விளையாட்டு 2021

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-ஆவது டெஸ்டில் வென்ற இந்தியா, தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
விளையாட்டு 2021

ஜனவரி 

19: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-ஆவது டெஸ்டில் வென்ற இந்தியா, தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்த வெற்றியின் மூலம் பிரிஸ்பேனில் 32 ஆண்டுகள் தோல்வியே சந்திக்காத ஆஸ்திரேலியாவுக்கு தோல்வியைப் பரிசளித்தது இந்தியா.

30: கரோனா சூழல் காரணமாக ரஞ்சி கிரிக்கெட் போட்டியை ரத்து செய்தது பிசிசிஐ. போட்டியின் 87 ஆண்டுகால வரலாற்றில் இவ்வாறு ரத்து செய்யப்பட்டது இதுவே முதல் முறை.

பிப்ரவரி 

20: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் ஜப்பானின் நவோமி ஒசாகா - அமெரிக்காவின் ஜெனிஃபர் பிராடியை வீழ்த்தி தனது 4-ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார்.

21: ஆஸ்திரேலிய ஓபன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் - ரஷியாவின் டேனியல் மெத்வதேவை வென்று 9-ஆவது முறையாக இப்போட்டியில் சாம்பியன் ஆனார். இது அவரது 18-ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டம்.

ஏப்ரல் 

20: செஸ் விளையாட்டில் தமிழகத்தைச் சேர்ந்த அர்ஜுன் கல்யாண் (18), இந்தியாவின் 68-ஆவது கிராண்ட்மாஸ்டர் ஆனார்.

மே

4: ஐபிஎல் போட்டியில் பங்கேற்றிருந்த ரித்திமான் சாஹா, அமித் மிஸ்ரா ஆகியோருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து, முன்னெச்சரிக்கையாக 2021 சீசன் ஐபிஎல் போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது.

16: இத்தாலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயினின் ரஃபேல் நடால் - செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சை வீழ்த்தி, போட்டியில் 10-ஆவது முறையாக சாம்பியன் ஆனார். மேலும், "ஏடிபி மாஸ்டர்ஸ் 1000' பிரிவு போட்டிகளில் தனது 36-ஆவது பட்டத்தை வென்று ஜோகோவிச்சின் எண்ணிக்கையையும் சமன் செய்தார்.

23: முன்னாள் ஜூனியர் தேசிய மல்யுத்த சாம்பியனான சாகர் தங்கர் கொலை வழக்கில், பிரபல மல்யுத்த வீரர் சுஷீல் குமார் கைது செய்யப்பட்டார். மே 4-ஆம் தேதி தில்லி சத்ரசால் அரங்கத்தின் வெளியே சாகர் அடித்துக் கொல்லப்பட்டார்.


ஜூன்

13: பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் - கிரீஸின் ஸ்டெஃபானோஸ் சிட்சிபாûஸ வென்று சாம்பியன் ஆனார். இதன்
மூலம், ஓபன் எராவில் 4 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளிலும் குறைந்தது 2 முறை சாம்பியன் ஆன முதல் வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.

13:யூரோ கோப்பை கால்பந்து போட்டியில் ஃபின்லாந்துடனான ஆட்டத்தின்போது டென்மார்க் வீரர் கிறிஸ்டியன் எரிக்சன் மாரடைப்பு ஏற்பட்டு களத்தில் சரிந்தார். பின்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சைக்குப் பிறகு மீண்டார்.

23: முதல் முறையாக நடத்தப்பட்ட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் நியூஸிலாந்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி கோப்பை வென்றது.

30: செஸ் விளையாட்டில், இந்தியாவை பூர்விகமாகக் கொண்ட அமெரிக்கரான அபிமன்யு மிஸ்ரா, உலகின் மிகக் குறைந்த வயது கிராண்ட்மாஸ்டராகி (12 வயது, 4 மாதங்கள், 25 நாள்கள்) சாதனை படைத்தார்.

ஜூலை

11: விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச் - இத்தாலியின் மேட்டியோ பெரட்டினியை வீழ்த்தி, 6-ஆவது முறையாக விம்பிள்டன் பட்டம் வென்றார். மேலும், ஓபன் எராவில் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று ரோஜர் ஃபெடரர், ரஃபேல் நடால் ஆகியோரின் சாதனையை சமன் செய்தார்.

11: இந்திய அமெரிக்க இளம் வீரர் சமீர் பானர்ஜி - அமெரிக்காவின் விக்டர் லிலோவை வீழ்த்தி விம்பிள்டன் இளையோர் பிரிவில் பட்டம் வென்றார்.

24: டோக்கியோ ஒலிம்பிக் பளுதூக்குதலில் மகளிருக்கான 49 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் சாய்கோம் மீராபாய் சானு வெள்ளிப் பதக்கம் வென்றார். 2000 சிட்னி ஒலிம்பிக்கில் கர்னம் மல்லேஸ்வரி வெண்கலப் பதக்கம் வென்ற பிறகு, ஒலிம்பிக் பளுதூக்குதலில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் பதக்கம் இது.

ஆகஸ்ட் 

1: இந்திய பாட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து, டோக்கியோ ஒலிம்பிக்கில் சீனாவின் ஹி பிங் ஜியாவை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்றார். ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற அவர், தொடர்ந்து 2-ஆவது ஒலிம்பிக் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை, 2-ஆவது இந்தியர் ஆகிய சாதனைகளை எட்டினார்.

2:  இந்திய மகளிர் ஹாக்கி அணி ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக அரையிறுதி வரை முன்னேறி அசத்தியது.

5: டோக்கியோ ஒலிம்பிக் ஹாக்கியில் இந்திய ஆடவர் அணி 5-4 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்றது. இது ஒலிம்பிக் ஹாக்கியில் இந்தியாவுக்கு 41 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்த பதக்கம்.

6: இந்திய விளையாட்டுத் துறையில் மிக உயரிய விருதான "ராஜீவ் காந்தி கேல் ரத்னா' விருதின் பெயரை, "தியான் சந்த் கேல் ரத்னா' விருது என மாற்றி அறிவித்தார் பிரதமர் நரேந்திர மோடி.

7: டோக்கியோ ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் 87.58 மீட்டர் தொலைவு எறிந்து தங்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ரா, ஒலிம்பிக் தடகளத்தில் தங்கம் வென்ற முதல் இந்தியர், தனிநபர் பிரிவில் தங்கம் வென்ற 2-ஆவது இந்தியர் ஆகிய பெருமைகளைப் பெற்றார்.

8:டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை இந்தியா இதுவரை இல்லாத வகையில் 1 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என 7  பதக்கங்களுடன் நிறைவு செய்தது.

29:டோக்கியோ பாராலிம்பிக் டென்னிஸில் (கிளாஸ் 4) இந்திய வீராங்கனை பவீனா படேல் - சீனாவின் யிங் ஜெளவிடம் வீழ்ந்து வெள்ளி பெற்றார். இது அவரது முதல் ஒலிம்பிக் போட்டியாகும்.

31: டோக்கியோ பாராலிம்பிக்கில் தமிழக வீரர் மாரியப்பன் மற்றும் சரத் குமார் ஆகியோர் உயரம் தாண்டுதலில் (டி63 பிரிவு) முறையே வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கம் வென்றனர். 10 மீ ஏர் பிஸ்டல் (எஸ்ஹெச்1) பிரிவில் சிங்கராஜ் அதானா வெண்கலம் பெற்றார்.

செப்டம்பர் 

6: பாராலிம்பிக் போட்டியில் இந்தியா 5 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலம் என மொத்தமாக 19 பதக்கங்கள் பெற்றது. பாராலிம்பிக்கில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை இரட்டை இலக்கத்தை தொட்டது இது முதல் முறையாகும்.

11: அமெரிக்க ஓபன் டென்னிஸில் இங்கிலாந்தைச் சேர்ந்த இளம் வீராங்கனை எம்மா ரடுகானு (19), கனடா இளம் வீராங்கனை லெய்லா ஃபெர்னாண்டûஸ வீழ்த்தி சாம்பியன் ஆனார். ஓபன் எராவில் குவாலிஃபயர் ஒருவர் தகுதிச்சுற்றில் இருந்து முன்னேறி கோப்பை வென்றது இது முதல் முறை.

13: ரஷியாவின் டேனியல் மெத்வதேவ் - செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சை வீழ்த்தி அமெரிக்க ஓபன் சாம்பியன் ஆகி தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தைக் கைப்பற்றினார்.

16: டி20 உலகக் கோப்பை போட்டியுடன், இந்திய டி20 அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்தார்.

அக்டோபர் 

15: கரோனா சூழல் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டி, ஐக்கிய அரபு அமீரகத்தில் மீண்டும் நடத்தப்பட்ட நிலையில், அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் 4-ஆவது முறையாக சாம்பியன் ஆனது.

நவம்பர்

14: டி20 உலகக் கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூஸிலாந்தை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் ஆனது.

29: ஆர்ஜென்டீனா வீரர் லயோனல் மெஸ்ஸி, சிறந்த கால்பந்து வீரருக்கான "பேலன் தோர்' விருதை 7-ஆவது முறையாக வென்று சாதனை படைத்தார்.

டிசம்பர் 

4: இந்தியாவுக்கு எதிரான டெஸ்டில் 10 விக்கெட்டுகள் சாய்த்த நியூஸிலாந்து வீரர் அஜாஸ் படேல், அத்தகைய சாதனை படைத்த 3-ஆவது கிரிக்கெட்டர் என்ற சாதனையை எட்டினார்.

4: ஒடிஸாவில் நடைபெற்ற ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் ஆர்ஜென்டீனா 4-2 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தி 2-ஆவது முறையாக சாம்பியன் ஆனது. நடப்பு சாம்பியனாக இருந்த இந்தியாவை வீழ்த்தி பிரான்ஸ் வெண்கலம் பெற்றது.

5: டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் குரோஷியாவை 2-0 என்ற கணக்கில் வீழ்த்தி சாம்பியன் ஆனது ரஷியா.

8: இந்திய "ஒன் டே' அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விராட் கோலியை நீக்கிய பிசிசிஐ தேர்வுக் குழு, ரோஹித் சர்மாவை அந்தப் பொறுப்புக்கு நியமித்தது.

12: எஃப் ஒன் உலக சாம்பியன்ஷிப் கார் பந்தயத்தில் சாம்பியன் ஆன நெதர்லாந்து வீரர் மேக்ஸ் வெர்ஸ்டாபென், அந்தப் பெருமையைப் பெற்ற முதல் நெதர்லாந்து மற்றும் ரெட் புல் அணி வீரர் என்ற பெயரையும் பெற்றார்.

17: உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப்பில் நடப்பு சாம்பியனான இந்தியாவின் பி.வி.சிந்து தனது காலிறுதிச் சுற்றில் சீன தைபேயின் டாய் ஸூ யிங்கிடம் தோல்வி கண்டார்.

19: உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய வீரர் ஸ்ரீகாந்த், அப்போட்டியில் ஆடவர் பிரிவில் வெள்ளி வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com