கரோனா இரண்டாம் அலை: நினைவுகளிலிருந்து கற்றதும் பெற்றதும்

மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அரசின் தினசரி செயல்பாடுகளில் நீதிமன்றம் இந்தளவுக்கு குறுக்கீட்டு நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தது இதுவே முதல் முறை.
கரோனா இரண்டாம் அலை: நினைவுகளிலிருந்து கற்றதும் பெற்றதும்

கரோனா இரண்டாம் அலை சமயத்தில் மத்திய அரசின் மீது உச்ச நீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித்திருந்தது. ஒரே வாரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை உச்சத்தை தொட்ட நிலையில், நாட்டின் உயர் நீதிமன்றங்கள் மத்திய அரசின் மீது கடும் விமரிசனங்கள் மேற்கொண்டன.

மோசமான விளைவுகளை ஏற்படுத்திய இரண்டாம் அலை

கடந்த ஏப்ரல் 22ஆம், இரண்டாம் அலையை எப்படி எதிர்கொண்டு வருகிறது என்பது குறித்து பதிலளிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. "பேரிடர் கால சூழலை இந்தியா சந்தித்துள்ளது" என அப்போது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த எஸ். ஏ. பாப்டே கருத்து தெரிவித்திருந்தார். பெருந்தொற்று காரணமாக தங்களுக்கு நெருக்கமான உறவுகளை இழந்தவர்களின் அழுகைக் குரல்கள் நாடு முழுவதும் எதிரொலித்துக் கொண்டிருந்தன.

முதல் அலையை ஒப்பிடுகையில் இரண்டாம் அலையின் தாக்கம் சற்று அதிகமாகவே இருந்தன. வரலாறு காணாத அளவில் உயிரிழப்புகள் பதிவாகியிருந்தன. கரோனா பரவ தொடங்கிய காலத்திலிருந்து மரணம் அடைந்தவர்களில் ஐந்தில் மூவர் கரோனா இரண்டாம் அலையின் போதுதான் உயிரிழந்திருக்கின்றனர். அதாவது, இரண்டாம் அலையின்போது மட்டும் 2 லட்சம் பேர் உயிரிழந்தனர். சராசரியாக ஒரு நாளுக்கு 2,000 உயிரிழப்புகள் பதிவாகி இருந்தது. 

மக்களின் பாதுகாப்பை உறுதி செய்த நீதிமன்ற குறுக்கீடுகள்

நிலைமை இந்த அளவுக்கு மோசமாக செல்வதற்கு, மத்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காததே காரணம் என எதிர்கட்சிகள் குற்றம்சாட்டின. "கரோனா இரண்டாவது அலை வந்தால் அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதை முன்கூட்டியே திட்டமிடாமல் கடந்த 12லிருந்து 14 மாதங்கள் வரை என்ன செய்து கொண்டிருந்தீர்கள். பெருந்தொற்றை பொறுத்தவரை அந்த சமயத்தில் மட்டும் நடவடிக்கைகளை எடுக்க கூடாது. அது போதுமானதாக இருக்காது" என சென்னை உயர் நீதிமன்றமே சரமாரி கேள்வி எழுப்பியிருந்தது.

மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அரசின் தினசரி செயல்பாடுகளில் நீதிமன்றம் இந்தளவுக்கு குறுக்கீட்டு நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தது இதுவே முதல் முறை. பல சுகாதார பேரிடர்களை நாடு சந்தித்த போதிலும், இம்மாதிரியான அசாதாரண சூழல் ஏற்படவே இல்லை. இருப்பினும், கரோனா இரண்டாம் அலை நாடு முழுவதும் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருந்த நேரத்தில் கூட ஐபிஎல் போட்டிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.

ஐபிஎல் போட்டிகளும் தேர்தல் பொதுக்கூட்டங்களும்

பல்வேறு வீரர்கள், போட்டிகளிலிலிருந்து வெளியேறிய நிலையில், நிலைமை கைவிட்டு போனபோதுதான் போட்டிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. அதே சூழ்நிலையில்தான், ஐந்து மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட்டன. மக்கள் மீது சிறதளவும் கவலைக் கொள்ளாத அரசியல் கட்சிகள், மாபெரும் பொதுக் கூட்டங்களை ஏற்பாடு செய்திருந்தது. 

"தேர்தல் ஆணையத்தின் அலுவலர்கள் மீது ஏன் கொலை வழக்குகள் பதிவு செய்யக் கூடாது. கரோனா இரண்டாம் அலைக்கு முழு காரணம் தேர்தல் ஆணையமே" என அப்போது சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சீவ் பானர்ஜி கேள்வி எழுப்பும் அளவுக்கு கரோனா விதிகள் மீறப்பட்டிருந்தது. 

கரோனா சூழல் காரணமாக, பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்ள மாட்டேன் என ராகுல் காந்தி அறிவித்திருந்தார். தற்போதைய சூழலில் பொதுக் கூட்டங்களை ஏற்பாடு செய்வதால் வரும் விளைவுகளை ஆழமாக யோசித்து மற்ற அரசியல் கட்சிகளும் இதில் முடிவு எடுக்க வேண்டும் ராகுல் காந்தி கோரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து, மற்ற அரசியல் கட்சிகளும் பொதுக் கூட்டங்கள தவிர்க்க தொடங்கின.

தோல்வி அடைந்த அரசின் நிர்வாகம்

கலங்காது கண்டவினைக்கட் டுளங்காது
தூக்கம் கடிந்து செயல் - குறள்

அதாவது, முடிவு செய்து செய்யவிருக்கும் ஒரு பணியினை மேற்கொள்ளும் போது திடமனதுடனும் சோம்பல் கொள்ளாது காலதாமதமின்றி உடனடியாகச் செய்திடல் வேண்டும். ஆனால், தடுப்பூசி திட்டத்தில் அரசின் சுணக்கமான செயல்பாடுகள் காரணமாகவே மக்கள் இன்னுக்குள்ளாக நேர்ந்தது. 

ஆரம்பத்தில், 45 வயதுக்கு மேலானவர்களுக்கு மட்டுமே கரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்பட்டுவந்தது. 18 முதல் 44 வயதுடையவர்கள், பணம் செலுத்தி தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டிய சூழல் இருந்தது. ஆனால், எதிர்கட்சிகளின் அழுத்தம், உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டுக்கு பிறகே, தடுப்பூசி கொள்கை மாற்றியமைக்கப்பட்டது. 
 
ஒரு பிரச்னை வருவதற்கு முன்பே அதன் தாக்கத்தை கணித்து, முன்கூட்டியே தயாராக இருந்திருக்க வேண்டும். அதேபோல், விஞ்ஞானிகளிடமிருந்து முறையான ஆலோசனைகளை பெற்று கவனமாக இருந்திருக்க வேண்டும். இதற்கு நேர்மாறாக, மத்திய அரசால் நியமிக்கட்டப்பட்ட ஆலோசனைக் குழுவில் இடம்பெற்ற விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்தும், எந்தவிதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.

கும்ப மேளாவுக்கு அனுமதி வழங்கப்பட்டதையடுத்து, கரோனா வழிகாட்டுதல்களை பறக்க விட்ட ஆயிரக்கணக்கான மக்கள் புனித நீரில் நீராடிய காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் விளைவாக, உத்தரப் பிரதேசத்தில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்கள் நாதியற்று புதைக்கப்பட்ட புகைப்படங்களும் வெளியாகியன.

ஆபத்தை உணராத தலைமை

2021ஆம் ஆண்டு மார்ச் மாதம், கரோனா பெருந்தொற்று இறுதி கட்டத்தில் உள்ளதாக அப்போது மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த ஹர்ஷ்வர்தன் தெரிவித்திருந்தார். முதல் அலைக்கு பிறகு, கரோனா பாதிப்பு குறைந்த நிலையில், தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரப்படுத்தியிருக்க வேண்டிய சமயத்தில், அதன் ஏற்றுமதிக்கு அனுமதி வழங்கப்பட்டது.

இரண்டாம் அலை தொடங்குவதற்கு முன்பே, கரோனாவை வென்றுவிட்டதாக பிரதமர் மோடி அறிவித்திருந்தார். இரண்டாம் அலையை கணிக்காததன் காரணமாகவே, இப்படிப்பட்ட விளைவுகளை சந்திக்க நேர்ந்தது என சொன்னால் அது மிகையாகாது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com