கோலி - கங்குலி மோதல், மண்டியிடாத டி காக், பாலியல் விவகாரம்: 2021 கிரிக்கெட் சர்ச்சைகள்

ஆடுகளத்தில் மட்டுமல்ல, ஆடுகளத்துக்கு வெளியேயும் பல மோதல்கள்...
கோலி - கங்குலி மோதல், மண்டியிடாத டி காக், பாலியல் விவகாரம்: 2021 கிரிக்கெட் சர்ச்சைகள்

கிரிக்கெட்டும் சர்ச்சைகளும் பின்னிப் பிணைந்தவை. ஆடுகளத்தில் மட்டுமல்ல, ஆடுகளத்துக்கு வெளியேயும் பல மோதல்கள் நடைபெறும். பல சர்ச்சைகள் ஏற்படும்.

2021-ல் அதிக அளவில் விவாதிக்கப்பட்ட கிரிக்கெட் சர்ச்சைகள் இவை:

ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல்

ஐபிஎல் போட்டி
ஐபிஎல் போட்டி

கரோனா சூழல் காரணமாக 2020 ஐபிஎல் போட்டி, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இந்த வருடப் போட்டி இந்தியாவிலேயே நடத்தப்படும் என முதலில் அறிவிக்கப்பட்டது. சென்னை, மும்பை, கொல்கத்தா, ஆமதாபாத், தில்லி, பெங்களூர் ஆகிய ஆறு நகரங்களில் ஐபிஎல் போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆரம்பத்தில் சென்னை, மும்பையில் ஐபிஎல் ஆட்டங்கள் நடைபெற்றன. அடுத்ததாக ஆமதாபாத், தில்லியில் ஆட்டங்கள் நடைபெற்று வந்தன.

கொல்கத்தா நைட் ரைடா்ஸ் அணி வீரா்களான வருண் சக்கரவா்த்தி, சந்தீப் வாரியர், சிஎஸ்கே பந்துவீச்சுப் பயிற்சியாளர் எல். பாலாஜி, பேருந்துப் பராமரிப்பாளர் ஆகியோர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டார்கள். இதனால் இரு அணி வீரர்களும் விடுதி அறையில் தனிமைப்படுத்தப்பட்டார்கள். 

இதையடுத்து கொல்கத்தா - பெங்களூா் அணிகள் மோத இருந்த ஆட்டமும் சிஎஸ்கே - ராஜஸ்தான் ஆட்டமும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டன. கரோனா பாதிப்பு சன்ரைசர்ஸ் அணியையும் விட்டுவைக்கவில்லை. அந்த அணியின் விக்கெட் கீப்பர் சஹா, கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து சன்ரைசர்ஸ் அணி வீரர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டார்கள். பிறகு மும்பை - சன்ரைசர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டமும் ஒத்திவைக்கப்பட இருந்தது. 

கரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகியதால் ஐபிஎல் போட்டியைத் தொடர்ந்து நடத்துவது குறித்த கேள்விகளும் எழுந்தன. இதையடுத்து ஐபிஎல் 2021 போட்டி ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அதிகாரபூர்வமாக அறிவித்தது. வீரர்கள் மற்றும் அணிகளின் பாதுகாப்பு கருதி ஐபிஎல் 2021 போட்டி ஒத்திவைக்கப்படுகிறது. போட்டியில் பங்கேற்ற அனைவரும் பாதுகாப்பாகப் பயணம் செய்து வீடு திரும்புவதற்கான ஏற்பாடுகளை பிசிசிஐ செய்து தரும் என அறிக்கை வெளியிட்டது. 52 நாள்களுக்கு நடைபெறுவதாக இருந்த ஐபிஎல் போட்டியில் 60 ஆட்டங்கள் இடம்பெற இருந்தன. ஆனால் 24 நாள்களில் 29 ஆட்டங்கள் மட்டுமே நடைபெற்றன.

இதன்பிறகு ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் 2021 போட்டியின் 2-ம் பாகம் நடைபெற்று, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை வென்றது. 

பாகிஸ்தான் ரசிகர்களை ஏமாற்றிய நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள்

நியூசிலாந்து அணி
நியூசிலாந்து அணி

பாகிஸ்தானில் மூன்று ஒருநாள், 5 டி20 ஆட்டங்களை விளையாடத் திட்டமிட்டு பாகிஸ்தானுக்கு வந்தது நியூசிலாந்து அணி. 18 வருடங்களுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு நியூசிலாந்து சுற்றுப்பயணம் செய்வதால் இந்தத் தொடர் பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்தது. ஒருநாள் ஆட்டங்கள் ராவல்பிண்டியிலும் டி20 தொடர் லாகூரிலும் நடைபெறவிருந்தன. முதல் ஒருநாள் ஆட்டம் செப்டம்பர் 17 அன்று நடைபெறுவதாக இருந்தது.

ஆனால், ஆட்டம் தொடங்க சில நிமிடங்கள் வரை இரு அணி வீரர்களும் மைதானத்துக்கு வரவில்லை, ரசிகர்களும் மைதானத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் அசாதாரணமான சூழல் நிலவியது.

பாகிஸ்தானில் விளையாடவிருந்த ஒருநாள், டி20 தொடர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தகவல் அளித்தது. பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை ரத்து செய்கிறோம். நியூசிலாந்து அணி வீரர்கள் உடனடியாக நாடு திரும்ப ஏற்பாடுகள் செய்யப்படும் என நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம், தொடர் ரத்தானது குறித்து அறிக்கை வெளியிட்டது.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் பாகிஸ்தானும் உச்சக்கட்ட பாதுகாப்பை இங்கு கிரிக்கெட் விளையாட வரும் அணிகளுக்கு வழங்கி வருகிறோம். நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கும் அத்தகைய பாதுகாப்பை உறுதி செய்தோம். நியூசிலாந்து பிரதமரிடம் தனிப்பட்ட முறையில் பாகிஸ்தான் பிரதமர் பேசினார். உலகளவில் சிறந்த புலனாய்வு அமைப்பு எங்களிடம் உண்டு. அதனால் பாதுகாப்பு அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்று எடுத்துரைத்தார். நியூசிலாந்து அணியின் பாதுகாப்பு அதிகாரிகளும் எங்களுடைய பாதுகாப்பு ஏற்பாடுகளில் திருப்தியை வெளிப்படுத்தினார்கள். கடைசி நேர விலகலால் பாகிஸ்தான் மற்றும் சர்வதேச அளவில் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளார்கள் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நியூசிலாந்தின் முடிவுக்குத் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியது. 

இதையடுத்து பாகிஸ்தானில் இரு டி20 ஆட்டங்களில் விளையாடவிருந்த இங்கிலாந்து அணியும் பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை ரத்து செய்தது. இதனால் பாகிஸ்தான் ரசிகர்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்தார்கள். 

இங்கிலாந்தில் புயலைக் கிளப்பிய இனவாதக் குற்றச்சாட்டு

குடும்பத்தினருடன் அஸீம் ரபிக் (படம் - instagram.com/azeemrafiq30/)
குடும்பத்தினருடன் அஸீம் ரபிக் (படம் - instagram.com/azeemrafiq30/)

30 வயது முன்னாள் வீரர் அஸீம் ரபிக், தன்னுடைய கிரிக்கெட் வாழ்வின் பெரும்பகுதியை யார்க்‌ஷையர் கிளப்பில் செலவிட்டுள்ளார். பாகிஸ்தானில் பிறந்தவர் 10 வயதில் இங்கிலாந்துக்குக் குடிபெயர்ந்தார். இங்கிலாந்து அணியின் இளையோர் அணிகளுக்கு கேப்டனாக இருந்துள்ளார். 2012-ல் யார்க்‌ஷையர் அணியின் கேப்டன் ஆனார். 

யார்க்‌ஷையர் அணியில் நிலவிய இனவாதம் காரணமாக என் கிரிக்கெட் வாழ்க்கையை இழந்தேன். அது என்னைத் தற்கொலைக்குத் தூண்டியது  என்று கடந்த வருடம் செப்டம்பர் மாதம் பேட்டியளித்தார். பாகிஸ்தானைப் பூர்வீகமாகக் கொண்டிருப்பதால் அதுதொடர்பாக இழிவுபடுத்தப்பட்டேன் என்றார். இதையடுத்து அஸீம் ரபீக்கின் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை செய்தது யார்க்‌ஷையர். ஒரு வருட விசாரணையின் முடிவில், இனவாதம் காரணமாக அஸீம் ரபீக் பாதிக்கப்பட்டார் என்று கூறியது. எனினும் எந்த ஒரு வீரரும் நிர்வாகியும் இதற்காகத் தண்டிக்க மாட்டார்கள் என அக்டோபர் 28 அன்று கூறியது. யார்க்‌ஷையர் கிரிக்கெட் கிளப், நிறுவன ரீதியாக இனவாதத்தை மேற்கொண்டது என நிரூபிப்பதற்குப் போதிய ஆதாரங்கள் இல்லை என கிளப்பின் தலைவர் ரோஜர் ஹட்டன் கூறினார். 

இதையடுத்து யார்க்‌ஷையர் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. லீட்ஸில் உள்ள ஹெட்டிங்லி மைதானத்தில் சர்வதேச ஆட்டங்களை யார்க்‌ஷையர் நடத்த இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இடைக்காலத் தடை விதித்தது. இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் எதிர்பார்க்கும் அளவுகோலைப் பூர்த்தி செய்யும்வரை இந்நிலை தொடரும் என அறிவித்தது.

இதன் விளைவாக, யார்க்‌ஷையர் தலைவர் ஹட்டன் தனது பதவியை ராஜிநாமா செய்து, அஸீம் ரபீக்கிடம் மன்னிப்பு கோரினார். எம்.பி.க்கள் முன்பு, யார்க்‌ஷையர் கிளப், நிறுவன ரீதியாக இனவாதத் தன்மை கொண்டதை ஏற்றுக்கொண்டார். யார்க்‌ஷையர் கிளப்பின் தலைமைச் செயல் அதிகாரி மார்க் ஆர்தர் உள்பட பல உறுப்பினர்கள் பதவி விலகினார்கள். இதையடுத்து புதிய தலைவராக லார்ட் படேல் நியமனம் செய்யப்பட்டார். பிரச்னையை முன்வைத்த அஸீம் ரபீக்கைப் பாராட்டினார். அவருடைய குற்றச்சாட்டுகள் குறித்து நடவடிக்கைகள் எடுப்பதாகவும் தெரிவித்தார். 

அஸீம் ரபீக்கைத் தொடர்ந்து இங்கிலாந்து கிரிக்கெட்டில் தாங்கள் எதிர்கொண்ட இனவாதச் சம்பவங்களைப் பலரும் பகிர்ந்துகொண்டார்கள். யார்க்‌ஷையர் கிளப்பின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வான், இனவாதக் கருத்துகளை வெளிப்படுத்தியதாக மூன்று முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்தார்கள். அஸீம் ரபீக் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணை அறிக்கையில் தன்னுடைய பெயர் இடம்பெற்றுள்ளதை ஒப்புக்கொண்ட மைக்கேல் வான், இனவாதக் கருத்துகளைத் தான் வெளிப்படுத்தியதில்லை எனத் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தார். இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன், இங்கிலாந்தில் வாழும் ஆசியர்கள், அஸீம் ரபீக் எதிர்கொண்ட சம்பவங்களை அனுபவித்துள்ளார்கள் என்று கூறினார். ஆஷஸ் தொடருக்கான பிபிசி வர்ணனையாளர்கள் குழுவிலிருந்து மைக்கேல் வான் நீக்கப்பட்டார். 

பாலியல் விவகாரத்தால் கிரிக்கெட்டிலிருந்து விலகியிருக்கும் ஆஸி. டெஸ்ட் கேப்டன் டிம் பெயின்

டிம் பெயின்
டிம் பெயின்

2018-ல் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் 46-வது கேப்டனாக விக்கெட் கீப்பர் டிம் பெயின் நியமிக்கப்பட்டார். 2019 ஆஷஸ் தொடரில் கோப்பையைத் தக்கவைக்க உதவினார். பாலியல் விவகாரம் தொடர்பான சர்ச்சையில் சிக்கிய காரணத்துக்காக கேப்டன் பதவியிலிருந்து திடீரென விலகினார் டிம் பெயின். 

2017-ல் கிரிக்கெட் டாஸ்மேனியா அலுவலகத்தில் பணியாற்றிய பெண்ணுக்கு பாலியல் ரீதியான குறுஞ்செய்திகளை டிம் பெயின் அனுப்பினார். இதுதொடர்பான செய்திகள் சமீபத்தில் வெளியாயின. இந்த விவகாரம் தொடர்பாக சில வருடங்களுக்கு முன்பு விசாரணை நடத்தியது கிரிக்கெட் ஆஸ்திரேலியா. அதில் டிம் பெயின், விதிமுறைகளை மீறவில்லை என்பதால் தண்டனையிலிருந்து தப்பினார். எனினும் இந்தச் சர்ச்சை ஊடகங்களில் வெளியானதால் இச்சூழலில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக நீடிப்பது உகந்ததாக இருக்காது எனக் கருதி கேப்டன் பதவியிலிருந்து விலகினார். 

ஆஷஸ் தொடரின் கேப்டனாக டிம் பெயின் நியமிக்கப்பட்டு அணியும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் திடீரென கேப்டன் பதவியிலிருந்து பெயின் விலகியதால் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் நெருக்கடி நிலவியது. இதன்பிறகு ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் நியமிக்கப்பட்டார். மேலும் துணை கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் தேர்வானார். 1956-க்குப் பிறகு ஆஸ்திரேலிய அணிக்கு ஒரு வேகப்பந்து வீச்சாளர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 

ஆஷஸ் தொடரில் ஒரு வீரராக இடம்பெறத் தயார் என கேப்டன் பதவியிலிருந்து விலகியபோது அறிவித்தார் டிம் பெயின். ஆனால் ஆஸி. அணியில் டிம் பெயின் நீடிப்பது அணிக்குத் தொந்தரவாக இருக்கும் எனக் கருதப்பட்டது. பிறகு, கிரிக்கெட்டிலிருந்து தற்காலிக ஓய்வு எடுத்துக் கொண்டுள்ளார் டிம் பெயின்.

மனநலத்துக்கு முக்கியத்துவம் அளித்து டிம் பெயின் தற்காலி ஓய்வு எடுத்துள்ளதாக அவருடைய மேலாளர் ஜேம்ஸ் ஹெண்டர்சன் சமீபத்தில் ட்வீட் செய்தார். அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் டிம் பெயின் தற்காலிக ஓய்வை எடுத்துள்ளதாக கிரிக்கெட் டாஸ்மானியாவும் தகவல் அளித்தது. இதையடுத்து ஆஷஸ் தொடரிலிருந்து டிம் பெயின் விலகினார். மீண்டும் அவர் எப்போது விளையாடுவார் என்று தெரியவில்லை. இதற்குப் பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரால் மீண்டும் விளையாட முடியுமா என்பதும் சந்தேகமாக உள்ளது. 

36 வயது டிம் பெயின், 35 டெஸ்டுகள், 35 ஒருநாள், 12 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான இரு டெஸ்ட் தொடர்களில் டிம் பெயின் தலைமையிலான ஆஸி. அணி தோற்றாலும் 2019-ல் இங்கிலாந்தில் நடைபெற்ற ஆஷஸ் தொடரை சமன் செய்து கோப்பையைத் தக்கவைத்துக்கொண்டது. 

கோலி - கங்குலி மோதல்

விராட் கோலி
விராட் கோலி

பருப்பு இல்லாமல் கல்யாணமா, கோலி இல்லாமல் சர்ச்சையா?

2021 வருடக் கடைசியில் கோலி - கங்குலி இடையிலான மோதல் வெளிச்சத்துக்கு வந்தது.

டி20 உலகக் கோப்பைப் போட்டி தொடங்கு முன்பு, டி20 கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார் விராட் கோலி. அடுத்ததாக, ஐபிஎல் 2021 போட்டிக்குப் பிறகு ஆர்சிபி அணி கேப்டன் பதவியிலிருந்தும் விலகுவதாக அறிவித்தார். டி20 கேப்டன் பதவியை உதறிய பிறகு கோலி கூறியதாவது: இந்திய டெஸ்ட், ஒருநாள் அணிகளை வழிநடத்த டி20 உலகக் கோப்பைப் போட்டிக்குப் பிறகு டி20 கேப்டன் பதவியில் இருந்து விலகுகிறேன். இதுபற்றி ரவி சாஸ்திரி, ரோஹித் சர்மாவிடம் விவாதித்த பிறகே இம்முடிவை எடுத்தேன். கங்குலி, ஜெய் ஷா, தேர்வுக்குழுவினர் ஆகியோரிடமும் இதுபற்றி தகவல் தெரிவித்துள்ளேன். இந்திய அணிக்காகத் தொடர்ந்து என்னுடைய திறமையை வெளிப்படுத்துவேன் என்றார். டி20 கேப்டன் பதவியிலிருந்து விலகினாலும் ஒருநாள் அணிக்குத் தலைமை தாங்க தனது விருப்பத்தைத் தெரிவித்தார். ஆனால் டிசம்பர் மாதம் காட்சிகள் எல்லாம் மாறின. 

கோலியின் முடிவுக்குப் பிறகு இந்திய டி20 அணி கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டார். இச்சமயத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரின் கேப்டனாக ரோஹித் சர்மாவை நியமித்து சர்ச்சையை ஏற்படுத்தியது பிசிசிஐ. இதனால் 2023 ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணியை வழிநடத்த வேண்டும் என்று ஆசைப்பட்ட கோலியின் கனவு தகர்ந்தது. 

டி20 கேப்டன் பதவியிலிருந்து கோலி விலகிய பிறகு பேட்டியளித்த கங்குலி, டி20 கேப்டன் பதவியில் நீடிக்குமாறு கூறினோம். ஆனால் கோலி அந்த முடிவை ஏற்கவில்லை என்றார். ஒருநாள், டி20 என இரண்டுக்கும் வெவ்வேறு கேப்டன்கள் இருப்பதைத் தேர்வுக்குழுவினர் விரும்பவில்லை. அதனால் தான் ஒருநாள், டி20 ஆகிய அணிகளின் கேப்டனாக ரோஹித் சர்மாவை நியமித்தோம் எனப் புதிய முடிவுக்கு விளக்கம் அளித்தார்.

இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்குப் புறப்படும் முன்பு செய்தியாளர்களை இணையம் வழியாகச் சந்தித்த விராட் கோலி, வெளிப்படையாகப் பேசி அதிர்வலைகளை உருவாக்கினார். கோலி கூறியதாவது:

டிசம்பர் 8 அன்று தேர்வுக்குழு கூடுவதற்கு ஒன்றரை மணி நேரத்துக்கு முன்பு தேர்வுக்குழுவினர் என்னைத் தொடர்பு கொண்டார்கள். டி20 கேப்டன் பதவியிலிருந்து விலகியது முதல் எவ்வித தகவலும் எனக்கு அளிக்கப்படவில்லை. தெ.ஆ. தொடருக்கான டெஸ்ட் அணி பற்றி தேர்வுக்குழுத் தலைவர் என்னிடம் விவாதித்தார். இருவரும் அணி பற்றிய விவரங்களை ஏற்றுக்கொண்டோம். அந்த தொலைபேசி அழைப்பு முடியும் முன்பு, ஒருநாள் கேப்டன் பதவியில் நான் இல்லை என்பதை ஐந்து தேர்வுக்குழு உறுப்பினர்களும் முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. அப்படியா நல்லது எனப் பதில் அளித்தேன். டி20 கேப்டன் பதவியிலிருந்து நான் விலகியபோது அதை நன்கு வரவேற்றார்கள். முற்போக்கான முடிவு எனப் பாராட்டப்பட்டது. டி20 கேப்டன் பதவியிலிருந்து விலக வேண்டாம் என என்னிடம் யாரும் சொல்லவில்லை என்றார். 

டி20 கேப்டன் பதவியிலிருந்து விலக வேண்டாம் என கோலியிடம் கோரிக்கை வைத்ததாக செளரவ் கங்குலி கூறிய நிலையில் விராட் கோலி இவ்வாறு கூறியிருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. கோலி, கங்குலி ஆகிய இருவரும் முரண்பாடாகப் பேசியிருப்பதால் அது இந்திய கிரிக்கெட்டைப் பாதிக்குமா என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள். கோலி அளித்த பேட்டிக்குப் பின்விளைவுகள் உண்டா என்பது இனிமேல் தான் தெரியவரும். 

ஆப்கானிஸ்தானில் கிரிக்கெட் நிலவரம்! 

ஆப்கானிஸ்தான் அணி
ஆப்கானிஸ்தான் அணி

ஆப்கானிஸ்தானில் அரசுப் படைகள், தலிபான் பயங்கரவாதிகள் இடையிலான மோதலால் தனது நாட்டைக் காப்பாற்றுமாறு உலகத் தலைவர்களுக்குப் பிரபல கிரிக்கெட் வீரர் ரஷித் கான் வேண்டுகோள் விடுத்தார். ட்விட்டரில் அவர் கூறியதாவது: அன்பான உலகத் தலைவர்களே, எங்கள் நாட்டில் பெருங்குழப்பம் நிலவி வருகிறது. குழந்தைகள், பெண்கள் உள்பட ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்படுகிறார்கள். வீடுகளும் உடைமைகளும் தகர்க்கப்படுகின்றன. ஆயிரம் குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளார்கள். எங்களை இந்த நிலையில் விட்டுவிடாதீர்கள். ஆப்கன்களைக் கொல்வதையும் ஆப்கானிஸ்தானை அழிப்பதையும் நிறுத்தவும். எங்களுக்கு அமைதி வேண்டும் என்று கூறினார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளாகத் தங்கி சண்டையிட்டு வந்த அமெரிக்கப் படையினரைத் திரும்ப அழைத்தார். அந்தச் சூழலைப் பயன்படுத்தி, ஆப்கானிஸ்தானில் புதிய பகுதிகளைக் கைப்பற்றி வெகுவேகமாக முன்னேறி வந்த தலிபான்கள், ஒரே வாரத்தில் நாட்டின் ஏறத்தாழ அனைத்து பகுதிகளையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்கள். தலிபான்களுக்கு அஞ்சி காபூலில் தஞ்சமடைந்திருந்த ஏராளமான பொதுமக்கள், அங்கிருந்து அவசரமாக வெளியேறினார்கள். அதிபர் அஷ்ரப் கானி, ஆப்கனிலிருந்து வெளியேறினார். அதன் தொடா்ச்சியாக நகருக்குள் புகுந்த தலிபான்கள் அதிபா் மாளிகை, நாடாளுமன்றம் ஆகியவற்றைக் கைப்பற்றினா். பிறகு போர் முடிவுக்கு வந்ததாக தலிபான்கள் அறிவித்தார்கள்.

ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றிய தலிபான்கள், கிரிக்கெட் நிர்வாகத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தினார்கள். ஐபிஎல் உள்பட கிரிக்கெட் போட்டிகளை மைதானங்களில் நேரில் பார்ப்பவர்களில் பெண்களும் இருப்பதால் ஆப்கானிஸ்தானில் கிரிக்கெட் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது. கிரிக்கெட் ஒளிபரப்பு இஸ்லாமிய கொள்கைகளுக்கு எதிராக உள்ளதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் ஊடக மேலாளர் இப்ராஹிம் தெரிவித்தார். இதைவிடவும் ஆப்கானிஸ்தானில் வாழும் பெண்கள் கிரிக்கெட் ஆட்டங்களில் பங்கேற்பதற்குத் தடை விதிக்கப்பட்டது. இந்த முடிவு கிரிக்கெட் வட்டாரத்தில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை ஒத்திவைத்தது ஆஸ்திரேலியா. 

ஆஸ்திரேலியாவின் தெ.ஆ. சுற்றுப்பயணம் ரத்து

ஆஸ்திரேலிய அணி
ஆஸ்திரேலிய அணி

கடந்த பிப்ரவரி மாதம், ஆஸ்திரேலியாவின் தென் ஆப்பிரிக்கச் சுற்றுப்பயணம் ஒத்திவைக்கப்பட்டது. இதுகுறித்த அறிக்கையில் கிரிக்கெட் ஆஸ்திரேலியா கூறியதாவது: 

தென் ஆப்பிரிக்காவில் கரோனாவின் 2-ம் அலை உருவாகி, உருமாற்றம் பெற்ற கரோனா நோய்த்தொற்று பரவியுள்ளது. இந்தச் சூழலில் தென் ஆப்பிரிக்காவுக்குப் பயணம் செய்வது வீரர்களுக்கும் பயிற்சியாளர்களுக்கும் பணியாளர்களுக்கும் ஆபத்தானதாக இருக்கும். ஆஸ்திரேலியச் சுற்றுப்பயணத்துக்காக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் கடும் முயற்சிகளை எடுத்து வருவதை கவனத்தில் கொள்கிறோம். இந்தத் தொடரை நடத்த கூடுதல் செலவு செய்யவும் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் தயாராக உள்ளது. எனினும் எங்கள் வீரர்களின் பாதுகாப்பே எங்களுக்கு முக்கியம். கரோனா பாதுகாப்பு வளையத்தில் இருப்பதற்கு நாங்கள் சம்மதிக்க முயன்றாலும் சூழல் ஆபத்தானதாக உள்ளது. எனவே தென் ஆப்பிரிக்காவுடான டெஸ்ட் தொடர் ஒத்திவைக்கப்படுகிறது. மற்றொரு தேதியில் இந்தத் தொடர் நடைபெறும். இதுகுறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று அறிக்கையில் கூறப்பட்டது. 

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என வென்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி இறுதிச்சுற்றுக்கு ஆஸ்திரேலிய அணியால் தகுதி பெற முடியும். ஆனால், டெஸ்ட் தொடரில் பங்கேற்காததால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிச்சுற்றுக்கு ஆஸ்திரேலிய அணி தகுதி பெறவில்லை. 

சர்ச்சைக்குரிய ட்வீட்கள்: தடை, அபராதத்துடன் விளையாட அனுமதிக்கப்பட்ட இங்கிலாந்து வீரர் ஆலி ராபின்சன்

<strong>ஆலி ராபின்சன்</strong>
ஆலி ராபின்சன்

இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்டில் இங்கிலாந்து சார்பாக 27 வயது ஆலி ராபின்சன் அறிமுகமானார். அந்த டெஸ்டில் ஏழு விக்கெட்டுகளை அவர் வீழ்த்தினார். 

2012 முதல் 2014 வரையிலான காலகட்டத்தில் இனவெறி உணர்வுகளுடன் சர்ச்சைக்குரிய ட்வீட்களை ஆலி ராபின்சன் வெளியிட்டுள்ளார். இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன. இதையடுத்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பங்குபெற ஆலி ராபின்சனுக்கு இடைக்காலத் தடை விதித்தது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் (இசிபி). நியூசிலாந்து தொடரிலிருந்தும் அவர் விடுவிக்கப்பட்டார்.  

தன்னுடைய ட்வீட்களுக்கு ராபின்சனும் உடனடியாக வருத்தம் தெரிவித்தார். நான் இனவெறியன் அல்லன். பாலின அடிப்படையில் வேறுபாடு பார்ப்பவனும் அல்லன். என்னுடைய நடவடிக்கைகளுக்கு நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். அப்படிப்பட்ட ட்வீட்களை வெளியிட்டதற்காக வெட்கப்படுகிறேன். பொறுப்பில்லாமல் நடந்துகொண்டுள்ளேன். அப்போது நான் என்ன மனநிலையில் இருந்திருந்தாலும் என்னுடைய நடவடிக்கைகளுக்கு மன்னிப்பு கிடையாது. அதன்பிறகு நான் பக்குவம் அடைந்துள்ளேன். என்னுடைய ட்வீட்களுக்கு வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன் என இதுதொடர்பாக வெளியிட்ட விடியோவில் தெரிவித்தார் ஆலி ராபின்சன். 

இதையடுத்து ஆலி ராபின்சன் 8 ஆட்டங்களில் விளையாட தடை விதிக்கப்பட்டது. அதில் 5 ஆட்டங்களுக்கான தடையை அடுத்த இரண்டு வருடங்களுக்கு விதிக்க முடியாது. மேலும் கிட்டத்தட்ட ரூ. 33 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இசிபி அமைத்த கிரிக்கெட் கட்டுப்பாடு ஆணையம் இந்த முடிவைத் தெரிவித்துள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான ஒரு டெஸ்ட், விடாலிடி பிளாஸ்ட் டி20 ஆட்டங்கள் ஆகியவற்றை கணக்கில் எடுத்துக்கொண்டது இசிபி. எனவே உடனடியாக சர்வதேச மற்றும் இதர கிரிக்கெட் ஆட்டங்களில் விளையாட ஆலி ராபின்சன் அனுமதிக்கப்பட்டார். இதனால் இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரில் விளையாட ராபின்சனுக்கு அனுமதி கிடைத்தது.

இசிபியின் முடிவை ஏற்றுக்கொள்கிறேன். ஏற்கெனவே நான் கூறியபடி பழைய ட்வீட்களுக்காக வெட்கப்படுகிறேன். அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று ஆலி ராபின்சன் கூறினார்.

உத்தரகண்ட் அணியில் மத ரீதியிலான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட வாசிம் ஜாஃபர் 

<strong>வாசிம் ஜாஃபர் </strong>
வாசிம் ஜாஃபர் 

இந்திய அணிக்காக 31 டெஸ்டுகள், 2 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடிய வாசிம் ஜாஃபர், கடந்த வருடம் 42 வயதில் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றார். இதையடுத்து உத்தரகண்ட் அணியின் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். 2020-21-ல் நடைபெற்ற சையத் முஷ்டாக் டி20 போட்டியில் உத்தரகண்ட் அணி, ஐந்து ஆட்டங்களில் நான்கில் தோல்வியடைந்தது. 

இதையடுத்து அணித்தேர்வில் தலையீடு இருப்பதாகக் குற்றம் சாட்டி பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலகினார் வாசிம் ஜாஃபர். அணித்தேர்வில் தேர்வுக்குழுவினரும் செயலாளரும் ஒருதலைப்பட்சமாக நடந்துகொள்கிறார்கள் என்றும் விமர்சனம் செய்தார்.

உத்தரகண்ட் கிரிக்கெட் அணியின் செயலாளர் மஹிம் வர்மா, வாசிம் ஜாஃபரின் குற்றச்சாட்டுகளை மறுத்தார். அவர் கேட்ட அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தோம். வெளிமாநில வீரர்கள், பயிற்சியாளர்களின் தேர்விலும் அவர் சொன்னதைத்தான் செய்தோம். ஆனால் வீரர்களின் தேர்வில் அவருடைய தலையீடு அதிகமாக இருந்தது என்றார். அத்துடன் வாசிம் ஜாஃபர் மீது மத ரீதியிலான குற்றச்சாட்டுகளும் எழுந்த காரணத்தால் சர்ச்சை எழுந்தது. 

இதையடுத்து இதற்கு விளக்கம் கொடுத்து வாசிம் ஜாஃபர் கூறியதாவது: இதெல்லாம் தீவிரமான குற்றச்சாட்டுகள். அதனால் தான் என் பக்கமுள்ள நியாயத்தைக் கூறுகிறேன். என்னுடைய ராஜிநாமாவுக்கான காரணத்தை முன்பே கூறிவிட்டேன். அதில் இப்போதும் உறுதியாக உள்ளேன். இதற்கு மத ரீதியில் குறை சொல்வதும் அதற்கு நான் விளக்கம் அளிப்பதும் சோகமான நிகழ்வாகும். நீண்ட நாள் விளையாடி, இந்திய அணியிலும் பங்கேற்ற பிறகும், இதுபோன்ற சிறிய விஷயங்களுக்கு நான் விளக்கம் அளிக்க வேண்டியுள்ளது. உத்தரகண்ட் அணியின் முழக்கத்தை நான் மாற்றியதாகக் குற்றம் சொல்கிறார்கள். ஜெய் ஹனுமான் என்று சொல்வதை கோ உத்தரகண்ட் என மாற்றினேன். ஏனெனில் அணியில் பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களும் உள்ளார்கள். பயிற்சி ஆட்டங்களின்போது மாதா ராணி கி ஜெய் என்பது அணி முழக்கமாக இருந்தது. சையத் முஷ்டாக் அலி போட்டிக்காக விளையாட பரோடா சென்றபோது நான் வீரர்களிடம் சொன்னேன், நாம் குறிப்பிட்ட மதத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. உத்தரகண்ட் மாநிலத்துக்காக விளையாடுகிறோம். எனவே கோ உத்தரகண்ட் அல்லது லெட்ஸ் டூ இட் ஃபார் உத்தரகண்ட் என்பது அணியின் முழக்கமாக இருக்க வேண்டும் என்றேன். விதர்பா அணியில் விளையாடியபோது அணியின் பயிற்சியாளர் சந்திரகாந்த் பண்டிட், கமான் விதர்பா என்று முழக்கமிடச் சொல்வார். அதனால் தான் அப்படிச் சொன்னேன். இதைப் பற்றி நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள். ஏனெனில் மைதானத்தில் நீங்கள் தான் இதைக் கூறுகிறீர்கள் என்று வீரர்களிடம் கூறினேன். இதை மத ரீதியாக மாற்ற முயன்றிருந்தால், இஸ்லாமிய முழக்கம் எதையாவது சொல்லச் சொல்லியிருப்பேன். மத ரீதியிலான முழக்கம் வேண்டாம் என்றுதான் வீரர்களிடம் சொன்னேன். இக்பால் அப்துல்லாவுக்கு ஆதரவாக நான் நடந்துகொண்டதாகவும் அவரை கேப்டன் ஆக்க முயன்றதாகவும் கூறுகிறார்கள். இது முற்றிலும் தவறு. ஜெய் பிஸ்டாவை கேப்டனாக்க நான் ஆசைப்பட்டேன். ஆனால் ரிஸ்வான் சம்ஷத் மற்றும் இதர தேர்வுக்குழுவினர் என்னிடம், நீங்கள் இக்பால் அப்துல்லாவை கேப்டன் ஆக்குங்கள், அவர் தான் மூத்த வீரர் என்றார்கள். அவர்களுடைய யோசனையை நான் ஏற்றுக்கொண்டேன் என்று விளக்கம் அளித்தார்.

மண்டியிடாத டி காக்: டி20 உலகக் கோப்பைப் போட்டியில் வெடித்த சர்ச்சை!

டி காக்
டி காக்

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் டி காக்கை முன்வைத்து பெரிய சர்ச்சை ஏற்பட்டது.

கருப்பர்களின் வாழ்க்கை முக்கியம் இயக்கத்துக்கு தனது ஆதரவைத் தெரிவிக்க மறுத்து மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணியின் விக்கெட் கீப்பர் பேட்டர் டி காக் விலகினார். எனினும் தன்னுடைய நிலையை விளக்கிய டி காக், தென்னாப்பிரிக்க அணியில் மீண்டும் விளையாடவுள்ளதாக அறிவித்தார்.

முக்கியமான கிரிக்கெட் ஆட்டங்களில் கிரிக்கெட் வீரர்கள் சில நொடிகள் மண்டியிட்டு கருப்பர்களின் வாழ்க்கை முக்கியம் என்கிற இயக்கத்துக்குத் தங்கள் ஆதரவை வெளிப்படுத்தி வருகிறார்கள். டி20 உலகக் கோப்பைப் போட்டியிலும் இந்திய அணி உள்பட பல அணிகள் ஆடுகளத்தில் சில நொடிகள் மண்டியிட்டும் வேறு விதங்களிலும் கருப்பர்களின் வாழ்க்கை முக்கியம் இயக்கத்துக்குத் தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினார்கள். அதேபோல மே.இ. தீவுகள் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஒரேவிதமாக அனைத்து வீரர்களும் சில நொடிகள் மண்டியிட்டு கருப்பர்களின் வாழ்க்கை முக்கியம் இயக்கத்துக்குத் தங்கள் ஆதரவைத் தெரிவிக்க வேண்டும் என்று தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் கட்டளையிட்டது. அனைத்து ஆட்டங்களிலும் வீரர்கள் ஒற்றுமையுடன் இதைச் செய்யவேண்டும் எனக் கூறியிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டி காக் அந்த ஆட்டத்திலிருந்து விலகினார். இதனால் கடும் விமர்சனத்துக்கு ஆளானார் டி காக்.

சில நாள்கள் மெளனத்துக்குப் பிறகு தனது விளக்கத்தை அவர் தெரிவித்தார். அறிக்கையில் டி காக் கூறியதாவது:

என்னுடைய அணியினரிடமும் என் நாட்டு ரசிகர்களிடமும் மன்னிப்பு கோருகிறேன். இதை ஒரு பிரச்னையாக்கவேண்டும் என நான் முயலவில்லை. இனப்பாகுபாடுக்கு எதிராகச் செயல்படுவதன் முக்கியத்துவத்தை உணர்கிறேன். ஒரு வீரராக நான் எந்த விதத்தில் முன்னுதாரணமாக இருக்கவேண்டும் என்பதையும் உணர்கிறேன். இனப்பாகுபாடுக்கு எதிரான நடவடிக்கையாக மண்டிடுவதன் மூலம் மற்றவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி மற்றவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த முடியும் என்றால் அதை மகிழ்ச்சியுடன் செய்ய விரும்புகிறேன். மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக நான் விளையாடாததால் யாரையும் அவமதிக்க விரும்பவில்லை. என்னுடைய குடும்பத்திலும் பல்வேறு இனத்தவர்கள் உள்ளார்கள். என் சகோதரிகள் கலப்பினத்தைச் சேர்ந்தவர்கள். என் வளர்ப்புத் தாய் கருப்பினத்தவர். எனவே நான் பிறந்ததிலிருந்தே, கருப்பர்களின் வாழ்க்கை முக்கியம் என்பதை அறிந்தவன். சர்வதேச இயக்கத்துக்காக அதை அறிந்தவன் அல்லன். தனி மனிதனை விடவும் அனைத்து மக்களுக்கு சம உரிமை முக்கியமானது. நம் அனைவருக்கும் உரிமை உண்டு, அவை முக்கியம் என்று சொல்லிக்கொடுக்கப்பட்டு வளர்ந்தவன். நாங்கள் என்ன செய்யவேண்டும் எனக் கட்டளை பிறப்பிக்கும்போது என் உரிமையை இழந்தவனாக ஆனேன். 

கிரிக்கெட் வாரியத்துடன் உணர்வுபூர்வமான விவாதம் நடைபெற்றது. அவர்களுடைய நோக்கம் பற்றிய புரிதல் அனைவருக்கும் உண்டு. இந்த விவாதம் முன்பே நடைபெற்றிருக்கலாம். ஆட்ட நாளன்று நடந்ததைத் தவிர்த்திருக்கலாம். நான் முன்னுதாரணமாக இருக்கவேண்டும் என்பதை ஏற்கிறேன். இதற்கு முன்பு, அவரவர் விருப்பப்படி நடந்துகொள்ளலாம் என்றார்கள். என்னுடைய எண்ணங்களை எனக்குள் வைத்துக்கொண்டேன். என்னுடைய தினசரி வாழ்க்கையில் அனைவரையும் நேசித்து வாழும் நான் எதற்காக சைகையின் மூலம் என் உணர்வை வெளிப்படுத்த வேண்டும்? இது எனக்குப் புரியவில்லை. எந்த ஒரு விவாதமும் இன்றி என்ன செய்யவேண்டும் என்று சொல்லும்போது அதன் அர்த்தத்தை இழப்பதாக எண்ணினேன். இனவெறியாளராக நான் இருந்திருந்தால் மண்டியிட்டு பொய்யாக நடந்துகொண்டிருக்க முடியும். அது தவறு. அது நல்ல சமூகத்தைக் கட்டமைக்காது. 

என்னுடன் வளர்ந்தவர்கள், விளையாடியவர்களுக்குத் தெரியும், நான் எப்படிப்பட்டவன்  என்று. முட்டாள், சுயநலக்காரர் என ஒரு கிரிக்கெட் வீரராக பல்வேறு விதமாக என்னை விமர்சித்துள்ளார்கள். அதெல்லாம் என்னைக் காயப்படுத்தியதில்லை. ஆனால் தவறான புரிதலால் இனவெறியாளர் எனும்போது அது என்னை மிகவும் காயப்படுத்துகிறது. என் குடும்பத்தையும் கர்ப்பமாக உள்ள என் மனைவியையும் காயப்படுத்தியுள்ளது. நான் இனவெறியாளன் அல்லன். என் மனத்துக்கு அது தெரியும். 

முக்கியமான ஆட்டத்தில் விளையாடச் செல்லும்போது நாங்கள் பின்பற்றவேண்டிய கட்டளைகள் சொல்லப்பட்டதால் அதிர்ச்சியடைந்தேன். பயிற்சி முகாம்கள், வலைப்பயிற்சிகள், ஜூம் கூட்டங்கள் என அனைத்தின் வழியாகவும் நம்முடைய நிலைப்பாடு தெரியும். என் அணி வீரர்களை விரும்புகிறேன். நாட்டுக்காக விளையாடுவதை விடவும் வேறு மகிழ்ச்சி எனக்கு இல்லை. போட்டி தொடங்குவதற்கு முன்பே இதைச் சரி செய்திருக்க வேண்டும். இதனால் நாட்டுக்கு வெற்றி தேடித்தரவேண்டிய பணியில் கவனம் செலுத்தியிருப்போம். நாங்கள் எப்போது உலகக் கோப்பைப் போட்டிக்குச் சென்றாலும் பரபரப்பு ஏற்படுகிறது. இது நியாயமில்லை. எனக்கு ஆதரவு அளிக்கும் அணி வீரர்களுக்கும் கேப்டனுக்கும் நன்றி. மக்கள் கவனித்திருக்க மாட்டார்கள். பவுமா அற்புதமான தலைவர் என்றார்.

அடுத்து நடைபெற்ற இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் அனைவருடைய கவனமும் டி காக்கின் மீது இருந்தது. கருப்பர்களின் வாழ்க்கை முக்கியம் இயக்கத்துக்கு எந்த விதத்தில் தனது ஆதரவை வெளிப்படுத்துவார் என்று. ஆட்டம் தொடங்கும் முன்பு, மற்ற வீரர்களுடன் இணைந்து மண்டியிட்டு, கருப்பர்களின் வாழ்க்கை முக்கியம் இயக்கத்துக்கான தனது ஆதரவை டி காக் வெளிப்படுத்தினார்.

முகமது ஷமியை இழிவுபடுத்திய ரசிகர்கள்: கொதித்தெழுந்த விராட் கோலி

கோலி - ஷமி
கோலி - ஷமி

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியாவை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியதின் மூலம் உலகக் கோப்பை வரலாற்றில் இந்தியாவுக்கு எதிராகத் தனது முதல் வெற்றியைப் பெற்றது பாகிஸ்தான்.

பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி தோல்வியடைந்ததற்கு முகமது ஷமியின் மோசமான பந்துவீச்சே காரணம் எனச் சமூகவலைத்தளங்களில் ரசிகர்கள் பலரும் அவரை இழிவுபடுத்தினார்கள். அந்த ஆட்டத்தில் 3.5 ஓவர்கள் வீசி 43 ரன்கள் கொடுத்தார் ஷமி. இந்தியப் பந்துவீச்சாளர்களில் அதிக ரன்களை கொடுத்தவர் அவர்தான்.

ஷமியின் இன்ஸ்டகிராம் பக்கத்தில் நூற்றுக்கணக்கான பேர் ஷமியைத் துரோகியாகச் சித்தரித்து மத ரீதியிலான பதிவுகள் எழுதியுள்ளார்கள். இந்திய அணிக்குத் துரோகம் செய்ததால் அவரை அணியிலிருந்து நீக்கவேண்டும் என்றும் எழுதி தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினார்கள். இதையடுத்து சச்சின் டெண்டுல்கர், ஷேவாக் உள்பட பிரபலங்கள் பலரும் ஷமிக்கு ஆதரவு தெரிவித்தார்கள். 

ஃபேஸ்புக் சமூகவலைத்தளத்தில் ஷமிக்கு எதிராகவும் அவரை இழிவுபடுத்தியும் எழுதப்பட்ட பதிவுகள் நீக்கப்பட்டன. ஷமிக்கு ஆதரவாக விராட் கோலி பேசி பாராட்டுகளைப் பெற்றார். செய்தியாளர் சந்திப்பில் ஷமி விவகாரம் குறித்து கோலி கூறியதாவது:

மதத்தை அடிப்படையாகக் கொண்டு ஒருவரைத் தாக்குவது மோசமானது. ஒரு குறிப்பிட்ட சம்பவம் பற்றி தன் கருத்தைச் சொல்ல அனைவருக்கும் உரிமை உள்ளது. ஆனால் மத ரீதியாக ஒருவரை பேதம் பார்ப்பதை என்னால் எண்ணிப் பார்க்க முடியவில்லை. தனி நபர்களாக நாங்கள் என்ன செய்கிறோம், நாங்கள் ஆடுகளத்தில் எவ்வளவு உழைக்கிறோம் என்று மக்களுக்குத் தெரிவதில்லை. கடந்த சில வருடங்களாக ஷமி பல ஆட்டங்களில் இந்தியாவுக்கு வெற்றி தேடித் தந்துள்ளார். இது அவர்களுக்குப் புரியாது. ஆட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவதில் பும்ராவுடன் இணைந்து எங்களுடைய பிரதான பந்துவீச்சாளராக ஷமி உள்ளார். நாட்டுக்கு விளையாடுவதில் ஷமிக்கு உள்ள ஆர்வத்தையும் அவருடைய சாதனைகளையும் புறந்தள்ளுபவர்களுக்காக என் வாழ்க்கையின் ஒரு நிமிடத்தைக்கூட வீணடிக்க விரும்பவில்லை. ஷமியும் அணி வீரர்களும் அதே மனநிலையில் தான் உள்ளார்கள். ஷமிக்கு 200 சதவீதம் ஆதரவு அளிக்கிறோம். அவரைத் தாக்கியவர்கள் மேலும் பலத்துடன் முயலலாம். அணியில் எங்களிடமுள்ள நட்பை, சகோதரப் பாசத்தை எதனாலும் அசைக்க முடியாது என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com