தனிமனித சுதந்திரத்தை அச்சுறுத்தும் பெகாஸஸ்

தொழில்நுட்பத்தின் வளர்ச்சியில் வேவு பார்க்கும் முறை மாறியுள்ளது. நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட் போன்களே, நமக்கு எதிரான ஆயுதங்களாக மாறியுள்ளன.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
2 min read

இந்தாண்டு, உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கிய முக்கிய சம்பவங்களில் ஒன்று பெகாஸஸ் உளவு விவகாரம். உலகம் எப்படி கண்காணிப்பு வளையத்தில் சிக்கியுள்ளது என்பதை அது வெளிப்படையாக அம்பலப்படுத்தியுள்ளது. பல்வேறு உலக நாடுகள் பதில் அளிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. 

பத்து பிரதமர்கள், மூன்று அதிபர்கள், மொராக்கோவின் மன்னர், உலக  சுகாதார அமைப்பின் தலைவர், ரஷியா நாட்டின் கோடீஸ்வரர் என வேவு  பார்க்கப்பட்டோர் அல்லது வேவு பார்ப்பதற்கான இலக்கில் இருந்தவர்கள் என  பெகாசஸ் பட்டியல் நீண்டுகொண்டே செல்கின்றன.

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன், இராக் அதிபர் பர்ஹம் சாலி, தென்னாப்பிரிக்கா அதிபர் சைரில் ராமோஃபோசா, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், எகிப்து பிரதமர் முஸ்தபா மட்பெளலி, மொராக்கோ பிரதமர் சாத் எட்டின் எல் அத்மானி ஆகியோரின் எண்கள் வேவு பார்ப்பதற்கான பட்டியலில் இருந்துள்ளது என தி வயர் இணையதளம் செய்தி வெளியிட்டிருந்தது.

இஸ்ரேல் நாட்டின் என்எஸ்ஓ என்ற நிறுவனம் தயாரித்த பெகாசஸ் என்ற மென்பொருள் மூலம் உலகத் தலைவர்கள் வேவு பார்க்கப்பட்டதாக குற்றம்சாட்டப்படுகிறது. இந்த விவகாரத்தை முன்வைத்து, நாடாளுமன்ற மழைக்கால கூட்ட தொடர் முழுவதையுமே எதிர்க்கட்சிகள் முடக்கின. 

இதுகுறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. பெகாஸஸ் விவகாரத்தில் சுதந்திரமான விசாரணையை மேற்கொள்ள, ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.வி. ரவீந்திரன் தலைமையில் மூன்று பேர் நிபுணர் குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்துள்ளது.

தொழில்நுட்பத்தின் வளர்ச்சியில் வேவு பார்க்கும் முறை மாறியுள்ளது. நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட் போன்களே, நமக்கு எதிரான ஆயுதங்களாக மாறியுள்ளன.

முன்பு போல, குறிப்பிட இடத்திற்குச் சென்று அவர்களின் உரையாடல்களைப் பதிவு செய்ய ஒட்டுக் கேட்கும் சாதனங்களை வைக்க வேண்டாம். எஸ்எம்எஸ், இ-மெயில் மூலம் வேவு பார்ப்பதற்கான லிங்க் அனுப்பப்படும். அது என்ன என்று தெரியாதவர்கள், அதை கிளிக்  செய்துவிட்டால் இலக்கின் அத்தனை தகவல்களும் மெசேஜ்களும் யார் யாரிடம் தொடர்பு கொண்டுள்ளோம் குறித்த விவரங்களும், ஜிபிஎஸ் மூலம் நாம் எங்கிருக்கிறோம் என்ற தகவல்களும் திருடப்படும்.

தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியின் காரணமாக, வேவு பார்ப்பதற்கான லிங்க்கை நாம் கிளிக்கூட செய்யாமலேயே நாம் ஹேக் செய்யப்படலாம். மிகவும் பாதுகாப்பான ஐ போன்கள்கூட ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தி  வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. 

ஆனால், வேவு பார்த்ததற்கான ஆதாரங்கள், ஐ போன்களில் மட்டுமே இருந்துள்ளது. இதுகுறித்த ஆதாரங்களை ஒரு வருடத்திற்கு மேலாக, ஆண்ட்ராய்டு போன்கள் சேமித்து வைத்திருப்பதில்லை. இதற்கு மத்தியில், என்எஸ்ஒ நிறுவனத்திற்கு எதிராக ஆப்பிள் நிறுவனம் அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

அனைத்து செயலிகளையும் உடனடியாக அப்டேட் செய்வதன் மூலம் ஹேக் செய்வதிலிருந்து பாதுகாத்து கொள்ள வாய்ப்புள்ளதாக நிபுணர்கள்  கூறுகின்றனர். அதேபோல், குகூள் ப்ளே ஸ்டோர், ஆப்பிள் ஆப் ஸ்டோ ர் ஆகியவற்றின் மூலமாக மட்டுமே செயலிகளைப் பதிவிறக்க வேண்டும் என நிபுணர்கள் ஆலோசனைகள் கூறுகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com