நியூட்ரினோ ஆய்வுத் திட்டம்: மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிடுமா? கவிஞர் வைரமுத்து கேள்வி

நியூட்ரினோ ஆய்வுத் திட்டம் குறித்து மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிடுமா என்று கவிஞர் வைரமுத்து கேள்வி எழுப்பியுள்ளார்.

நியூட்ரினோ ஆய்வுத் திட்டம் குறித்து மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிடுமா என்று கவிஞர் வைரமுத்து கேள்வி எழுப்பியுள்ளார்.
 தேனி மாவட்டம், தேவாரம் அருகே பொட்டிப்புரம் அம்பரப்பர் மலையில் நியூட்ரினோ ஆய்வுத் திட்டம் தொடங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மதிமுக பொதுச் செயலர் வைகோ கடந்த மார்ச் 31-ஆம் தேதி மதுரையில் இருந்து நடை பயண விழிப்புணர்வு பிரசாரத்தை தொடங்கினார். வைகோ தலைமையிலான நடை பயண பிரசாரக் குழுவினர் ஆண்டிபட்டியில் இருந்து செவ்வாய்க்கிழமை மாலை தேனியை வந்தடைந்தனர்.
   பின்னர், தேனியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் வைகோ பேசியது: நியூட்ரினோ ஆய்வுத் திட்டத்தால் முல்லைப் பெரியாறு அணை, இடுக்கி அணை மற்றும் தேனி மாவட்ட அணைகளுக்கும், நீர்வழித் தடங்களுக்கும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த ஆய்வுத் திட்டம் அணுக் கழிவுகளை கொண்டு வந்து கொட்டுவதற்கான ஏற்பாடாகத்தான் உள்ளது. முல்லைப் பெரியாறு அணை உரிமை மீட்பு போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றது போல, நியூட்ரினோ ஆய்வுத் திட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட வீட்டுக்கு ஒருவர் முன்வர வேண்டும். நமது மண்ணின் உரிமையையும், சந்ததிகளையும் காப்பாற்ற அணி திரள வேண்டும் என்றார் அவர்.
கூட்டத்தில் வைகோவுக்கு பாராட்டு தெரிவித்து கவிஞர் வைரமுத்து பேசியது:   8 கோடி ஆண்டுக்கு முந்தைய பழமையுடைய மேற்குத் தொடர்ச்சி மலையின் வன வளத்தையும், மழை வளத்தையும் தரும் மேற்குத் தொடர்ச்சி மலையை நியூட்ரினோ ஆய்வுக்கு ஏன் தேர்வு செய்ய வேண்டும். நியூட்ரினோ ஆய்வுத் திட்டத்திற்கு ரூ. 1,500 கோடி ஒதுக்கீடு செய்யும் அரசு மக்களின் அடிப்படை தேவைக்கும், உணவு உற்பத்திக்கும், வேலை வாய்ப்பிற்கும் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதா?. வளர்ந்து விட்ட நாடுகளின் அணுக் கழிவுகளை கொட்டுவதற்காக இத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்ற சந்தேகத்திற்கு பதிலுண்டா? நியூட்ரினோ ஆய்வகத்தில் பொறுத்தப்படும் 50 ஆயிரம் டன் எடையுள்ள மின் காந்த கருவியை குளிர்விப்பதற்கு எவ்வளவு தண்ணீர் பயன்படுத்தப்படும். 
எங்கிருந்து தண்ணீர் எடுக்கப்படும். நியூட்ரினோ ஆய்வு குறித்து மத்திய அரசு வெள்ளை அறிக்கை  வெளியிட தயாராக உள்ளதா? என்றார் அவர்.

ஏப்.5-இல் நடை பயணம் ஒத்திவைப்பு
முன்னதாக, ஆண்டிபட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, மத்திய அரசுக்கு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் எண்ணம் இல்லை. கர்நாடக அரசு மேகதாது அணை கட்டும் திட்டத்திற்கு இடையூறு ஏற்படும் என்பதால் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசு மறுக்கிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி திமுக சார்பில் ஏப்.5-ஆம் தேதி நடைபெற உள்ள வேலைநிறுத்தப் போராட்டத்தில் மதிமுக பங்கேற்கும். இந்தப் போராட்டத்தில் பங்கேற்பதற்காக நியூட்ரினோ எதிர்ப்பு பிரசாரப் பயணம் ஏப்.5-ஆம் தேதி ஒரு நாள் மட்டும் ஒத்திவைக்கப்படும். ஏப்.6-ஆம் தேதி நடை பயணம் மீண்டும் தொடங்கும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com