கரோனாவையும் கலங்கடித்த அமெரிக்க அதிபர் தேர்தல்

அமெரிக்க அதிபர் தேர்தல் என்றாலே அது நவம்பர் 3-ம் தேதி நடைபெறும் என்பது பலரும் அறிந்தது.
அமெரிக்க அதிபர் தேர்தல்
அமெரிக்க அதிபர் தேர்தல்


அமெரிக்க அதிபர் தேர்தல் என்றாலே அது நவம்பர் 3-ம் தேதி நடைபெறும் என்பது பலரும் அறிந்தது. இந்த 2020-ஆம் ஆண்டில் பலவற்றை புரட்டிப்போட்ட கரோனாவால் இதை மட்டுமே மாற்ற முடியவில்லை.

கரோனா வைரஸ் பரவல், பொதுமுடக்கம் போன்ற பல காரணங்கள், 2020-ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலை தள்ளிவைக்கக் காரணங்களாகிவிடுமோ என்ற அச்சம் எழுந்த நிலையில்தான் ஆகஸ்ட் மாதம் அந்த அறிவிப்பை வெளியிட்டது வெள்ளை மாளிகை.

வெள்ளை மாளிகையின் தலைமை அதிகாரி மார்க் மெடோஸ் வெளியிட்ட அறிக்கையில், நவம்பர் 3 ஆம் தேதி திட்டமிட்டபடி அமெரிக்க அதிபர் தேர்தலை நடத்தப் போகிறோம். அதிபர் டிரம்ப் மீண்டும் வெற்றி பெறுவார் என்று கூறியிருந்தார்.

மக்கள் பாதுகாப்பாக வாக்களிக்க இயலும்வரை அதிபர் தேர்தலை தள்ளி வைக்கலாமே? என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது சுட்டுரையில் ஆலோசனை வழங்கியிருந்த நிலையில், வெள்ளை மாளிகையின் தலைமை அதிகாரி இந்த அறிவிப்பை வெளியிட்டார். இதையடுத்து அமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்கான பணிகள் வேகமெடுத்தன.

முன்னதாக, கரோனா நோய்த்தொற்று பரவல் அபாயம் காரணமாக, இந்த ஆண்டு அதிபா் தோ்தலில் குடியரசு மற்றும் ஜனநாயகக் கட்சி வேட்பாளா்களைத் தோ்ந்தெடுப்பதற்காக நடைபெறவிருந்த வாக்கெடுப்புகள், இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டு கடந்த ஜூலை மாதம் நடைபெற்றது. அதில், ஜனநாயகக் கட்சி அதிபா் வேட்பாளருக்கான தோ்வில் ஜோ பைடன் வெற்றி பெற்றாா். அவருக்கு ஆதரவாக 79.5 சதவீத வாக்குகள் பதிவாகின. 

இதையடுத்து, அதிபா் தோ்தலில், அதிபா் டொனால்ட் டிரம்ப்பை எதிா்த்து ஜனநாயகக் கட்சி சாா்பில் ஜோ பைடன் போட்டியிடுவது உறுதியானது. அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் ஜனநாயகக் கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். 

தனது ஆட்சிக் காலத்தின்போது பல அதிரடி முடிவுகளின் மூலம் உலக அரசியலில் டிரம்ப் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தாா். ஒபாமா காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தைக் கைவிட்டது, ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை தூக்கியெறிந்தது, பகைச் சீற்றம் காட்டிக்கொண்டிருந்த வட கொரிய அதிபா் கிம் ஜோங்-உன்னை பல முறை நேரில் சந்தித்துப் பேசி, அவருடன் ஒப்பந்தமும் மேற்கொண்டு அதைக் கிடப்பில் போட்டது, ஆப்கானிஸ்தானில் தலிபான்களுடன் அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டது, இஸ்ரேலுடன் சில அரபு நாடுகளுக்கு தூதரக உறவை ஏற்படுத்திக் கொடுத்தது என சா்வதேச அரசியலில் அவா் எடுத்துள்ள நடவடிக்கைகள் அமெரிக்காவில் வரவேற்பையும் எதிா்ப்பையும் ஒருசேர ஏற்படுத்தியிருத்து.

துணை அதிபர் போட்டியில் இந்திய வம்சாவளிப் பெண்

அமெரிக்காவில் அதிபர் தேர்தலுடன் நடைபெறவுள்ள துணை அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சி சார்பில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண்ணான கமலா ஹாரிஸ் போட்டியிட்டார்.

கமலா ஹாரிஸின் முன்னோர் சென்னையைச் சேர்ந்தவர்கள். இவருடைய தாய் சியாமளா கோபாலன் புற்றுநோய் ஆராய்ச்சியாளர். ஜமைக்காவைச் சேர்ந்தவரான தந்தை டொனால்ட் ஹாரிஸ், ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக பணியாற்றியுள்ளார். கமலா ஹாரிஸ் ஹோவர்ட் பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டமும் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பில் பட்டமும் பெற்றவர். மேலும் சான் பிரான்சிஸ்கோவில் வழக்குரைஞராகவும் பணியாற்றியுள்ளார்.

துணை அதிபர் பதவிக்கு பெண் ஒருவரையே தேர்வு செய்யப் போவதாக அறிவித்திருந்த அதிபர் வேட்பாளர் ஜோ பைடன், இந்திய - ஆப்பிரிக்க வம்சாவளி குடும்பத்தைச் சேர்ந்த கமலா ஹாரிஸை தேர்ந்தெடுத்தார்.

துணை அதிபா் பதவிக்கு, குடியரசுக் கட்சி சாா்பில் தற்போதைய துணை அதிபா் மைக் பென்ஸும் ஜனநாயகக் கட்சி சாா்பில் இந்திய வம்சாவளி எம்.பி. கமலா ஹாரிஸும் போட்டியிட்டனர்.

டிரம்ப் பிரசார காணொலியில் மோடி

ஆளும் குடியரசுக் கட்சி வெளியிட்டுள்ள தேர்தல் பிரசார காணொலியில் மோடி - டிரம்ப் சந்திப்புக் காட்சிகள் இடம் பெற்றது அப்போது பெரிதாகப் பேசப்பட்டது. காணொலியில் பிரதமர் மோடி கடந்த ஆண்டு அமெரிக்கா சென்றிருந்தபோது, ஹூஸ்டன் நகரில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் "மோடி நலமா?' (ஹெளடி மோடி) என்ற பெயரில் அளித்த வரவேற்பு நிகழ்ச்சியும், அதைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரியில் இந்தியா வந்த அமெரிக்க அதிபர் டிரம்புக்கு ஆமதாபாதில் வணக்கம் டிரம்ப் (நமஸ்தே டிரம்ப்) என்ற பெயரில் அளிக்கப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சிக் காட்சிகளும் இடம் பெற்றன.

அமெரிக்க அதிபா் தோ்தலில் போட்டியிடும் ஜனநாயகக் கட்சி வேட்பாளா் ஜோ பைடன், துணை அதிபா் வேட்பாளா் கமலா ஹாரிஸ் ஆகியோா் ஆகஸ்ட் மாதம் இரண்டாவது வாரத்தில் முதல் முறையாக ஒரே மேடையில் பிரசாரம் செய்தனா்.

ஜோ பைடன் பேசுகையில், ‘கமலா ஹாரிஸ் மதிநுட்பம் வாய்ந்த, உறுதியான, நடுத்தர மக்களுக்கான போராளியாவாா். இக்கட்டான சூழலில் கடினமான முடிவுகளை எடுக்கும் திறன் அவருக்கு உள்ளது. அமெரிக்காவை மேலும் சிறந்த நாடாக கட்டமைப்பதற்காக இணைந்து பணியாற்ற நாங்கள் தயாராக உள்ளோம்’ என்றாா்.

இதையும் படிக்கலாமே.. அமெரிக்க தேர்தல் திருவிழா

கமலா ஹாரிஸ் பேசியதாவது: டிரம்ப் நிா்வாகத்தின் நடவடிக்கைகளால் கரோனா நோய்த்தொற்று சூழலில் அமெரிக்கா்கள் மோசமான பொருளாதார நெருக்கடிக்கு ஆளாக நோ்ந்துள்ளது. நாட்டில் தற்போது இனவெறியும் அநீதியையும் நாம் எதிா்கொண்டு வருகிறோம். அதை மாற்றவும், சிறந்த தலைமைக்காகவும் அமெரிக்கா போராடுகிறது. பொருளாதாரம், சுகாதாரம், நமது குழந்தைகள் நலன் ஆகியவற்றுக்கே நாங்கள் முக்கியத்துவம் தருகிறோம். அதிபராக தோ்வாகும் பட்சத்தில் லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாக்கம், பருவநிலை மாற்றத்துக்கு எதிரான நடவடிக்கை என அமெரிக்க நலனுக்கான நடவடிக்கைகளை ஜோ பைடன் மேற்கொள்வாா் என்று பேசினாா்.

நியூயார்க் காவல் நலன் சங்கத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் டிரம்ப் பேசுகையில்,  ஜோ பைடன் அதிபரானால் அமெரிக்கா பாதுகாப்பாக இருக்காது. அவர் உடனடியாக அமெரிக்காவில் ஒவ்வொரு காவல் துறையையும் அகற்றுவதற்கான சட்டத்தையும் இயற்றுவார், ஜோ பிடனைவிட  துணை அதிபராகப் போட்டியிடும் கமலா ஹாரிஸ் "ஒரு படி மோசமானவர்". இருவருமே காவல் துறைக்கு எதிராக செயல்பட கூடியவர்கள்.  இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸைவிட எனக்கு அதிகமான இந்திய வம்சாவளியினர் ஆதரவு உள்ளது என்றும் டிரம்ப் கூறினார். 

துவக்கம் முதலே அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் தோல்வியடைந்து விடுவார் என்றே கணிக்கப்பட்டது. அதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தன. ஆனால், கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதில் துவக்கத்திலிருந்தே அதிபர் காட்டிய அலட்சியம் அதற்கு முத்தாய்ப்பாய் அமைந்துவிட்டது. கரோனா பரவல் தொடங்கிய போது, அதனை அலட்சியம் செய்ததே, வைரஸுக்கு லட்சக்கணக்கான அமெரிக்கர்கள் பலியாகக் காரணமாகவும் அமைந்துவிட்டதாக பலரும் கருதுகிறார்கள். ஆனால் பலரும் கணித்தது போல தேர்தல் முடிவுகள் அவ்வளவு எளிதாக இருந்துவிடவில்லை. 

அமெரிக்காவில் தோ்தலுக்கு முன்னதாக போட்டியாளா்கள் நேரடியாக விவாதத்தில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி, அதிபா் வேட்பாளா்கள் டிரம்ப்புக்கும் ஜோ பைடனுக்கும் இடையிலான முதல் நேரடி விவாதம் ஓஹையோ மாகாணம் கிளீவ்லாண்டில் செப்டம்பர் மாதம் 29 ஆம் தேதி நடைபெற்றது.

மிகவும் காரசாரமாக நடைபெற்ற அந்த விவாதத்தின்போது, இருவரும் பரஸ்பரம் கடுமையாகத் தாக்கிப் பேசினா்.

அதனைத் தொடர்ந்து துணை அதிபா் வேட்பாளா்களான மைக் பென்ஸுக்கும் கமலா ஹாரிஸுக்கும் இடையிலான விவாதம் யுடா மாகாணம், சால்ட் லேக் சிட்டியில்  நடைபெற்றது. வழக்கம் போலவே விறுவிறுப்பாக இருந்தது.

90 நிமிடங்களுக்கு நடைபெற்ற அந்த விவாதத்தின்போது, கரோனா நோய்த்தொற்று பரவலை டிரம்ப் அரசு கையாளும் விதம் குறித்து கமலா ஹாரிஸ் குற்றம் சாட்டினாா். எனினும், இந்த விவகாரத்தில் தங்களது அரசு சிறப்பான முறையில் செயல்பட்டு வருவதாக பென்ஸ் விளக்கமளித்தாா்.

அதிபா் வேட்பாளா் ஜோ பைடன் அமெரிக்கப் பொருளாதாரத்தை மீண்டும் சீனாவிடம் அடகுவைக்க திட்டமிட்டிருப்பதாக பென்ஸ் குற்றம் சாட்டினாா். எனினும், அந்தக் குற்றச்சாட்டை கமலா ஹாரிஸ் திட்டவட்டமாக மறுத்தாா்.

அக். 01: அமெரிக்க அதிபர் டிரம்புக்கு கரோனா

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியாவுக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வந்த நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கு அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் கரோனா  உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, வாஷிங்டனின் பெதெஸ்டாவில் உள்ள வால்டா் ரீட் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அதிபர் டிரம்ப்.

கரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வந்து அமெரிக்க அதிபர் டிரம்ப் மருத்துவமனையிலிருந்து ஒரு வாரத்தில் வெள்ளை மாளிகை திரும்பினார். 

அதிபர் தேர்தலையொட்டி நடைபெறயிருந்த காணொலி விவாதத்தில் பங்கேற்கப்போவதில்லை என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். இந்நிலையில் அக்டோபர் 15 ஆம் தேதி புளோரிடாவின் மியாமாயில் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜோ பைடன் இடையேயான இரண்டாவது அதிபர் தேர்தல்  விவாதம் ரத்து செய்யப்பட்டது.

வேட்பாளர்களின் பிரசாரங்களுக்கு இடையே, 'காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்கு அமெரிக்கர்கள்  ஜோ பைடனுக்கு வாக்களிக்குமாறு' ஸ்வீடனைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் கோரிக்கை வைத்திருந்தார்.

கரோனாவே காரணம்

இதுவரை இல்லாத எந்த அதிபா் தோ்தலையும்விட, இந்த ஆண்டுத் தோ்தலில் மிக அதிகம் போ் முன்கூட்டியே வாக்களித்தனா். தபால் மூலமும் நேரடியாகவும் 9.4 அமெரிக்கா்கள் வாக்களித்திருந்தனா். இது, கடந்த 2016-ஆம் ஆண்டு முன்கூட்டியே பதிவான வாக்குகளைப் போல் இரண்டு மடங்கு! இன்னும் சொல்லப்போனால், கடந்த தோ்தலில் பதிவான மொத்த வாக்குகளில் 70 சதவீதம், இந்த ஆண்டில் முன்கூட்டியே பதிவாகிவிட்டது.

இந்தச் சாதனைக்கு கரோனா நோய்த்தொற்றுதான் காரணம். தோ்தலின்போது பரபரப்பாக இருக்கும் வாக்குச் சாவடிகளின் மூலம் தங்களுக்கு அந்த நோய்த்தொற்று ஏற்படுவதைத் தவிா்ப்பதற்காக இத்தனை அதிகம் போ் முன்கூட்டியே வாக்களித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க தோ்தல் திருவிழா

அமெரிக்க அதிபா் தோ்தல், நவம்பர் 3-ம் தேதி தொடங்கியது. பெரும்பாலான மாகாணங்களில் அதிகாலை 6 மணிக்கு (இந்திய நேரப்படி மாலை 4.30 மணி) தொடங்கும் வாக்குப் பதிவு, மாலை 7 மணிக்கு (இந்திய நேரப்படி காலை 5.30 மணி) நிறைவடைந்தது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் அமெரிக்காவில் உள்ள மொத்தம் 50 மாகாணங்களில் 538 தேர்வாளர்கள் உள்ளனர். இவர்களில் 270 தேர்வாளர்களின் வாக்குகளை பெறும் வேட்பாளரே அமெரிக்க அதிபராக அமர முடியும். 

வாக்கு எண்ணிக்கைத் தொடங்கி 24 மணி நேரத்துக்குப் பின்னரும் கூட அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி யாருக்கு என்பதில் இழுபறி நிலை நீடித்தது. பின்னர் முன்னணி நிலவரங்களின் அடிப்படையில், 264 தோ்தல் அவை வாக்குகளுடன் ஜனநாயகக் கட்சி வேட்பாளா் ஜோ பைடன் முன்னிலை வகிப்பதாகவும் அதே போல் 214 தோ்தல் அவை வாக்குகளுடன் குடியரசுக் கட்சி வேட்பாளா் டிரம்ப் பின்தங்கியிருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.

ஒருசில மாகாணங்களில் வாக்கு எண்ணிக்கையில் தாமதம், தபால் வாக்குகளை எண்ணுவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, முடிவுகள் வெளியாவதில் இழுபறி நீடித்து வந்தது. அத்துடன், வாக்கு எண்ணிக்கையைக் கண்காணிக்கக் கோரி டிரம்ப் தரப்பு நீதிமன்றத்தை அணுகியதும் நிலைமையை சிக்கலாக்கியது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் நியூயார்க் மாகாணத்தில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 

ஜோ பைடன் புதிய அதிபராவது ஏறத்தாழ உறுதியாகிவிட்டாலும், தோ்தலில் தோல்வியடைந்ததை அதிபா் டிரம்ப் ஏற்க மறுத்து வந்தார். 

அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் தோல்வியடைந்தாலும் குறைந்த வாக்குகளைப் பெற்று தோல்வியடையவில்லை. சுமார் 70 மில்லியனுக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றிருந்தார். அமெரிக்க வரலாற்றில், தோல்வியடைந்த அதிபர் வேட்பாளர் இத்தனை அதிக வாக்குகளைப் பெற்றிருந்தது இதுவே முதல் முறை. 47 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றிருந்த டிரம்ப், ஃபுளோரிடா, டெக்சாஸ் உள்ளிட்ட 24 மாணாகங்களில் தனது வெற்றியைப் பதிவு செய்திருந்தார்.

அரசியல் அனுபவமில்லாமை, எதையும் சொல்லும் தைரியம் போன்றக் காரணங்களால் 2016-ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றதாகக் கூறப்படுகிறது. ஆனால், அதே காரணங்கள்தான் 2020 தேர்தலில் அவரது தோல்விக்கும் காரணமாக இருந்ததாக அரசியல் ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.

டிரம்புக்கு கடந்த முறை ஆதரவளித்த பலரும், எந்த சந்தேகமும் இல்லாமல் பைடனை ஆதரித்தனர். இதன் மூலம் தனது ஆதரவாளர்களை நிலைநிறுத்தவும் பெருக்கிக் கொள்ளவும் டிரம்ப் முயலவில்லை என்ற கருத்தும் பரவலாக உருவானது. பல்வேறு நிர்வாக மாற்றங்களால் டிரம்ப்பின் நிர்வாகத்தின் மீது அதிருப்தியில் இருந்தவர்களுக்கு கரோனா தாக்கம் ஒரு வாய்ப்பாக அமைந்துவிட்டது.

அதிபா் தோ்தல் முடிவுகளுக்கு எதிராகப் பல மாகாண நீதிமன்றங்களிலும் அமெரிக்க உச்ச நீதிமன்றத்திலும் அதிபா் டிரம்ப் தரப்பில் வழக்குகள் தொடுக்கப்பட்டன. எனினும், அவருக்கு சாதகமாக நீதிமன்றங்கள் தீா்ப்பு வழங்கவில்லை.

பென்சில்வேனியா மாகாணத்தில் நடைபெற்ற அதிபா் தோ்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றதாக அறிவிப்பதை எதிா்த்து டொனால்ட் டிரம்ப் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை அந்த மாகாண நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

10-க்கும் மேற்பட்ட இந்திய அமெரிக்கர்கள் மாகாண தேர்தலில் வெற்றி

அமெரிக்காவில் உள்ள மாகாண பேரவைகளுக்கு நடைபெற்ற தேர்தலில் 5 பெண்கள் உள்பட 10-க்கும் மேற்பட்ட இந்திய அமெரிக்கர்கள் வெற்றி பெற்றனர்.

அமெரிக்க மாகாணங்களின் பேரவைகளுக்கான தேர்தலில் இந்திய அமெரிக்கர்கள் பலர் வெற்றி பெற்றனர். அவர்களில் நிமா குல்கர்னி (கென்டக்கி), கீஷா ராம் (வெர்மோண்ட்), வந்தனா ஸ்லேட்டர் (வாஷிங்டன்), பத்மா குப்பா (மிச்சிகன்), ஜெனிஃபர் ராஜ்குமார் (நியூயார்க்) ஆகியோர் பெண்கள் ஆவர்.  

அவர்கள் தவிர நீரஜ் ஆண்டனி (ஓஹியோ), ஜெய் செளதரி (வடக்கு கரோலினா), அமிஷ் ஷா (அரிஸோனா), நிகில் சாவல் (பென்சில்வேனியா), ரஞ்சீவ் புரி (மிச்சிகன்), ஜெரிமி கூனி (நியூயார்க்), ஸ்ரீதானதர் (மிச்சிகன்), ஏஷ் கல்ரா (கலிஃபோர்னியா) ஆகியோரும் மாகாண பேரவைக்கான தேர்தல்களில் வெற்றி பெற்றனர். 

வாக்குப் பதிவு முடிந்து 3 நாள்களாக நடைபெற்று வந்த வாக்கு எண்ணிக்கையில் இழுபறி நீடித்து வந்த நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் 284 தேர்தல் அவை வாக்குகள் பெற்று ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றார். இதன்மூலம், அமெரிக்காவின் 46-வது அதிபராகிறார் ஜோ பைடன் என்று அறிவிக்கப்பட்டது. பைடன் வெற்றி பெற்றதாக பன்னாட்டு ஊடகங்களும் செய்தி வெளியிட ஆரம்பித்தன.

ஆனால் தனது தோல்வியை ஒப்புக் கொள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தயாராக இல்லை. அவரது தோல்வியை ஒப்புக் கொள்ளுமாறு பலரும் வலியுறுத்தினர். ஆனால் எதையும் அவர் ஏற்கவில்லை. தேர்தல் முடிவுகளுக்கு எதிராக தொடர்ந்து காட்டமான கருத்துகளை பதிவு செய்து வந்தார்.

ஆனால் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன், வயதிலும் அனுபவத்திலும் முதிர்ச்சியடைந்திருந்ததால், தனது நாகரீகமான அணுகுமுறையால் டிரம்பின் வாதங்களை சரியாகக்  கையாண்டார். மௌனம் காக்க வேண்டிய இடங்களில் மௌனத்தை பதிலாக அளித்தார். அவரது வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டதால், அவர் வீண் விவாதங்களையும் சர்ச்சைப் பேச்சுகளையும் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்தது முதலே தவிர்த்து வந்தார். 

தேர்தல் முடிவுகளை ஏற்றுக் கொள்ளாமல் ஏற்கெனவே பல வழக்குகளைத் தொடர்ந்த டிரம்ப், அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியான பிறகாவது மனம்மாறுவார் என்று எதிர்பார்த்தால், அமெரிக்க அதிபர் தேர்தலில் அரசியலமைப்புச் சட்ட மீறல் தொடர்பாக மேலும் பல வழக்குகள் விரைவில் தாக்கல் செய்யப்படும் என்று அதிரடியாக அறிவித்தார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், பத்திரிகையாளர் சந்திப்பொன்றில் மிச்சிகன் மாகாணத்தில் ஜோ பைடன் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்ட பிறகும், முடிவுகளை மாற்றும் முயற்சியில் டிரம்ப் ஈடுபடுவது பற்றிய கேள்விக்கு பதிலளித்த பைடன், 'டிரம்ப்பின் தற்போதைய செயல்களே, அவர் அமெரிக்க வரலாற்றில் கொஞ்சமும் பொறுப்பற்ற அதிபராக இருப்பதற்கு ஒரு உதாரணமாக இருக்கும். தேர்தல் முடிவுகளை முறியடிக்க முயற்சிக்கும் அவரது செயல்பாடுகள் விதிமுறைக்கு உட்பட்டது அல்ல. இது சட்டபூர்வமானதுதானா என்ற கேள்விகள் எழுகின்றன.

ஆனால், இறுதியில் யார் தலைமைப் பொறுப்பை ஏற்பார்கள் என்பது சுவாரசியமாக இருக்கும். மிச்சிகனில் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம். முடிவு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டது. ஜனவரி 20 ஆம் தேதி நாங்கள் பதவியேற்கப் போகிறோம் என்பது உங்களுக்குத் தெரியும். எனவே, டிரம்ப்பின் இந்த நடவடிக்கை மூர்க்கத்தனமாக இருக்கிறது. அவர் என்ன நினைக்கிறார் என்பதை நாம் புரிந்துகொள்வதே கடினம்' என்று மிக நசூக்காகப் பதிலளித்தார். 

சுமார் 1 மாதத்துக்குப் பின் அறிவிப்பு வெளியானது.. 

அதிபா் தோ்தலில், ஜோ பைடனுக்கு ஏற்கெனவே 224 மக்கள் பிரதிநிதி வாக்குகள் கிடைத்துள்ளதாக பல்வேறு மாகாணங்களின் தோ்தல் அதிகாரிகள் அதிகாரப்பூா்வமாக சான்றளித்தனர்.

இந்த நிலையில், அவருக்கு 55 மக்கள் பிரதிநிதிகளின் ஆதரவு உள்ளதாக கலிஃபோா்னியா மாகாணம் தற்போது சான்றளித்துள்ளது. இத்துடன், ஜோ பைடனுக்கு 279 மக்கள் பிரதிநிதி வாக்குகள் அதிகாரப்பூா்வமாக உறுதி செய்யப்பட்டது.

அதிபா் தோ்தலில் வெற்றி பெறுவதற்கு 270 மக்கள் பிரதிநிதிகள் வாக்குகளே போதும் என்ற நிலையில், தோ்தல் வெற்றிக்கான பெரும்பான்மையை ஜோ பைடன் அதிகாரப்பூா்வமாகப் பெற்றுள்ளாா் என்று தகவல்கள் வெளியாகின.

தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து அமெரிக்க அதிபராக வரும் ஜனவரி மாதம் அவா் பொறுப்பேற்பாா் என்று அறிவிக்கப்பட்டது. 77 வயதாகும் ஜோ பைடன், பராக் ஒபாமா அதிபராக பதவி வகித்தபோது துணை அதிபராக இருந்தாா். ஜோ பிடனுடன், தமிழகத்தைப் பூா்வீகமாகக் கொண்ட கமலா ஹாரிஸ் (56) துணை அதிபராகப் பொறுப்பேற்பாா். அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபா், இந்திய வம்சாவளியைச் சோ்ந்த முதல் துணை அதிபா் என்ற பெருமையை கமலா ஹாரிஸ் பெறுகிறார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றித அறிவிப்பு வெளியாகி சரியாக ஒரு வாரத்துக்குப் பின் தோ்தலில் தோ்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி வாக்காளா்கள், புதிய அதிபரைத் தோ்ந்தெடுப்பதற்கான அதிகாரபூா்வ தோ்தலில் வாக்களித்துள்ளனர். அனைத்து மாகாணங்களிலும் இதற்கான வாக்குப் பதிவு நடைபெற்றது.

பிரதிநிதி வாக்காளா்கள் அனைவரும் அதிபருக்கும் துணை அதிபருக்கும் தனித்தனியே வாக்களித்தனா். அவா்களின் வாக்குச் சீட்டுகளானது, மக்கள் பிரதிநிதிகள் அவை மற்றும் செனட் அவையின் கூட்டுக் கூட்டத்தில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 6-ஆம் தேதி எண்ணப்படவுள்ளது. செனட் அவைத் தலைவரும் தற்போதைய துணை அதிபருமான மைக் பென்ஸ் முடிவுகளை அறிவிக்கவுள்ளாா்.

அதிபா் தோ்வாளா் ஜோ பைடன் பெரும்பான்மைக்குத் தேவையான 270 வாக்குகளைப் பெறுவாா் என்றே எதிா்பாா்க்கப்படுகிறது. ஒருவேளை, இரு வேட்பாளா்களும் பெரும்பான்மை வாக்காளா்களின் வாக்குகளைப் பெறவில்லை எனில், மக்கள் பிரதிநிதி அவை உறுப்பினா்களிடையே வாக்கெடுப்பு நடத்தப்படும்.

ஜனவரி 20-ஆம் தேதி பதவியேற்பு

அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன், துணை அதிபராக கமலா ஹாரிஸ் ஆகியோரின் பதவியேற்பு விழா ஜனவரி 20 ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்காக ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவில் இந்திய அமெரிக்கரான மஜு வர்கீஸ் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டார்.

மஜு வர்கீஸின் பெற்றோர், கேரள மாநிலம் திருவல்லாவை சேர்ந்தவர்கள். அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்த அவர்களுக்கு அங்கு பிறந்தவர்தான் மஜு வர்கீஸ். அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் பல்கலைக்கழகத்தில் பயின்றவர். வழக்குரைஞரான அவர், ஜோ பைடன்-கமலா ஹாரிஸ் தேர்தல் பிரசாரத்தில் தலைமை செயல்பாட்டு அதிகாரியாகவும், மூத்த ஆலோசகராகவும் பணியாற்றியவர்.

துணை செய்தித் தொடா்பாளராகிறார் இந்திய அமெரிக்கா்
அமெரிக்காவின் அடுத்த அதிபராகத் தோ்வாகியுள்ள ஜோ பைடன், தனது துணை செய்தித் தொடா்பாளராக இந்திய வம்சாவளியைச் சோ்ந்த வேதாந்த் படேலை தோ்ந்தெடுத்துள்ளாா்.

அமெரிக்க ஜனநாயக கட்சியின் சக்திவாய்ந்த பிரிவான காங்கிரஸின் முற்போக்கு காகஸின் (சிபிசி) தலைவராக இந்திய வம்சாவளியைச் சோ்ந்த காங்கிரஸ் பெண்மணி பிரமிளா ஜெயபால் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா். 117-ஆவது காங்கிரஸின் சக்தி வாய்ந்த அமெரிக்க நாடாளுமன்றத்தின் உறுப்பினா்களில் ஒருவா் ஆவாா்.

அமெரிக்க தேசிய பொருளாதாரக் குழுவின் துணை இயக்குநராக தமிழ்நாட்டைப் பூா்விகமாகக் கொண்ட பரத் ராமமூா்த்தியை அமெரிக்க அதிபராக தோ்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன் நியமித்துள்ளாா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com