ஓரிடத்தில் வசிப்போர் தமது ஓய்வு நேரத்தில் மற்றொரு இடத்திற்கு சுற்றுப் பயணம் செய்து மன நிறைவு கொள்வதே சுற்றுலா.
அதாவது “பல்வேறு வகையான நடவடிக்கைகளின் மொத்தத் தொகையே சுற்றுலா. அதாவது நாடு, நகரம், பகுதி போன்றவற்றில் வெளிநாட்டவரால் செய்யப்படுகின்ற புகுதல், தங்குதல், வெளியேறுதல் போன்ற தன்மைகளின் அடிப்படையில் செயல்படுகின்ற பொருளாதார நடவடிக்கைகள் பற்றிய தன்மைகள் கொண்டதாது தான் சுற்றுலா”
ஓவ்வொரு மனிதனும் மன மகிழ்ச்சிக்காகவும், ஓய்வு நேரத்தை இன்பமாகச் செலவிடவும் சுற்றுலாவை விரும்புகிறான். அதாவது அதிகமாக கிடைக்கும் ஓய்வு, சம்பளத்துடன் கூடிய விடுப்பு, மக்களின் வாழ்க்கைத்தரம். போக்குவரத்து முன்னேற்றம், விரைவான செய்தித் தொடர்பு வசதி, மக்களின் செலவழிக்கும் திறன் போன்றவாற்றால் சுற்றாலாத்துறை ஒரு முக்கியமான தொழிற்துறையாகவே மாற்றியுள்ளன.
தனிமனிதனின் மனநிறைவில் தான் சுற்றுலா அடங்கியுள்ளது. இன்பமாக பொழுது போக்கவேண்டும் என்பது மனிதனின் விருப்பமாகும். இந்த உணர்வானது உலகம் தழுவிய ஒன்றாகும்.
அந்த துறைதான் கொள்ளை நோய்த்தொற்றால் இன்றைக்கு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
கரோனா பெருந்துதொற்றால் தேசிய மற்றும் சர்வதேச அளவில் போக்குவரத்து மற்றும் சுற்றுலாத்துறையை முற்றிலுமாக சீர்குலைத்துள்ளது.
சுற்றுலாத்துறையில் வேலைவாய்ப்பை இழப்பவர்களுடைய எண்ணிக்கையும், வேலைவாய்ப்புக்கான வாய்ப்பும் குறைந்து வருவதும் பொதுமக்களின் செலவழிக்கும் தன்மையில் பின்னடைவை ஏற்படுத்தி, பொருளாதாரச் சுணக்கத்தை ஏற்படுத்தியது.
பொது முடக்கத் தளர்வுகளைத் தொடர்ந்து, தடைபட்டிருந்த பொருளாதார நடவடிக்கைகள் மீண்டும் செயல்படத் தொடங்கியது.
இந்தியாவில் வேலை இழந்து மாற்று வேலைவாய்ப்புக்காக காத்திருப்பவர்களின் எண்ணிக்கை 1.7 கோடியிலிருந்து 5.07 கோடியாக அதிகரித்துள்ளதாகவும், இவர்கள் எந்த வேலையையும் செய்வதற்குத் தயாராக இருந்தாலும், அதற்கான வாய்ப்பு இல்லாதவர்களாக இருக்கிறார்கள் என்று இந்தியப் பொருளாதார கண்காணிப்பு அமைப்பின் அந்த அறிக்கையின் புள்ளிவிவரம் தெரிவித்தது.
வேலைவாய்ப்பு இல்லை என்பது மட்டுமல்லாமல், கொள்ளை நோய்த்தொற்று காரணமாக வர்த்தகம் குறைந்து காணப்படுவதால், புதிதாக வேலைக்கு ஆள்களை அமர்த்துவதிலும் தயக்கம் உள்ளது. நேரடியாக வேலைக்குப் போவதைவிட நோய்த்தொற்றுக்கு பயந்து வீட்டிலிருந்து வேலை செய்ய விழைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதும், வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதற்கு ஒரு காரணமாக அமைந்தது.
இந்த நிலையில் தான் உலகளாவிய முடக்கம் மற்றும் கடுமையான பயணக்கட்டுப்பாடுகளால், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை மட்டுமல்ல, உள்ளூர் பார்வையாளர்களையும் இழந்துள்ளது சுற்றுலாத்துறை.
சுற்றுலா அமைப்பு, சர்வதேச சுற்றுலா 2020 இல் $1.3 டிரில்லியன் இழப்பைக் கண்டுள்ளது, அதேநேரத்தில் இந்திய சுற்றுலாத்துறை ரூ.1.25 டிரில்லியன் வருவாய் இழப்பைக் கண்டுள்ளது என்று கேர்ரேட்டிங் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தொற்றுநோய் சுற்றுலாத்துறையின் அனைத்துப் பிரிவுகளுக்குள் வரும், வெளியூர், கார்ப்பரேட், எம்ஐசிஇ, சாகசம் மற்றும் ஓய்வு போன்றவற்றைப் பாதித்துள்ளது,
மேலும் அடுத்த இரண்டு காலாண்டுகளுக்கு இது தொடர்ந்து செயல்படும். அரசாங்க முயற்சிகளின் உதவியுடன் முடிவில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுற்றுலா 9.9 சதவிகிதமாக இருக்கும்.
2020 ஆம் ஆண்டில் இந்திய சுற்றுலாத்துறைக்கு ஏற்பட்ட இழப்புகள் மிகப் பெரியவை, ஆனால் 2021 தடுப்பூசி பயன்பாட்டால் பயணத்தின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
பாதுகாப்பு, தூய்மை மற்றும் சுகாதாரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதைப்போல பயணத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் காணப்பட்டன.
குறிப்பாக இமாச்சலப்பிரதேசம், உத்தரகண்ட், ராஜஸ்தான், கோவா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டன.
கரோனா பெருந்தொற்று பரவத் தொடங்கியதில் இருந்து, சுற்றுலாத் துறையானது பயணிகளின் தேவைக்கேற்ப பரிணமித்து வழிகளை மாற்றத் தொடங்கியது.
இந்தியாவில் தொற்று பாதிப்புகள் குறைந்து வருவதால், அந்தந்த மாநிலங்களின் மத்திய மற்றும் மாநில அரசுகள் கட்டுப்பாட்டுடன் கூடிய தளர்வு நிலைகளை அறிவித்தது.
சேவைகளை மீண்டும் தொடங்குவதற்கான அடிப்படை இயக்க நடைமுறைகள், ஹோட்டல்கள் மற்றும் விமான நிறுவனங்கள் போன்ற பல்வேறு இடங்களின் நுழைவாயில்களில் பாதுகாப்பு ஸ்கேன் என முக்கிய நெறிமுறைகள் எடுக்கப்பட்டு வெப்பத்திரையிடல் மற்றும் சுத்திகரிப்பு என முன்பைவிட கூடுதல் எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகின்றனர்.
உலகில் பல நாடுகள் தங்கள் நாட்டின் பயணத்துறையை மேம்படுத்த புதுமையான வழிகள் மற்றும் செயல்பாடுகளை மேற்கொண்டு வருகின்றன. அவற்றில் சில பாதுகாப்பான பயணத்திட்டங்கள், முன்முயற்சிகள் ஆகியவை அடங்கும். பல பயண முகவர் நிறுவனங்கள் இப்போது பயணிகளை கவருவற்கு பல்வேறு ஊக்குவிப்பு, சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை அறிவித்து வழங்கி வருகின்றன.
பல்வேறு நாடுகளில் பின்பற்றப்படும் தீர்வுகள் மற்றும் நடைமுறைகளைப் புரிந்துகொள்வதன் மூலம் இந்தியாவில் சுற்றுலாத்துறையின் மீட்சி மற்றும் மறுமலர்ச்சிக்கான சரியான உத்திகளைச் செயல்படுத்த முடியும்.
பல சேவைகள் தொடர்பில்லாதவையாக மாறி, பாதுகாப்பு மற்றும் சமூக இடைவெளியின் அனைத்து முக்கிய நெறிமுறைகளையும் பின்பற்றி வருகின்றன. நேரடி சமையல், ஆன்லைன் மூலம் உணவு விநியோக சேவைகள் மற்றும் டிஜிட்டல் முறைகள் தொழில்துறையின் வளர்ச்சிக்கு உதவும். ஹோட்டல், உணவகங்கள் மற்றும் ஓய்வு விடுதிகளிலும் டிஜிட்டல் முறைகள் பின்பற்றப்படுகின்றன.
பயணக்கட்டுப்பாடுகள் படிப்படியாக நீக்கப்படுவதோடு, பயணக்கட்டுப்பாடுகள் படிப்படியாகத் தளர்த்தப்படுவதால், சுற்றுலாப் பயணிகள் சர்வதேச அளவில் பயணம் செய்வதில் அசௌகரியமாக உணர்கிறார்கள். ஆனால் 2021 ஆம் ஆண்டில் உள்நாட்டு சுற்றுலாவில் அதிகரிப்பு காணப்பட்டது.
உள்நாட்டுத் துறையில் எதிர்கால ஏற்றம் ஏற்படுவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று, 2021 இல் பயணிகள் தங்கள் சொந்த நாட்டை ஆராய்ந்து குறுகிய வார இறுதி பயணங்களுக்கு செல்ல விரும்பியது.
எனவே, தொலைதூர இடங்களைப் பார்வையிடுவது அதிகரித்து வருகிறது மற்றும் உள்ளூர் வாசிகள் தங்கள் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கவும் உதவுகிறது.
இது உள்ளூர் பொருளாதாரத்தை மேம்படுத்துகிறது, அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்குகிறது, மேலும் சுற்றுலா தலங்களின் ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களின் மீட்சிக்கு உதவுகிறது, உள்ளூர் கலை கைவினைப்பொருள்கள் மற்றும் கலாச்சாரத்தை மேம்படுத்துகிறது.
பாதுகாப்பு மற்றும் சமூக இடைவெளிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதால், நீண்ட பயணங்களைவிட குறைந்த தூரம் பயணம் செய்வது பாதுகாப்பானது என்று சுற்றுலா பயணிகள் நினைக்கிறார்கள். இதனால்தான் பலர் கூட்டம் குறைவாக உள்ள தெரியாத இடங்களுக்கு குறுகிய சாலை பயணங்களை தேர்வு செய்து சென்று வந்தனர்.
2021 ஆம் ஆண்டுக்கான பயணிகளின் பட்ஜெட் பட்டியலில் இப்போது உள்நாட்டு விடுமுறை முதலிடத்தில் உள்ளது. ஜனவரி 2021 முதல் வாரத்தில் 70 சதவிகித பயனர்கள் ரிபேட் வைசரில் எதிர்கால உள்நாட்டுப் பயணங்களுக்கு முன்பதிவு செய்துள்ளனர். அமெரிக்காவில், 74 சதவிகிதத்துக்கும் அதிகமான பயணிகள் ஒரே இரவில் செல்ல விரும்பினர். 2021 இல் உள்நாட்டு ஓய்வுப்பயணம் மற்றும் 34 சதவிகிதத்துக்கும் அதிகமானோர் உள்நாட்டுப் பயணங்களைத் திட்டமிட்டனர், இது ஆஸ்திரேலியா,பிரிட்டன் போன்ற பிற நாடுகளுடன் ஒப்பிடும்போது மிக அதிகம்.
பல கட்டுப்பாடுகள் மற்றும் பயணத் தடைகளுடன், மக்கள் குறுகிய சாலைப் பயணங்களைத் தேர்வு செய்யத் தொடங்கினர். பல சுற்றுலாப் பயணிகள் பேருந்துகள், ரயில்கள் அல்லது விமான சேவைகள் போன்ற பொதுப் போக்குவரத்தைத் தவிர்த்தனர். அதற்குப் பதிலாக, அவர்கள் தங்கள் சொந்த வாகனங்களில் சாலைப் பயணங்களைச் செல்ல அல்லது வாடகைக் காரில் செல்ல திட்டமிட்டனர்.
இது ஒரு பாதுகாப்பான விருப்பமாகும். சாலைப் பயணங்கள் அனைத்து வயதினரும் குடும்பங்களும் சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமாக உள்ளன. அதுமட்டுமின்றி, பயணச் செலவுகளையும், தேர்ந்தெடுக்கும் இடத்தின் பரந்த விருப்பங்களையும் குறைத்தது. பாதி விருப்பங்கள் நிறைவேறியும் நிறைவேறாமலும் 2021 வாழ்க்கைப் பயணம் கடந்துவிட்டது.
"உலகிலுள்ள கடைசி மனிதன் வரை அனைவருக்கும் இரண்டு தவணை தடுப்பூசி போடப்படும்வரை கரோனா கொள்ளை நோய்த்தொற்று அபாயம் தொடரும்' என்று ஐ.நா. சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் கூறியிருப்பது உண்மையிலும் உண்மையாக இருந்த நிலையில், தடுப்பூசியாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாலும் கரோனா கொள்ளை நோய்த்தொற்றை எதிா்கொண்டு பாதிப்பில்லாமல் தொடரலாம் என்று உலகம் ஓரளவுக்கு துணிவு பெற்றிருந்த நிலையில், தற்போதுபோது உருமாற்றம் அடைந்த ‘ஒமைக்ரான்’ தொற்று உலகை அச்சுறுத்தி வருகிறது.
நோய்த்தொற்று முற்றிலுமாக எப்போது முடிவுக்கு வரும் என்று தெரியாது. அதனால் கரோனா கொள்ளை நோய் அல்லாத, தொற்றா நோய்களுக்கான சிகிச்சைகள் குறித்தும் கவலையாக உள்ளதால் கவனமாகவே இருப்போம். எதற்கும் தயாராகவே இருப்போம்!
இனி 2022 எல்லா விருப்பங்களையும் நிறைவேற்றும் என்ற நம்பிக்கையோடு வரவேற்று பயணிப்போம்.!!