2021-ன் சிறந்த 10 மலையாள திரைப்படங்கள்

அதிக படங்களை ஓடிடி தளத்தில் வெளியிட்டது மலையாள சினிமா தான். வெளியான அத்தனை படங்களிலும் நிறைய படங்கள் சிறந்தவை என்பது தான் ஆச்சரியம். 
2021-ன் சிறந்த 10 மலையாள திரைப்படங்கள்
2021-ன் சிறந்த 10 மலையாள திரைப்படங்கள்

வருடம் முழுவதும் காத்திருந்து தன் நாயகர்கள் நடித்த படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்த்து விட்டு அப்படம் வெற்றியா தோல்வியா என அது வசூல் செய்த தொகையை வைத்து கணக்கு போட்டிருந்த காலத்தை கரோனா மாற்றி ஒரு முக்கியமான செய்தியை சினிமா உலகத்திற்கு தெரியப்படுத்தியிருக்கிறது. நல்ல கதை இருந்தால் மட்டுமே இனி படம் ஓடும்.  அதை உறுதிசெய்யும் விதமாக மிகச் சிறிய பார்வையாளர்களை வைத்திருக்கிற மலையாள சினிமா ஒட்டுமொத்த இந்திய  சினிமாவின் முகமாக மாறிக்கொண்டிருக்கிறது. 2021-ஆம் ஆண்டில் அதிக படங்களை ஓடிடி தளத்தில் வெளியிட்டது மலையாள சினிமா தான். வெளியான அத்தனை படங்களிலும் நிறைய படங்கள் சிறந்தவை என்பது தான் ஆச்சரியம். 

1.தி கிரெட் இந்தியன் கிட்சன் (இயக்கம்-ஜியோ பேபி)

ஒரு சராசரி இந்தியப் பெண்களின் சமையலறை எப்படி இருக்கிறது என்பதாக தொடங்கினாலும் , அந்த அறையில் ஆண்களின் அதிகாரம் எப்படியெல்லாம் நிறைந்திருக்கிறது என்பதை மனைவியான நிமிஷாவை வைத்து ஒரு ஆண் பெண்ணை அடிமையாக வைத்திருக்கவே ஆசைப்படுகிறான் என்பதைக் கூறியிருக்கிறார்கள். இறுதியில் வலிகளைத் தாண்டி நிமிஷா எடுக்கும் முடிவு  ஒரு காலமாற்றம் என்பது ஆண்களுக்கானது மட்டுமல்ல பெண்களுக்கும் தான் என்கிறதை முன்வைத்ததால் இப்படம் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

2.த்ரிஷ்யம் 2 (இயக்கம்-ஜித்து ஜோசப்)

ஒரு கொலை நடக்கிறது.அதைத் தீவிரமாக விசாரிக்கும் காவல்துறையிடமிருந்து எப்படி அதில் தொடர்புடைய ஜார்ஜ் குட்டி(மோகன் லால்) தன் குடும்பத்தைக் காப்பாற்றுகிறார் என்பதை இரண்டு பாகம் வரை எடுத்திருக்கிறார்கள். முதல் பாகம் கொடுத்த மிகப்பெரிய வெற்றியே இரண்டாம் பாகத்தை தயாரிக்க காரணம் என்றாலும் ஒரு சாதாரண ஆள் தன் குடும்பத்தை காக்க எந்த நிலைக்கும் செல்வான் என்கிறதை கடைசி 30 நிமிடத்தில் இருக்கை நுனிக்கு அமரச்செய்து எதிர்பாராத திருப்பத்துடன் நிறைவு செய்திருக்கிறார்கள்.

3. கள (இயக்கம்-ரோஹித் விஎஸ்)

சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகர்களில் முக்கியமானவர் டோவினோ தாமஸ்.சமீப காலமாக மலையாளத்தில் வெளியாகும் இவரது படங்கள் கவனிக்க வைக்கிறது. 'கிலோ மீட்டர்ஸ் அண்ட் கிலோ மீட்டர்ஸ்' 'காணேகாணே ' போன்ற பட்டியலில் இணைந்த மற்றொரு படம் 'களை'. ஒரு நாட்டு நாயை டோவினோ வெடி வைத்துக் கொல்கிறார்.அந்த நாயின் உரிமையாளன் டோவினோவின் நாயை கொல்லாமல் விடமாட்டேன் என டோவினோவிடமே சொல்கிறான். படம் ஆரம்பித்த 20 -வது நிமிடத்தில் இருவருக்குள்ளும் நடக்கும் சண்டை திரைப்படம் முடியும் வரை தொடர்கிறது.ஒரு தோட்டம் , ஒரு வீடு போதாதா என அபாரமான சண்டை காட்சிகள் மூலம் மிகச் சிறந்த படத்தை உருவாக்கி விட்டார்கள்.

4.ஜோஜி (இயக்கம்- திலீஷ் போத்தன்)

வில்லியம் ஷேக்ஸ்பியர் எழுதிய 'மேக்பாத்' நாடகத்தை தழுவி எடுக்கப்பட்ட இப்படம் மலையாள சினிமாவின் சிறந்த 50 படங்களில் ஒன்றாக மாறியிருக்கிறது.ஒரு வீடு , குறைவான கதாப்பாத்திரங்கள் , செறிவான திரைக்கதை போதும் ஒரு சிறந்த படத்தை உருவாக்க என ஜோஜி நிரூபித்திருக்கிறது. மனித மனங்களின் பல கோணங்களை இப்படம் பேசியது ஒரு வெற்றி என்றால் ஜோஜியாக வந்த பஹத் பாசிலின் நடிப்பு இன்னொரு வெற்றி. 'சமூகம் ஒரு விஷம்' என்கிற வசனத்தை உச்சரிக்கிற போது அந்த முக வெளிப்படும் தருணத்தைக் கண்டு மிரளாமல் இருக்க முடியவில்லை. ஒரு சோக நாடக்கத்தின் முடிவுதான் 'ஜோஜி'க்கும் என்றாலும் நாம் உண்மையில் கவனிக்க வேண்டியது எந்த இடத்திலும் நாயகனைப் பெரிதாக்க காட்டாத கதையும் வசனம் தான்.

5.நயாட்டு (இயக்கம்-மார்டின் பிராகாட்)

கைதிகள் விசாரிக்கப்படும் காட்சிகளை பல சினிமாக்களில் கண்டிருக்கிறோம். ஆனால், படம் முழுக்க காவலர்கள் காவல்துறையிடம் இருந்து தப்பிக்க முயற்சி செய்வதை அடுத்தது என்ன? என்கிற எதிர்பார்ப்புடன் உருவாக்கி கடைசிவரை நம்மை சிந்திக்க வைத்திருக்கிறார்கள். 

6.மாலிக் (இயக்கம்-மகேஷ் நாராயணன்)

ரமடாபள்ளியில் இருக்கும் சாதாரண மாலிக்(பஹக் பாசில்) எப்படி அந்த ஊரின் தவிர்க்க முடியாத பெரிய தலைவராகிறான் என்பது தான் கதை. தமிழில் வெளிவந்த ’நாயகன்’ திரைப்படத்தை படம் முழுவதும் உணர முடிந்தாலும் அரசியல் காரணங்களால் என்னென்ன நடக்கிறது என்பதை திரைக்கதையின் மூலம் நேர்த்தியாக கடத்தியிருக்கிறார்கள்.

7. குருதி  (இயக்கம்-மனு வாரியர்)

இந்து  - இஸ்லாமிய ஒற்றுமையைப் பேசி பல படங்கள் வெளிவந்திருக்கிறது. ஆனால் இரண்டு மதத்தைச் சேர்ந்தவர்களின் வெறுப்பு இந்தப் படத்தில் சிறப்பாக அலசப்பட்டிருக்கிறது. மதம் பக்தியாக இருக்கும் வரை எந்தத் பிரச்னையும் இல்லை. ஆனால், மனிதனுக்குள் அது வெறுப்பாக மாறும் கணங்களை  பிரித்வ்ராஜின் தேர்ந்த நடிப்பாலும்  , எந்த விதத்திலும் ஒரு பக்க சாய்வாக செல்லாத திரைக்கதையாலும் சிறப்பாக உருவாக்கியிருக்கிறார்கள். குறிப்பாக , இருளில் நடக்கும் காட்சிகளின் ஒளிப்பதிவு ஒருவகை மேஜிக் தான். 

8. ஹோம் (இயக்கம்-ரோஜின் தாமஸ்)

இன்றைய தலைமுறை தேவையில்லாத இணைய வம்புகளிலும் , அடிமைப்படுத்தும் செயலிகளிலும் சிக்கி இருப்பதால் அவர்களைச் சுற்றி நடக்கிற அழகான விஷயங்களைப் பார்க்கத் தவறுவதையும் , குடும்பம் என்கிற அமைப்பு எந்தத்த விதத்தில் வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது என்பதையும் ஒரு வீட்டின் அறைகளுக்குள் கண்களை அலை பாயவிட்டால் எப்படி இருக்குமோ அப்படியான ஒளிப்பதிவின் மூலம் அசரடித்த்திருக்கிறார்கள். முக்கியமாக ஆலிவராக நடித்த இந்திரன் அசாதாரணமாக போகிற போக்கில் தன் இயல்பான உடல்மொழியால் வியக்க வைக்கிறார். வீட்டிலிருந்து தூரத்தில் இருப்பவர்களும், வீட்டிற்குள்ளேயே இருந்துகொண்டு தூரமாக இருப்பவர்களும் கட்டாயம் பார்க்க வேண்டிய திரைப்படம். அத்தனை அழகான திரைக்கதை.

9.காணேகாணே (இயக்கம்-மனு அசோகன்)

மனைவியை இழந்து மறுமணம் செய்துகொள்கிற டோவினோவிக்கும் , மகளை இழந்து தவிக்கும் சுராஜ் வெஞ்சரமூடுக்கும் இடையே நடக்கும் மனப் போராட்டம் தான் கதையின் கரு. ஆனால், பல இடங்களில் மனித மனங்களின் கோரப்பக்கத்தை துல்லியமாக காட்சிப்படுத்தி இந்திய சினிமாவிலேயே முக்கியமான திரைப்படமாக மாற்றியிருக்கிறார்கள். டோவினோவின் அழுகையும் , சுராஜின் அழுகையும் பார்வையாளர்களை உடைக்கக் கூடியது.

10.திங்கழாழ்ச்ச நிச்சயம் (இயக்கம்-சென்னா ஹெக்டே)

மூத்த மகள் காதல் திருமணம் புரிந்துகொண்டதால், இளைய மகளையாவது தான் நினைக்கும் ஆண் மகனுக்கு திருமணம் செய்துவைக்க வேண்டும் என்ற வைராக்கியத்தில் நிட்சயதார்த்தத்திற்கு ஏற்பாடு செய்யும் தந்தை, தனது மகளுக்கு நினைத்தபடி (திங்கள் கிழமை) நிட்சயதார்த்தம் செய்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் கதை. ஒரே நாளில் நடக்கும் இப்படத்தின் திரைக்கதையில் முழுக்க நகைச்சுவை உணர்வை அழகாக கடத்தியிருக்கிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com