தேசியம் 2022

தில்லி இந்தியா கேட் பகுதியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் ஹோலோகிராம் சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
தேசியம் 2022

ஜனவரி

2:கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு வழங்க வசதியாக, பொருளாதார ரீதியாக பின்தங்கிய முற்படுத்தப்பட்ட வகுப்பினரின் ஆண்டு குடும்ப வருமான உச்சவரம்பை ரூ.8 லட்சமாக வரையறுப்பது நியாயமானதாக இருக்கும் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு குழு அறிக்கை சமர்ப்பித்தது.

5:பஞ்சாப் மாநிலம் ஃபெரோஸ்பூருக்கு பிரதமர் மோடி செல்லவிருந்தார். அப்போது அவரின் கார் மற்றும் பாதுகாப்பு வாகனங்கள் சென்ற சாலையை விவசாயிகள் சிலர் மறித்தனர். இதனால் பிரதமர் நரேந்திர மோடி சுமார் 15 முதல் 20 நிமிஷங்கள் காரில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. பின்னர் அவரின் ஃபெரோஸ்பூர் பயணம் ரத்து செய்யப்பட்டது.

5:நாட்டில் ஒமைக்ரான் வகை கரோனா தீநுண்மியால் முதல் உயிரிழப்பு ஏற்பட்டதாக மத்திய அரசு அறிவித்தது. உயிரிழந்தவர் ராஜஸ்தானைச் சேர்ந்த 73 வயது முதியவர் ஆவார்.

20:நீட் இளநிலை, முதுநிலை மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கான அனைத்து இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு அரசியலமைப்புச் சட்டப்படி செல்லுபடியாகும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

23:தில்லி இந்தியா கேட் பகுதியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் ஹோலோகிராம் சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

27:மத்திய அரசிடம் இருந்த ஏர் இந்தியா விமான நிறுவனம், டாடா குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்டது. 

பிப்ரவரி

11:வகுப்பறைக்குள் மத அடையாளங்களை வெளிப்படுத்தும் காவித் துண்டு, ஹிஜாப் போன்றவற்றை மாணவ-மாணவிகள் அணியக் கூடாது என்று கர்நாடக உயர்நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு உத்தரவிட்டது.

15:மாட்டுத் தீவன ஊழல் தொடர்பான 5-ஆவது வழக்கில் பிகார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் உள்பட 75 பேரை குற்றவாளிகள் என சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

17:மகாராஷ்டிர மாநிலம், மும்பை-நவி மும்பை இடையே இந்தியாவின் முதல் நீர்வழி டாக்ஸி சேவை தொடங்கப்பட்டது.

18:கடந்த 2008-ஆம் ஆண்டு குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 38 பேருக்கு மரண தண்டனையும், 11 பேருக்கு வாழ்நாள் சிறைத் தண்டனையும் விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

23:பணமோசடி வழக்கில் மகாராஷ்டிர முன்னாள் அமைச்சரும், தேசியவாத காங்கிரஸை சேர்ந்தவருமான நவாப் மாலிக்கை அமலாக்கத் துறை கைது செய்தது.

25:கோ-லொகேஷன் வசதி தொடர்பான முறைகேட்டில் தேசிய பங்குச்சந்தை முன்னாள் அதிகாரி ஆனந்த் சுப்ரமணியனை சிபிஐ கைது செய்தது.

மார்ச்

6:பணமோசடி வழக்கில் தேசிய பங்குச்சந்தை முன்னாள் நிர்வாக இயக்குநர் சித்ரா ராமகிருஷ்ணாவை அமலாக்கத் துறை கைது செய்தது.

7:உக்ரைன் மீது ரஷியாவின் தாக்குதலையடுத்து உக்ரைனிலிருந்து இந்தியர்கள் விமானப் படை விமானம் மூலம் தில்லி அருகேயுள்ள காஜியாபாத் விமானப் படை தளத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.

10:உத்தர பிரதேசம், உத்தரகண்ட், கோவா மற்றும் மணிப்பூரில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக ஆட்சியைத் தக்கவைத்தது. பஞ்சாபில் முதல்முறையாக ஆம் ஆத்மி ஆட்சியமைத்தது.

12:2021-22-ஆம் ஆண்டுக்கான வருங்கால வைப்பு நிதியின் வட்டி விகிதத்தை 8.5%-இல் இருந்து 
8.1%-ஆக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு குறைத்தது. இது கடந்த 40 ஆண்டுகளில் நிர்ணயிக்கப்பட்ட குறைந்த வட்டி விகிதமாகும்.

21:மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் சேர்க்கை பெற 12-ஆம் வகுப்பு மதிப்பெண் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது என்று பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்தது. அந்தப் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் சேர மாணவர்கள் நுழைவுத் தேர்வு எழுத வேண்டும்.

21:மணிப்பூர் முதல்வராக தொடர்ந்து 2-ஆவது முறை பிரேன் சிங் பதவியேற்றார்.

25:உத்தர பிரதேச முதல்வராக தொடர்ந்து 2-ஆவது முறை யோகி ஆதித்யநாத் பதவியேற்றார்.

28:கோவா முதல்வராக பிரமோத் சாவந்த் 2-ஆவது முறை பதவியேற்றார்.

ஏப்ரல்

1:முதல்முறையாக மாநிலங்களவையில் பாஜக உறுப்பினர்களின் எண்ணிக்கை 100-ஐ எட்டியது.

4:ஆந்திரத்தில் புதிதாக 13 மாவட்டங்கள் உதயமாகின.

8:"வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டத் திருத்தம் 2020', அரசியலமைப்புச் சட்டப்படி செல்லுபடியாகும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

10:மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலராக மூன்றாவது முறை சீதாராம் யெச்சூரி தேர்ந்தெடுக்கப்பட்டார். அக்கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினராக முதல்முறையாக தலித் சமூகத்தைச் சேர்ந்த ராம்சந்திர டோம் தேர்வு செய்யப்பட்டார்.

18:ராணுவ தலைமைத் தளபதியாக மனோஜ் பாண்டே பொறுப்பேற்றார்.

மே 

4:பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையில், ரெப்போ வட்டி விகிதத்தை 4 சதவீதத்தில் இருந்து 4.40 சதவீதமாக உயர்த்தியது ரிசர்வ் வங்கி.

7:14.2 கிலோ எடையுள்ள வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்டதால், பல நகரங்களில்  சிலிண்டர் விலை ரூ.1,000-ஐ கடந்தது.

13:தில்லியில் மெட்ரோ ரயில் நிலையம் அருகே வர்த்தக கட்டடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 27 பேர் உயிரிழந்தனர்.

17:மொத்த விலை அடிப்படையிலான பணவீக்கம் முன்னெப்போதும் இல்லாத வகையில் 15.08 சதவீதமாக உயர்ந்தது.

19:ஜிஎஸ்டி கவுன்சிலின் பரிந்துரைகள் மத்திய, மாநில அரசுகளைக் கட்டுப்படுத்தாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு.

25:பயங்கரவாதத்துக்கு நிதி திரட்டிய வழக்கில் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்குக்கு என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் ஆயுள் சிறைத் தண்டனை விதிப்பு.

27:சொத்துக் குவிப்பு வழக்கில், ஹரியாணா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சௌதாலாவுக்கு 4 ஆண்டுகள் கடுங்காவல் சிறையும் ரூ.50 லட்சம் அபராதமும் விதித்து, சிபிஐ சிறப்பு நீதின்றம் தீர்ப்பு.

29:பஞ்சாபி பாடகரும் அரசியல்வாதியுமான சித்து மூúஸவாலா மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவருக்கான போலீஸ் பாதுகாப்பு விலக்கப்பட்ட மறுநாள் இந்த சம்பவம் நிகழ்ந்தது.

ஜூன்

5:உத்தரகண்ட் மாநிலம், உத்தரகாசியில் யமுனோத்ரி கோயிலுக்குச் செல்லும் வழியில், பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து 25 பக்தர்கள் உயிரிழப்பு.

8:ரெப்போ வட்டி வகிதம் மேலும் 50 அடிப்படை புள்ளிகள் உயர்த்தப்பட்டு, 4.9 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டது.

16:முப்படைகளில் 4 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் வீரர்களைத் தேர்வு செய்யும் அக்னிபத் திட்டத்துக்கு எதிராக பல மாநிலங்களில் இளைஞர்கள் நடத்திய போராட்டங்களில் வன்முறை வெடித்தது.

29:சிவசேனையில் ஏற்பட்ட பிளவைத் தொடர்ந்து, மகாராஷ்டிர முதல்வர் பதவியில் இருந்து உத்தவ் தாக்கரே விலகல்.

30:பாஜக ஆதரவுடன், மகாராஷ்டிரத்தின் 20-ஆவது முதல்வராக சிவசேனை அதிருப்தி அணி தலைவர் ஏக்நாத் ஷிண்டே பதவியேற்பு.

ஜூலை

1:ஒருமுறை மட்டும் பயன்படுத்தக் கூடிய குறிப்பிட்ட வகை பிளாஸ்டிக் பொருள்கள் உற்பத்தி, விற்பனை மற்றும் பயன்பாட்டுக்கு மத்திய அரசு தடை விதிப்பு.

6:பிரபல இசையமைப்பாளர் இளையராஜா, புகழ்பெற்ற விளையாட்டு வீராங்கனை பி.டி.உஷா ஆகியோர் மாநிலங்களவை எம்.பி.க்களாக நியமனம்.

17:இந்தியாவில் செலுத்தப்பட்ட கரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 200 கோடியை கடந்தது.

21:குடியரசுத் தலைவர் தேர்தலில், பாஜக கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்மு 64 சதவீத வாக்குகளுடன் வெற்றி. நாட்டின் முதல் பழங்குடியின குடியரசுத் தலைவர் என்ற பெருமை அவருக்குச் சொந்தமானது. அவரை எதிர்த்துப் போட்டியிட்ட யஷ்வந்த் சின்ஹா சுமார் 36 சதவீத வாக்குகள் பெற்றார்.

25:நாட்டின் 15-ஆவது குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு பதவியேற்பு. பிரதிபா பாட்டீலுக்கு பின்னர் இப்பதவியை அலங்கரிக்கும் 2-ஆவது பெண் முர்மு ஆவார்.

ஆகஸ்ட்

3:தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதா-2019ஐ மக்களவையில் இருந்து மத்திய அரசு திரும்பப் பெற்றது. விரிவான மசோதா விரைவில் தாக்கல் செய்யப்படுமென அறிவிப்பு.

6:குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளர் ஜகதீப் தன்கர் வெற்றி. மொத்தம் பதிவான 710 வாக்குகளில் 528 வாக்குகள் தன்கருக்கு கிடைத்தன. அவரை எதிர்த்துப் போட்டியிட்ட மார்கரெட் ஆல்வா 182 வாக்குகள் பெற்றார்.

10:பிகாரில் பாஜக கூட்டணியில் இருந்து விலகிய ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதீஷ் குமார், ஆர்ஜேடி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் கைகோத்து, மாநில முதல்வராக மீண்டும் பதவியேற்பு.

11:நாட்டின் 14-ஆவது குடியரசு துணைத் தலைவராக ஜகதீப் தன்கர் பதவியேற்பு.

15:பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு குற்றவாளிகள் 11 பேர், குஜராத் அரசின் மன்னிப்புக் கொள்கையின்கீழ் சிறையில் இருந்து விடுவிப்பு.

26:காங்கிரஸில் இருந்து மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் விலகல்.

28:நொய்டாவில் விதிகளை மீறி கட்டப்பட்ட இரட்டை அடுக்குமாடி குடியிருப்பு உச்சநீதிமன்ற உத்தரவின்படி தகர்ப்பு. இதற்காக 3,700 கிலோ வெடிமருந்து பயன்படுத்தப்பட்டது.

செப்டம்பர்

7:காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் (பாரத் ஜோடோ யாத்ரா) கன்னியாகுமரியில் தொடங்கியது. பல்வேறு மாநிலங்கள் வழியாக காஷ்மீரில் இந்தப் பயணம் நிறைவடையவுள்ளது.

8:தில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகை முதல் இந்தியா கேட் வரை புதிதாகக் கட்டமைக்கப்பட்ட "ராஜபாதை'யின் பெயர் "கடமைப் பாதை' என மாற்றம். இந்தியா கேட் பகுதியில் சுதந்திரப் போராட்ட வீரரான சுபாஷ் சந்திர போஸின் 28 அடி உயர சிலையைப் பிரதமர் மோடி திறந்துவைத்தார்.

16:ஆப்பிரிக்க நாடான நமீபியாவில் இருந்து மத்திய பிரதேசத்துக்குக் கொண்டுவரப்பட்ட 8 சிவிங்கிப் புலிகளை (சீட்டா) குனோ தேசிய 
பூங்காவில் அமைக்கப்பட்ட தற்காலிக வாழ்விடங்களில் பிரதமர் மோடி திறந்துவிட்டார்.

26:காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய மூத்த தலைவரும் ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வருமான குலாம் நபி ஆசாத், ஜனநாயக சுதந்திர கட்சியைத் தொடங்கினார்.

28:இந்தியாவின் அட்டர்னி ஜெனரலாக தமிழகத்தைச் சேர்ந்த மூத்த வழக்குரைஞர் ஆர்.வேங்கடரமணி 3 ஆண்டு பதவிக் காலத்துக்கு நியமனம்.

28:நாடு முழுவதும் நடத்தப்பட்ட பெரும் சோதனைகளுக்குப் பிறகு பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை விதிப்பு.

28:2-ஆவது முப்படைத் தலைமைத் தளபதியாக லெப்டினென்ட் ஜெனரல் அனில் செளஹான் நியமனம்.


அக்டோபர்

1:நாட்டில் 5ஜி சேவையைத் தொடக்கி வைத்தார் பிரதமர் மோடி. முதல்கட்டமாக தில்லி, சென்னை, மும்பை, கொல்கத்தா உள்பட 13 நகரங்களில் 
5ஜி சேவை தொடக்கம். 

19:காங்கிரஸ் கட்சித் தலைவர் தேர்தலில் 90 சதவீத வாக்குகளைப் பெற்று மல்லிகார்ஜுன கார்கே வெற்றி பெற்றார். 24 ஆண்டுகளில் அப்பதவியை வகிக்கவுள்ள நேரு குடும்பத்தைச் சேராத முதல் நபர் அவரே. அவரை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்தார் மூத்த தலைவர் சசி தரூர்.

23:பிரிட்டனின் 36 செயற்கைக்கோள்களை எல்விஎம்-3 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது இஸ்ரோ. அந்த ராக்கெட் முதல்முறையாக வர்த்தக நோக்கில் பயன்படுத்தப்பட்டது.

30:குஜராத்தின் மோர்பி பகுதியில் மச்சு நதியின் மீது பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட நூற்றாண்டு பழைமை வாய்ந்த தொங்கு பாலம் அறுந்து விபத்துக்குள்ளானதில் 130-க்கும் அதிகமானோர் பலி. 

நவம்பர்

15:இந்திய ராணுவ வரலாற்றில் முதல் முறையாக 6 பெண் அதிகாரிகள் பாதுகாப்பு சேவைகளுக்கான கல்லூரி (டிஎஸ்எஸ்சி) தேர்வில் தேர்ச்சி.
16: காசி-தமிழகம் இடையேயான பழங்கால கலாசார தொடர்பை வெளிப்படுத்தும் வகையிலான "காசி தமிழ் சங்கமம்' நிகழ்வை உத்தர பிரதேச மாநிலம், வாரணாசியில் பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார். ஒரு மாதம் நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழகத்திலிருந்து ஏராளமானோர் பங்கேற்றனர்.

16.ஜி-20 தலைமைப் பொறுப்பு இந்தியாவிடம் ஒப்படைப்பு.

18:இந்தியாவில் தனியார் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட முதல் ராக்கெட் மூலமாக 3 செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தம். 

டிசம்பர்

1.ஜி 20 தலைமைப் பொறுப்பை இந்தியா அதிகாரபூர்வமாக ஏற்றது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் டிசம்பர் மாதத்துக்கான தலைமைப் பொறுப்பையும் இந்தியா ஏற்றது.

7:தில்லி மாநகராட்சித் தேர்தலில் பாஜகவை வீழ்த்தி ஆம் ஆத்மி கட்சி வெற்றி.

8:குஜராத்தில் தொடர்ந்து 7-ஆவது முறையாக ஆட்சியைக் கைப்பற்றி பாஜக வரலாற்று வெற்றி. ஹிமாசலில் பாஜகவிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றியது காங்கிரஸ். 

9:அருணாசலின் தவாங் செக்டாரில் உள்ள யாங்ட்ஸி என்ற இடத்தில் சீன ராணுவத்தினரின் அத்துமீறலை இந்திய ராணுவத்தினர் முறியடித்தனர். இருதரப்பிலும் வீரர்கள் சிலருக்கு காயம் ஏற்பட்டது.

11:ஹிமாசல் முதல்வராக சுக்விந்தர் சிங் சுக்கு பதவியேற்பு.

12:குஜராத் முதல்வராக மீண்டும் பதவியேற்றார் பூபேந்திர படேல்.

25:குமரியில் செப்.7-இல் தொடங்கிய ராகுலின் இந்திய  ஒற்றுமை நடைப்பயணம் தில்லியை சென்றடைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com