே 13 பெண் நீதிபதிகள் கொண்ட உயர்நீதிமன்றம் என்ற பெருமையை சென்னை உயர்நீதிமன்றம் பெற்றது.

4: தமிழகம் முழுவதும் பெய்த கனமழையின் காரணமாக, காஞ்சிபுரம் மாவட்டம் பாலாற்றில் சிக்கி 3 பெண்கள் பலியாகினர். இந்த 3 பெண்கள் உள்பட 10 பேரை பலி கொண்ட கனமழையின் வெள்ளநீர், தமிழகத்தின் பல பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களைச் சூழ்ந்து பயிர்களை சேதப்படுத்தியது.

7: பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தமிழகத்தில் மருத்துவக் கல்லூரிகள் உள்ளிட்ட கல்லூரிகள் திறக்கப்பட்டன.

8: தமிழ்வழியில் படித்த மாணவர்களுக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வில் 20% இட ஒதுக்கீடு வழங்கும் அவசரச் சட்டத் திருத்தத்துக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் அளித்துள்ளார்.

8: ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பிலான மத்திய அரசின் சென்னை சேலம் 8 வழி சாலைத் திட்டத்துக்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டது.

12.  தருமபுரி தோப்பூர் அருகே கட்டுப்பாடின்றி லார் மோதியதில் 10 பேர் பலி.

14. 8 மாதங்களுக்குப் பிறகு சென்னை மெரினா கடற்கரைக்குச் செல்ல பொதுமக்களுக்கு அனுமதி.

17. இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 36 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்.

21. தமிழக சட்டமன்ற தேர்தல் ஏற்பாடு குறித்து ஆலோசனை மேற்கொள்ள இந்தியத் தேர்தல் ஆணைய அதிகாரிகள் சென்னை வருகை

23. கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த தமிழக அரசு அனுமதி

25. ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக நடிகர் ரஜினிகாந்த் ஹைதராபாத் மருத்துவமனையில் அனுமதி  

29. தமிழகத்தில் மீண்டும் பொதுமுடக்கத்திற்கு வாய்ப்பு இல்லை என அமைச்சர் விஜயபாஸ்கர் திட்டவட்டம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com