ஜெய் பீமும் தேவை, ருத்ர தாண்டவமும் தேவை : ஏன் ?

ஜெய் பீம் மற்றும் ருத்ர தாண்டவம் படம் ஏன் தேவை என்பது குறித்து ஒரு பார்வை 
ஜெய் பீமும் தேவை, ருத்ர தாண்டவமும் தேவை : ஏன் ?

தமிழ் சினிமாவில் இப்போது போல் 80, 90களில் சாதிப் பெருமை பேசும் படங்களும், சமூக நீதி பேசும் படங்களும் தொடர்ந்து வெளியாகி இருந்திருக்கின்றன. ஆனால் முன்பு சாதிப் பெருமை பேசும் படங்களில் தமிழில் முன்னணி நடிகர்கள் நடித்தார்கள். சமூக நீதி பேசும் படங்களில் புதுமுக நடிகர்கள் நடித்தார்கள். இதனால் சாதி பெருமை பேசும் படங்கள் மக்களிடம் எளிதில் சென்று சேர்ந்தன. சமூக நீதிப் படங்கள் மக்களின் கவனத்தை பெரிதும் ஈர்க்கவில்லை. 

இப்பொழுது அந்த நிலை முற்றிலும் தலைகீழாக மாறியிருக்கிறது. சமீபத்தில் மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சியில் பேசிய பா.ரஞ்சித், சமூக நீதி பேசும் கலைஞர்களுக்கு அங்கீகாரம் கிடைக்காத நிலை உடைத்தெறியப்பட்டு தற்போது சமூக நீதி பேசினால் தான் மக்களிடம் நெருங்க முடியும் என்ற நிலை உருவாகியிருக்கிறது என்றார். 

அவரின் கூற்றுப்படி சாதிய ஏற்றத்தாழ்வுகளை உடைக்கும் வகையில் சமூக நீதி பேசம் படங்கள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன. அவற்றில் பெரும்பாலானவ தமிழின் முன்னணி நடிகர்கள் நடித்துக்கொண்டிருக்கின்றனர். இதற்கு அடித்தளம் அமைத்தது இயக்குநர் பா.ரஞ்சித் என்பது மறுக்க முடியாத உண்மை. 

எப்பொழுதும் ஒரே கருத்து மட்டும் முன் வைக்கப்பட்டால் அந்தக் கருத்து மிக விரைவில் வீரியமிழந்துவிடும். மாற்றுக்கருத்துகள் எழுந்தால் தான் எது சரி என்பதை விளக்குவதற்கு எளிதாக இருக்கும். அந்த வகையில் 2021 ஆம் ஆண்டு இரண்டு எதிரெதிர் கருத்துகளை பேசிய படங்களான ஜெய் பீம், ருத்ர தாண்டவம் திரைப்படங்கள் வெளியாகின. இரண்டு படங்களும் எது சரி, எது தவறு என பெரும் விவாதங்களை உருவாக்கின. 

ஜெய் பீம் திரைப்படம் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துருவின் வாழ்க்கையில் நடைபெற்ற உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியிருந்தது. பழங்குடியின மக்கள் மீது காவல்துறை பொய் வழக்குகள் மூலம் கைது செய்யும் முக்கிய பிரச்சனையை பேசிய விதத்தில் இந்தப் படம் தமிழின் முக்கிய படமாக அமைந்தது. இருப்பினும் மற்றொரு சமூகத்தை குறிப்பிடும் விதமாக, அந்த சமூகத்தின் சின்னத்தை  தவறாக பயன்படுத்தியிருப்பதாக விமர்சனங்களை சந்தித்தது. அதனை தவிர்த்திருந்தால் படத்தில் பேசப்பட்ட கருத்து அனைத்து தரப்பினரையும் எளிதில் சென்று சேர்ந்திருக்கும்.

மற்றொருபுறம் மோகன்.ஜி இயக்கத்தில் உருவான ருத்ர தாண்டவம், வன்கொடுமை தடுப்பு சட்டத்தை தவறாக பயன்படுத்துவதால் ஒரு காவல் அதிகாரிக்கு ஏற்படும் பாதிப்பை பதிவு செய்திருக்கிறது. போதைப் பொருள் பயன்படுத்தவதனால் ஏற்படும் விளைவுகள் என சில நல்ல கருத்துகள் இருந்தாலும், படத்தில் பெரும்பாலும் பிற்போக்குத்தனமான கருத்துக்களே இருந்தன. 

குறிப்பாக கட்டாய மதமாற்றத்தை விமர்சிப்பது இயக்குநரின் நோக்கமாக இருந்தாலும் அதற்கு அரசியல்வாதிகளை காரணம் காட்டியிருப்பது பிரச்னையின் நோக்கத்தை சிதைப்பதாக இருந்தது. இப்படி தவறான புரிதலோடு இயக்குநர் பல்வேறு காட்சிகளை காட்சிப்படுத்தியிருக்கிறார். வேண்டுமேன்றே சில அரசியல் தலைவர்களை வில்லனாக காட்ட முயற்சித்திருப்பது என முழுக்க முழுக்க இயக்குநரின் நோக்கமே தவறாக இருந்தது. 

இந்த இரண்டு படங்கள் வெளியானபோது சமூக வலைதளங்களில் பெரும் விவாதங்கள் எழுந்தன. மேலும் அரசியல் கட்சி தலைவர்களும் நடிகர்களும் தங்களின் கருத்துக்களை பதிவு செய்தனர். 

ஆனால் ஜெய் பீம் படம் பழங்குடியினரின் பிரச்னைகளை பேசியதன் காரணமாக, அரசு சார்பில் பழங்குடி அந்த சமூக மக்களுக்கு சாதி சான்றிதழ், மற்றும் இருப்பிடத்துக்கான பட்டா வழங்கப்பட்டது. சமீபத்தில் ராசாகண்ணுவின் மனைவி பார்வதியம்மாளுக்கு அரசு செலவில் வீடு கட்டித்தரப்படும் என அறிவிக்கப்பட்டது. இப்படி ஒரு படத்தினால் தமிழ் சமூகத்தில் நேர்மறையான மாற்றம் நிகழ்ந்திருப்பதை வைத்து எந்த கருத்து சரி என்பதை எளிதில் புரிந்துகொள்ள முடியும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com