உலகம் 2022

ராணுவ ஆட்சி நடைபெற்று வரும் மியான்மரில் ஜனநாயக கட்சித் தலைவர் ஆங் சான் சூகிக்கு முறைகேடு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
உலகம் 2022

ஜனவரி

  • 10:ராணுவ ஆட்சி நடைபெற்று வரும் மியான்மரில் ஜனநாயக கட்சித் தலைவர் ஆங் சான் சூகிக்கு முறைகேடு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதுதவிர, அவர் மீது தொடரப்பட்ட பல்வேறு வழக்குகளில் பின்னர் அடுத்தடுத்து சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அக்டோபர் 22-ஆம் தேதி நிலவரப்படி, ஆங் சான் சூகிக்கு மொத்தம் 26 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
     
  • 19:வடக்கு அமெரிக்காவில் முதல்முறையாகத் தொடங்கப்பட்ட 5ஜி தொழில்நுட்ப சேவை விமானங்களின் உயரம் காட்டும் கருவியில் குளறுபடியை ஏற்படுத்தலாம் என்று அமெரிக்க விமானப் போக்குவரத்து ஒழுங்காற்று அமைப்பு எச்சரிக்கை விடுத்தது. அதையடுத்து, இந்தியன் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட பல்வேறு விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் அமெரிக்காவுக்கான தங்களது விமானங்களை ரத்து செய்தன.
     
  • 22:கிழக்கு உக்ரைனில் தங்களது ஆதரவு கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள டொனட்ஸ்க், லுஹான்ஸ்க் ஆகிய பிரதேசங்களை தனி நாடுகளாக அங்கீகரிப்பதாக ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் அறிவித்தார். மேலும், அந்தப் பகுதிகளில் "அமைதி காக்கும் பணியில்' ஈடுபட வீரர்களை அனுப்புமாறு ரஷியப் படைகளுக்கு அவர் உத்தரவிட்டார்.


பிப்ரவரி

  • 24:உக்ரைன் மீது தரைவழி, வான்வழி, கடல்வழியாக ரஷியா படையெடுத்தது. கீவ் நகரைக் கைப்பற்றும் நோக்கில், பெலாரஸ் நாட்டிலிருந்தும் உக்ரைனுக்குள் ரஷியா தாக்குதல் நடத்தியது. அந்தப் படையெடுப்பை, கிழக்கு உக்ரைனில் நடைபெற்று வரும் "இன அழிப்பை' தடுத்து நிறுத்துவதற்காகவும், உக்ரைன் அரசு மற்றும் ராணுவத்தில் உள்ள நாஜி சக்திகளை அழிப்பதற்காகவும் மேற்கொள்ளப்பட்ட "சிறப்பு ராணுவ நடவடிக்கை' என்று புதின் கூறினார்.
     
  • 27: உக்ரைன் போர் விவகாரத்தில், ரஷியா மீது ஐரோப்பிய யூனியன் பல்வேறு பொருளாதாரத் தடைகளை அறிவித்தது.


மார்ச்

  • 1:உக்ரைனின் கார்கிவ் பகுதியில் ரஷியா நடத்திய எறிகுண்டு தாக்குதலில் இந்திய மாணவர் நவீன் உயிரிழந்தார்.
     
  • 2:நேட்டோ உறுப்பு நாடான போலந்து எல்லைக்கு நெருக்கத்தில் உள்ள லவீவ் பகுதியில் ராணுவ பயிற்சி முகாமில் ரஷியா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 35 பேர் உயிரிழந்தனர்.
     
  • 20:ரஷியாவால் முற்றுகையிடப்பட்டிருந்த உக்ரைனின் மரியுபோல் நகரில், பொதுமக்கள் சுமார் 400 பேர் தஞ்சமடைந்திருந்த கலையரங்கில் ரஷியா ஏவுகணை தாக்குதல் நடத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
     
  • 21:சீனாவில் உள்நாட்டு பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில், அதிலிருந்த 132 பேரும் பலியாகினர்.


ஏப்ரல்

  • 1:பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் வலுவடைந்ததைத் தொடர்ந்து, அப்போதைய அதிபர் கோத்தபய ராஜபட்ச அங்கு அவசரநிலை பிரகடனம் செய்தார்.
     
  • 8: உக்ரைனின் டான்பாஸ் பகுதியில் பொதுமக்கள் நிறைந்திருந்த ரயில் நிலையத்தின் மீது ரஷியா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 50 பேர் உயிரிழந்தனர்.
     
  • 9: பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அப்போதைய பிரதமர் இம்ரானுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தில் அவர் தோல்வியடைந்தார்.
     
  • 11:பாகிஸ்தானின் 23-ஆவது பிரதமராக முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃபின் சகோதரர் ஷாபாஸ் ஷெரீஃப் தேர்வு செய்யப்பட்டார்.
     
  • 21: தங்களால் 2 மாதங்களாக முற்றுகையிடப்பட்டிருந்த உக்ரைனின் மரியுபோல் நகரம் "விடுவிக்கப்பட்டு'விட்டதாக ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் அறிவித்தார். எனினும், அந்த நகரில் எஞ்சியிருந்த உக்ரைன் படையினர் அந்த நகரின் சுரங்கங்கள் நிறைந்த அúஸாவ் இரும்பு ஆலையில் அரணமைத்து பதுங்கினர்.

ஜூன்

  • 22:ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சுமார் 1,000 பேர் உயிரிழந்தனர்.
     
  • 24: அமெரிக்காவில் கருக்கலைப்புக்கு சட்டப் பாதுகாப்பு அளித்து உச்சநீதிமன்றம் 50 ஆண்டுகளுக்கு முன்னர் பிறப்பித்திருந்த உத்தரவை, அதே நீதிமன்றம் ரத்து செய்தது சர்வதேச அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது.


ஜூலை

  • 6:பிரிட்டனில் பல்வேறு முறைகேடு புகார்களில் சிக்கி, ஆளும் கட்சி எம்.பி.க்களின் அதிருப்திக்குள்ளான பிரதமர் போரிஸ் ஜான்ஸன் தனது பதவியை ராஜிநாமா செய்தார்.
     
  • 8:ஜப்பானில் தொடர்ந்து செல்வாக்குடன் இருந்த முன்னாள் பிரதமர் ஷின்úஸா அபே, தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
     
  • 9: இலங்கையில் அரசு எதிர்ப்புப் போராட்டம் உச்சகட்டத்தை எட்டி, அதிபர் மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் நுழைந்தனர். அதற்கு முன்னதாகவே, அப்போதைய அதிபர் கோத்தபய ராஜபட்ச நாட்டைவிட்டு வெளியேறினார்.
     
  • 14:இலங்கை அதிபர் பதவியிலிருந்து கோத்தபய ராஜபட்ச அதிகாரபூர்வமாக பதவி விலகினார்.
     
  • 20: இலங்கையின் புதிய இடைக்கால அதிபராக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தேர்ந்தெடுக்கப்பட்டார்.
     


ஆகஸ்ட்

  • 2: தாங்கள் உரிமை கோரும் சர்ச்சைக்குரிய தைவானுக்கு அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபைத் தலைவர் நான்சி பெலோசி அரசுமுறை பயணம் சென்றதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
     
  • 2:ஆப்கன் தலைநகர் காபூலில் பதுங்கியிருந்த அல்-காய்தா தலைவரும் இரட்டை கோபுரத் தாக்குதலுக்கு சதித் திட்டம் தீட்டியவருமான அய்மான் அல்-ஜாவஹிரி, அதிநவீன ஆளில்லா விமானத்தின் மூலம் அமெரிக்கா நடத்திய துல்லியத் தாக்குதலில் கொல்லப்பட்டார்.
     


செப்டம்பர்

  • 5:போரிஸ் ஜான்ஸன் ராஜிநாமாவைத் தொடர்ந்து பிரிட்டனின் புதிய பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்காக ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சிக்குள் நடந்த போட்டியில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனக்கைத் தோற்கடித்து விட்டு, அப்போதைய வெளியுறவுத் துறை அமைச்சர் லிஸ் டிரஸ் வெற்றி பெற்றார்.


அக்டோபர்

  • 8: கடந்த 2014-ஆம் ஆண்டில் ரஷியாவால் இணைத்துக்கொள்ளப்பட்ட உக்ரைன் தீபகற்பத்துக்கும் ரஷியாவுக்கும் இடையிலான கடல்வழிப் பாலத்தின்மீது நடத்தப்பட்ட லாரி குண்டு தாக்குதலில் அந்தப் பாலம் சேதமடைந்தது.
     
  • 20: பிரிட்டன் பிரதமர் லிஸ் டிரஸ்ஸின் "மினி பட்ஜெட்' அறிவிப்பைத் தொடர்ந்து அந்த நாட்டின் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியைச் சந்தித்ததைத் தொடர்ந்து, பிரதமர் பதவியை ஏற்ற வெறும் 44 நாள்களில் அவர் அந்தப் பதவியை ராஜிநாமா செய்தார்.
     
  • 25: பிரிட்டன் வரலாற்றில் முதல்முறையாக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, ஹிந்து மதத்தைப் பின்பற்றும், வெள்ளை இனத்தவர் அல்லாத முதல் பிரதமராக ரிஷி சுனக் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
     


நவம்பர்

  • 3:போராட்ட ஊர்வலத்தின்போது பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சென்றுகொண்டிருந்த கன்டெய்னர் வாகனத்தை நோக்கி நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் அவர் காயத்துடன் உயிர் தப்பினார்.


டிசம்பர்

  • 4: ஈரானில் கலாசார காவலர்களால் கைது செய்யப்பட்ட மாஷா அமீனி (22) என்ற பெண் காவலில் உயிரிழந்ததைத் தொடர்ந்து அரசுக்கு எதிராக போராட்டம் தொடங்கி இரண்டரை மாதங்கள் ஆன நிலையில், அந்த காவல் பிரிவைக் கலைப்பதாக அரசு அறிவித்தது.
     
  • 4:சீனாவில் கடுமையான கரோனா கட்டுப்பாடுகளை எதிர்த்து நடைபெற்ற அபூர்வமான போராட்டங்களுக்குப் பிறகு, கட்டாய கரோனா பரிசோதனை உத்தரவை திரும்பப் பெற்றது. தொடர்ந்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதன் விளைவாக அந்த நாட்டில் மீண்டும் புதிய கரோனா பேரலை எழுந்து உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
     
  • 12:ஈரான் போராட்டத்தின்போது பாதுகாப்புப் படையினர் இருவரை கத்தியால் குத்திக் கொன்றதாக, மஜிக்ரெஸா ரஹ்னவார்ட் (23) என்பவரை அதிகாரிகள் பொதுமக்கள் முன்னிலையில் கிரேன் இயந்திரம் மூலம் தூக்கிலிட்டனர். போராட்டம் தொடர்பாக தூக்கிலிடப்பட்ட இரண்டாவது இளைஞர் இவர்.
     
  • 26:நேபாள பிரதமராக புஷ்ப கமல் தாஹால் என்ற பிரசண்டா பதவியேற்றார்; மூன்று துணைப் பிரதமர்கள் பொறுப்பேற்பு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com