தேசியம் 2021

ரூ.20,000 கோடிக்கும் அதிகமான மதிப்பு கொண்ட சென்ட்ரல் விஸ்டா திட்டத்துக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது. 
தேசியம் 2021


ஜனவரி

5.ரூ.20,000 கோடிக்கும் அதிகமான மதிப்பு கொண்ட சென்ட்ரல் விஸ்டா திட்டத்துக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது. 

8.மும்பை தாக்குதலுக்கு திட்டமிட்டதில் முக்கியப் பங்கு வகித்தவரும், லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பைச் சேர்ந்தவருமான ஸகி-உர்-ரஹ்மான் லக்விக்கு பயங்கரவாதத்துக்கு நிதியுதவி அளித்த வழக்கில் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து பாகிஸ்தான் பயங்கரவாதத் தடுப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

12.கடந்த ஆண்டு மத்திய அரசு நிறைவேற்றிய மூன்று வேளாண் சட்டங்களை அமல்படுத்துவதற்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. 

13.சுமார் ரூ.46,000 கோடி மதிப்பில் 83 இலகுரக தேஜஸ் போர் விமானங்களை வாங்க பாதுகாப்புத் துறைக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்தது.

16.இந்தியாவில் கரோனா தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டது. முதல் நாளில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மருத்துவப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

26.மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், குடியரசுத் தினத்தன்று தில்லியில் டிராக்டர் பேரணி மேற்கொண்டனர். அப்போது வன்முறை ஏற்பட்டு காவல்துறையினருக்கும் விவசாயிகளுக்கும் மோதல் ஏற்பட்டது. இந்த வன்முறையில் பொதுச் சொத்துகள் சேதப்படுத்தப்பட்டன.

பிப்ரவரி 

6.மத்திய ரிசர்வ் காவல் படையின் "எலைட் கோப்ரா' படைப் பிரிவில் முதல் முறையாக 34 பெண்கள் சேர்க்கப்பட்டனர்.

7.உத்தரகண்ட் மாநிலம், சமோலி மாவட்டத்தில் பனிப்பாறை உடைந்து பேரிடர் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 80-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். 200-க்கும் மேற்பட்டவர்களைக் காணவில்லை.

10.கிழக்கு லடாக்கில் உள்ள எல்லைக் கோட்டுப் பகுதியில் குவிக்கப்பட்டிருந்த இந்திய-சீனப் படைகளைத் திரும்பப் பெறும் நடவடிக்கைகள் தொடங்கின. 

11.ஒருவர் பார்வைத்திறன் இல்லாதவராகவோ, மாற்றுத்திறனாளியாகவோ இருப்பதால், அவர் நீதிபதியாக நியமிக்கப்படுவதற்குத் தகுதியற்றவராக ஆகிவிடமாட்டார் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

12.மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டத்தை ஆதரிப்பதற்கான வழிமுறைகளைக் கொண்டிருந்ததாகக் கூறப்படும் இணையவழி கையேட்டை (டூல்கிட்) சமூக ஊடகத்தில் பகிர்ந்து சதியில் ஈடுபட்டதாக பெங்களூரைச் சேர்ந்த திஷா ரவி (22) கைது செய்யப்பட்டார். அவர் மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

19.லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீனப் படைகள் இடையே மோதல் ஏற்பட்டு 8 மாதங்கள் கழிந்த நிலையில், அந்த மோதலில் தங்கள் நாட்டு ராணுவ வீரர்கள் உயிரிழந்ததை சீனா ஒப்புக்கொண்டது.

28.ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து இந்தியாவின் பிஎஸ்எல்வி-சி51 ராக்கெட் மூலம் முதல்முறையாக பிரேஸில் செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டது.

மார்ச்

9:உத்தரகண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் தனது பதவியை ராஜிநாமா செய்தார்.

10:ஹரியாணாவில் காங்கிரஸ் கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆளும் பாஜக அரசு தோற்கடித்தது.

10:உத்தரகண்டின் புதிய முதல்வராக கர்வால் எம்.பி. தீரத் சிங் ராவத் பொறுப்பேற்றார்.

26:மும்பையில் உள்ள சன்ரைஸ் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 கரோனா நோயாளிகள் உயிரிழந்தனர்.

ஏப்ரல்


4:சத்தீஸ்கர் மாநிலம், பஸ்தரில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்புப் படை வீரர்கள் 23 பேர் உயிரிழந்தனர்; 33 பேர் காயமடைந்தனர்.

5:ஊழல் புகாரில் சிக்கிய மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் பதவியை ராஜிநாமா செய்தார்.

24:உச்சநீதிமன்றத்தின் 48-ஆவது தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா பொறுப்பெற்றார்.

27:கேரளத்தில் சூரியமின்தகடு ஊழலில் சரிதா நாயருக்கு 6 ஆண்டுகள் சிறை, ரூ.40,000 அபராதம் விதித்து கோழிக்கோடு நீதிமன்றம் தீர்ப்பு.

மே


2:மேற்கு வங்கத்தில் 213 தொகுதிகளில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக (மே 5)  முதல்வரானார் திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி. கேரளத்தில் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி முன்னணி வெற்றி பெற்றது.

3:அஸ்ஸாமில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று காங்கிரஸிடம் இருந்து ஆட்சியைக் கைப்பற்றியது.

4:மேற்கு வங்கத்தின் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் நடந்த தேர்தலுக்குப் பிந்தைய வன்முறையில் இரு பெண்கள் உள்பட 14 பேர் உயிரிழந்தனர்.

5:மகாராஷ்டிரத்தில் மராத்தா சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது செல்லாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு.

9:ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டத்தில் ஏற்பட்ட சுரங்க விபத்தில் 10 பேர் பலியாகினர்.

28:கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு பிஎம்-கேர்ஸ் நிதியிலிருந்து ரூ.10 லட்சம் வழங்க வகை செய்யும் திட்டம் அறிவிப்பு.

ஜூன்


1:மாணவர்களின் நலனைக் கருத்தில்கொண்டு சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.

3:அரசை விமர்சித்த காரணத்துக்காக தேசத் துரோகச் சட்டத்தின் கீழ் 
பத்திரிகையாளர்களைக் கைது செய்யக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

7:நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக கரோனா தடுப்பூசி செலுத்தும் பொறுப்பை மத்திய அரசே ஏற்பதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.

22:வங்கிகளில் கடன் மோசடியில் ஈடுபட்டு வெளிநாடுகளுக்குத் தப்பிய தொழிலதிபர்கள் மெஹுல் சோக்ஸி, நீரவ் மோடி, விஜய் மல்லையா ஆகியோருக்குச் சொந்தமான ரூ.9,042 கோடி மதிப்பிலான சொத்துகள் பொதுத் துறை வங்கிகளிடம் ஒப்படைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.

24:முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனை உளவு வழக்கில் சிக்கவைத்த குற்றச்சாட்டில் ஓய்வுபெற்ற காவல் அதிகாரிகள் 18 பேர் மீது சிபிஐ முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது.

28:ஜம்மு-காஷ்மீர் விமான நிலையத்தில் உள்ள விமானப் படைத் தளத்தில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ட்ரோன்கள் மூலமாக இரட்டை வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தனர். ட்ரோன்கள் மூலமாக வெடிகுண்டுகளை வீசி பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது இதுவே முதல் முறை.

ஜூலை


4:தீரத் சிங் ராவத் ராஜிநாமாவை தொடர்ந்து, உத்தரகண்ட் மாநிலத்தின் 11-ஆவது முதல்வராக புஷ்கர் சிங் தாமி பதவியேற்றார்.

7:பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை விரிவாக்கப்பட்டது; 36 புதியவர்கள் உள்பட 43 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றனர். மொத்த அமைச்சர்களின் எண்ணிக்கை 77-ஆகவும், கேபினட் அமைச்சர்களின் எண்ணிக்கை 30-ஆகவும் அதிகரித்தது.

10:மக்கள்தொகை கட்டுப்பாடு வரைவு மசோதாவை உத்தர பிரதேச அரசு வெளியிட்டது. 2 குழந்தைகளுக்கு அதிகமாகப் பெற்ற நபர்கள் அரசு வேலைக்கு விண்ணப்பிக்க முடியாது; உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட முடியாது எனப் பல்வேறு கட்டுப்பாடுகள் அதில் இடம்பெற்றன.

10:ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதக் குழுக்களுக்கு உதவியதாக எழுந்த குற்றச்சாட்டில் 11 அரசு ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

12:இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (எல்ஐசி) பங்குகளை பங்குச் சந்தையில் வெளியிட மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. 

18:பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக நவ்ஜோத் சிங் சித்துவை அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி நியமித்தார்.

28:எடியூரப்பா ராஜிநாமாவை தொடர்ந்து கர்நாடகத்தின் 30-ஆவது 
முதல்வராக பசவராஜ் பொம்மை பதவியேற்றார்.

29:ஜார்க்கண்டில் கூடுதல் மாவட்ட நீதிபதி உத்தம் ஆனந்த், நடைப்பயிற்சி மேற்கொண்டபோது ஆட்டோ ஏற்றி கொல்லப்பட்டார்.

ஆகஸ்ட்


6:கிழக்கு லடாக் எல்லையின் கோக்ரா பகுதியில் குவிக்கப்பட்டிருந்த படைகளை பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இந்தியாவும் சீனாவும் விலக்கிக் கொண்டன.

7:அமெரிக்காவைச் சேர்ந்த ஜான்சன்& ஜான்சன் நிறுவனத்தின் ஒற்றை தவணை கரோனா தடுப்பூசிக்கு இந்தியாவில் அவசரகால ஒப்புதல் வழங்கப்பட்டது. நாட்டில் பயன்பாட்டுக்கு ஒப்புதல் பெற்ற தடுப்பூசிகளின் எண்ணிக்கை 5-ஆக அதிகரித்தது.

10:ஏழை மக்களுக்கான இலவச சமையல் எரிவாயு திட்டத்தின் (உஜ்வாலா) 2-ஆம் கட்டத்தை பிரதமர் மோடி தொடக்கிவைத்தார்.

14:இந்திய பிரிவினையின்போது நிகழ்ந்த மக்களின் போராட்டங்களையும், தியாகங்களையும் நினைவுகூரும் வகையில் ஆகஸ்ட் 14-ஆம் தேதியானது "பிரிவினைக் கொடுமைகள் நினைவு தினமாக' அனுசரிக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார்.

18:சுனந்தா புஷ்கர் உயிரிழந்த வழக்கிலிருந்து அவருடைய கணவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான சசி தரூரை தில்லி சிறப்பு நீதிமன்றம் விடுவித்தது.

23:தேசிய கல்விக் கொள்கையை (2020) நடைமுறைப்படுத்திய முதல் மாநிலம் என்ற சிறப்பை கர்நாடகம் பெற்றது.

23:மத்திய அரசுக்குச் சொந்தமான ரூ.6 லட்சம் கோடி மதிப்பிலான சொத்துகளை 4 ஆண்டுகளில் பணமாக்கும் திட்டத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடக்கிவைத்தார்.

31:உச்சநீதிமன்ற வரலாற்றில் முதல்முறையாக ஒரே நாளில் 3 பெண்கள் உள்பட

9 புதிய நீதிபதிகள் பதவியேற்றனர். புதிய நீதிபதிகளில் ஒருவரான நீதிபதி பி.வி.நாகரத்னா, உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் தலைமை நீதிபதியாகப் பணியாற்ற வாய்ப்புள்ளது.

31:ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றிய பிறகு, தலிபான்களுக்கும் இந்திய அரசுத் தரப்புக்கும் இடையே முதல்முறையாக அதிகாரபூர்வ சந்திப்பு நடைபெற்றது. கத்தாருக்கான இந்திய தூதர், தலிபான் மூத்த தலைவரை தோஹாவில் சந்தித்துப் பேசினார்.

செப்டம்பர்


3:கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் 12 வயது சிறுவன் நிபா தீநுண்மிக்கு பலியானார். 

8:தேசிய பாதுகாப்பு அகாதெமியில் (என்டிஏ) பயிற்சி பெற்ற பெண்களை ஆயுதப் படையில் சேர்ப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது.

9:இந்தியாவில் கார் உற்பத்தி ஆலைகளை மூடப் போவதாக அமெரிக்க நிறுவனமான ஃபோர்டு அறிவித்தது. 

13:குஜராத் மாநிலத்தின் 17-ஆவது முதல்வராக பூபேந்திர படேல் பதவியேற்றார். நிகழ்ச்சியில் குஜராத் ஆளுநர் ஆச்சார்ய தேவ்விரத், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.

18:காங்கிரஸ் மேலிடத்தால் தொடர்ச்சியாக தான் அவமதிக்கப்பட்டு வருவதாகக் கூறி, பஞ்சாப் முதல்வர் பதவியை அமரீந்தர் சிங் ராஜிநாமா செய்தார். அவர் நான்கரை ஆண்டுகள் அந்தப் பதவியில் நீடித்தார்.

20:பஞ்சாபின் 16-ஆவது முதல்வராக காங்கிரஸ் தலைவர் சரண்ஜித் சிங் சன்னி பொறுப்பேற்றார். பஞ்சாபில் தலித் ஒருவர் முதல்வரானது இதுவே முதல்முறையாகும்.

24:அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பொறுப்பேற்ற பின்னர், முதன்முறையாக அவரை வாஷிங்டனில் பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். அப்போது இரு நாடுகளிடையேயான பரஸ்பர நட்பை வலுப்படுத்தும் அதேவேளையில் கரோனா, பருவநிலை மாற்றம் ஆகிய பிரச்னைகளை இணைந்து எதிர்கொள்வது என அவர்கள் முடிவு செய்தனர். 

27:ஆயுஷ்மான் பாரத் எண்ம திட்டத்தை பிரதமர் மோடி தொடக்கிவைத்தார். இந்தத் திட்டத்தின்கீழ், பயனாளிகள் சிறப்பான, மலிவான சிகிச்சை வசதியை பெறும் வகையில், அவர்களின் உடல்நல பிரச்னைகள் அனைத்தையும் உள்ளடக்கிய எண்ம சுகாதார அட்டை விநியோகிக்கப்படுகிறது.

30:விமானப் படைத் தலைவராக வி.ஆர். சௌத்ரி பொறுப்பேற்றார்.

அக்டோபர்


2:மும்பை கடற்பகுதியில் சொகுசு கப்பலில் போதைப் பொருள் பயன்படுத்தியதாக ஹிந்தி நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உள்பட 8 பேர்  கைது செய்யப்பட்டனர்.

3:உத்தர பிரதேசத்தின் லக்கீம்பூர் கெரியில் விவசாயிகளின் பேரணி வன்முறையாக மாறியதில் 4 விவசாயிகள் உள்ளிட்ட 8 பேர் உயிரிழந்தனர். 15 பேர் காயமடைந்தனர்.

9:லக்கீம்பூர் கெரி வன்முறை வழக்கு தொடர்பாக மத்திய உள்துறை 
இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா கைது செய்யப்பட்டார்.

13:நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கவும் ரூ.100 லட்சம் கோடி மதிப்பில் உத்வேகம் (கதிசக்தி) திட்டத்தை பிரதமர் மோடி தொடக்கிவைத்தார்.

16:கேரளத்தில் பெய்த இடைவிடாத மழை காரணமாக நிலச்சரிவில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். 18 பேர் மாயமாகினர். கேரளத்தில் கோட்டயம், இடுக்கி மாவட்டங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது.

19:வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு காரணமாக இந்தியாவிலும், நேபாளத்திலும் 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழக்க நேர்ந்தது. குறிப்பாக உத்தரகண்டில் 46 பேர் பலியாகினர். 11 பேர் மாயமாகினர்.

21:இந்தியாவில் 100 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு சாதனை படைக்கப்பட்டது. இதனை இந்திய அறிவியலுக்கு கிடைத்த வெற்றி என்று வர்ணித்த பிரதமர் மோடி, பொதுமக்களின் கூட்டு மனப்பான்மையால் இந்த இலக்கை அடைய முயன்றதாக குறிப்பிட்டார்.

நவம்பர்


2:பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் காங்கிரஸிலிருந்து விலகி பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்ற தனிக் கட்சியைத் தொடங்கினார்.

3:பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு முறையே ரூ.5, ரூ.10 வீதம் குறைத்தது. இதேபோல பாஜக ஆளும் மாநில அரசுகளும் எரிபொருள் மீதான வரியைக் குறைத்தன.

10:ஆப்கானிஸ்தான் பயங்கரவாதத்தை ஊக்குவிக்க பயன்படுத்தப்படக் கூடாது என்ற இலக்கை அடையும் நோக்கில், இந்தியாவில் நடைபெற்ற 8 நாடுகளின் தேசிய பாதுகாப்பு தலைவர்கள் சூளுரைத்தனர்.

13:மகாராஷ்டிரத்தின் கட்சிரோலி மாவட்டம் மார்டின்டோலா வனப் பகுதியில் பெண்கள் உள்பட 26  மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

13:மணிப்பூரில் சுராசந்த்பூர் மாவட்டம் திங்காட் பகுதியில் 46 அசாம் ரைபிள் படைத் தளபதி கர்னல் விப்லவ் திரிபாதி, அவரது மனைவி, மகன், 4 ராணுவ வீரர்கள் ஊடுருவல்காரர்களால் கொலை செய்யப்பட்டனர். மியான்மர் எல்லை அருகே நடைபெற்ற இந்தத் தாக்குதலுக்கு மக்கள் விடுதலைப் படையும், மணிப்பூர் நாகா மக்கள் முன்னணியும் இணைந்து பொறுப்பேற்றன.

16:குருநானக் தேவ் ஜெயந்தியையொட்டி, நவ. 17 முதல் பாகிஸ்தானில் அமைந்துள்ள கர்தார்பூர் சாகிப் குருத்வாரா வழித்தடத்தை திறப்பதாக மத்திய அரசு அறிவித்தது.

19:சர்ச்சைக்குரிய 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி தெரிவித்தார். சிறப்பான முயற்சிகள் மேற்கொண்ட போதிலும் விவசாயிகளின் ஒரு பிரிவினரை சமாதானப்படுத்த இயலவில்லை என்று அவர் தெரிவித்தார்.

29:நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியில் விவாதத்துக்கு இடமின்றி வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா 2021 தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாள் அமர்வில் இந்த மசோதாவை மத்திய அரசு பட்டியலிட்டது.

29:முந்தைய மழைக்கால கூட்டத்தொடரில் ஒழுங்கீனமாக நடந்துகொண்டதாக குளிர்கால கூட்டத்தொடர் முழுவதும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்கள் 12 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

டிசம்பர்


2:இந்தியாவில் முதல்முறையாக கர்நாடகத்தில் இருவருக்கு உருமாறிய ஒமைக்ரான் வகை தீநுண்மி பாதிப்பு உறுதியானது.

4:நாகாலாந்து மான் மாவட்டத்தில் தீவிரவாதிகள் என்று தவறாக கருதி ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 14 அப்பாவி மக்கள் உயிரிழந்தனர்.

8:மூன்று வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற்ற பின்பும் நடைபெற்று வந்த போராட்டத்தை முடித்துக் கொள்வதாக சம்யுக்த கிசான் மோர்ச்சா அறிவித்தது.

13:உத்தர பிரதேச மாநிலம், வாராணசியில் உள்ள காசி விஸ்வநாதர் திருக்கோயிலில் ரூ.339 கோடியில் புதிய வளாகத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார்.

17:இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு 100-ஐ கடந்தது.

18:அணு ஆயுதங்களை கொண்டு சென்று தாக்கக்கூடிய அக்னி-பி-ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்தது இந்தியா.

21: வாக்காளர் அட்டை- ஆதார் எண்ணை இணைக்க வகை செய்யும் தேர்தல் சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்.

21:பெண்களின் திருமண வயதை 21-ஆக உயர்த்தும் மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு, நாடாளுமன்ற நிலைக் குழுவுக்கு அனுப்பப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com